Tuesday, December 14, 2010

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? புதைந்துள்ள மர்மங்கள்...


8 வது முறையாக பெட்ரோல் விலையேற்றம். ஒவ்வொரு முறை விலை ஏற்றத்தின் போதும் எதிர்கட்சிகள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்துவார்கள் பின்பு அரசு அதைப்பற்றி முடிவு சொல்லும் போது இது தேவையானது சர்வதேச சந்தையில் விலை உயர்வு அதனால் பெட்ரோல் விலை உயர்வு என அறிவிப்பார்கள் இது அனைவருக்கும் தெரிந்தது. இதைப்பற்றி முபமையாக தெரிந்து கொள்ளும் ஆவலில் நண்பரிடம் கேட்டேன் அவர் துக்ளக் இதழில் ஓர் கட்டுரை இதைப்பற்றி வந்து இருக்கு என எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். அக்கட்டுரை உங்களுக்காக...

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?

எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

நன்றி : துக்ளக் இதழ் 

---------------------------------------------------------------------------

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

Monday, December 13, 2010

எனக்கு வடை கிடைச்சிருச்சு...

நேற்று மாலை 6 மணியளவில் எனது வலைப்பூ திடீர் என காணவில்லை. தீடீர் அதிர்ச்சி என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர்களை தொலை பேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன்.

பின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சொல்லி விட்டு நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தகவலை சொன்னேன். நானும், மனைவியும் பல உதவிப்பக்கங்களை தேடிக்கொண்டு இருந்தோம். நண்பர்களிடம் இருந்து அழைப்பும், சாட்டில் நண்பர்கள் நிறைய லிங்க்கொடுத்து இங்கெல்லாம் பாருங்க என்றனர். அனைத்தையும் படித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். மின்தமிழ் குழுமம், பன்புடன் குழுமம் இரண்டிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன் நண்பர் தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் நிச்சயம் காலை கிடைத்து விடும் என்றனர்.

நான் செய்த மிகப்பெரிய தவறு Backup எடுத்து வைக்கவில்லை. அதனால் மிக டென்சனாக இருந்தது.

காலை அலுவலகம் வந்ததும் ஒரு அரை மணி நேரம் தேடினேன் என்ன செய்வது என்று கூகுளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 9.45க்கு நண்பர் தொடர்பு கொண்டு உங்க வலைப்பூ வேலை செய்கிறது என்றார். மிக சந்தோசமாக இருந்தது. எனது நிறைய பதிவுகள் நிறைய இடத்தில் படித்து அதை தெரிந்தவர்களிடம் அது உண்மைதான் என்று கேட்ட பின் தான் பதிவிடுவேன். எல்லாம் போச்சே என்று இருக்கும் போது மீண்டும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

அதற்காக எனக்கு தொலைபேசியிலும், சாட்டிலும் நண்பர்கள் எனக்காக இரவு வரை உதவி செய்த அனைத்து நட்புக்களுக்கும் என் நன்றி...

யாரையும் நான் பார்த்தது கூட இல்லை ஆனால் அனைவரும் செய்த உதவி மகத்தானது.. நன்றி நண்பர்களே..

நண்பர்களே இந்த அனுபவத்தின் மூலம் அறிவது வாரம் ஒரு முறை வேண்டாம் தினமும் பதிவிட்ட உடன் ஒரு பேக்அப் எடுப்பது நல்லது. எடுத்து வெச்சுக்குங்க ரொம்ப உதவியாக இருக்கும்..

குறிப்பு: நான் எனக்கு உதவிய நண்பர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்னை தொடர்பு கொண்டு உதவிய நண்பர்கள் என்னில் அடங்கா யாராவது ஒரு பேரை விட்டு விட்டால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும் அதனால் பேரை குறிப்பிடவில்லை தவறாக எடுத்துக்கவேண்டாம்... ஆனால் பேக்அப் மட்டும் மறக்காம எடுத்துக்குங்க...

---------------------------------------------------------------------------
வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

காமத்தன்மையை அதிகரிக்கும் புடலங்காய்

 

இயற்கை மருத்துவத்தின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். எனது பதிவுகளில் அதிகம் நாம் தினமும் உண்னும் உணவுகளில் என்ன விதமான நன்மைகள் இருக்கின்றன என்று எனது பதிவுகளில் எழுதி வருகிறேன். எனக்கு பிடிச்சமான விசயமாக இருந்தாலும் இதை நண்பர்களிடம் கொண்டு சேர்க்கும் போது மனநிம்மதி அளிக்கிறது. அந்த வகையில் இன்று புடலங்காய்.



புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..

உள்ள சத்துக்கள் 

உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

பயன்கள்...

இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகையினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும். 

உடம்பின் அழலையைப் போக்கும். 

தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.

எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். 

வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். 

வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது.

இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்....


-------------------------------------------------------------------------------------

இந்த வாரம் தமிழ்மனம் டாப் 20ல் 10ம் இடம் எனக்கு. இது நண்பர்களாகிய உங்களால் தான் சாத்தியம் ஆனது. சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மனத்திற்கும் என் நன்றி..

------------------------------------------------------------------------------------

வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் நடக்கும் பதிவர் சங்கமத்திற்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்...



சகோதர, சகோதரிகளே ஈரோடு சங்கமத்துக்கு வாங்க  பழகலாம்....

Saturday, December 11, 2010

விஜய்யின் காவலன் வெற்றி பெற சில வழிகள்


விஜய்யின் சமீபகால படங்கள் எல்லாம் அவரின் வெற்றிப்படங்கள் என்று சொல்லும் அளவில் இல்லை அதைப்பற்றி ஏகப்பட்ட பதிவுகள் நண்பர்களின் வலைப்பூவில் பார்த்தாச்சு.. இப்ப பல தடைகளைத் தாண்டி வரப்போகிறது விஜய்யின் காவலன். இதை வெற்றிப்படமாக ஆக்க சில குண்டக்க மண்டக்க யோசித்தது.

1. ரசிகர் மன்றங்கள் மூலம் ஏதோ ஒரு ஊருக்கு இலவச பொருட்கள் தருவதற்கு பதில் தமிழகம் முழுவதும் எல்லா ஊருக்கும் இலவசம் தரளாம்..

2.அரசியலுக்கு வந்துட்டேன் வந்துட்டேன் என்று தினமும் தொலைக்காட்சியில் பட விளம்பரத்துக்கு பதில் வந்துட்டேன் வந்துட்டேன் என்று விளம்பரம் தரளாம்

3. இணையபதிவர்கள் தான் முக்கியமானவர்கள் அவர்களுக்கு இலவச பிரிவியூ காட்சி போடலாம். சென்னையில் உள்ள பதிவர்களுக்கு மட்டுமின்றி எல்லா பதிவர்களுக்கும் இலவச காட்சி போடனும் அப்ப தான் நல்ல படம் என்று வெளியே தெரியும்..

4. சினிமா விமர்ச்சன பதிவர்களுக்கு ஒரு மாத  இன்டர்நெட் பில் இலவசமா கொடுக்கலாம்.. அப்ப தான் காவலன் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த படம் என எழுதலாம் என்று யோசிப்போம்

5. இடைவேளையில் திண்பண்டங்களுக்கு பதில் சரக்கு வாங்கி கொடுக்கலாம். அப்பதான் மப்புல படம் பார்த்தா நல்லாயிருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லமுடியும்.

6.எல்லா தியேட்டரிலும் ப்ரிவியூ சோ நடத்தலாம் அப்ப தான் படம் எப்படி இருந்தாலும் பாக்க வருவாங்க..

7. இது எனது கடைசி படம் என்று அறிவித்தால் கொஞ்சம் பேர் வர வாய்ப்பு இருக்கிறது.

8. டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...

இதைத்தவிர இன்னும் நிறைய வழிகள் இருக்கும் என்று நினைக்கிறேன் பின்னூட்டத்தில் சொல்லுங்க...

Thursday, December 9, 2010

அறிமுகம் விவசாயிகளுக்கான செய்தித்தாளும், மின்னிதழும்…


அன்புள்ள உழவின் நண்பர்களுக்கு,

வணக்கம்

உலகின் முதல் தொழில் விவசாயம். கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்கிறார் திருவள்ளுவர். உழுவார் உலகத்திற்கு அச்சாணி என்றும் கூறுவார்  அவர்.

அத்தகைய விவசாயம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது?

நாமனைவரும் வயிறார உண்டிட உதவும் தொழில், இப்போது கேட்க நாதியற்ற அனாதைப்பிள்ளை போல பரிதாபமாகக் காட்சியலிக்க்கிறது.  ரியல் எஸ்டேட்களாலும், தொழில்துறையின் அளவு கடந்த பசியாலும்,   அரசியல்வாதிகளால்  தாரைவார்த்து தரப்படும்  சீதனமாக   விளையும் நிலங்கள் சுரண்டப்படுகின்றன. விளைநிலத்தை  விற்றுவிட்டு, கிடைத்த காசில்  டாஸ்மாக் மது அருந்திவிட்டு விட்டத்தை நோக்கிப் படுத்திருக்கும் விவசாயிகள் எண்ணற்றோர். இந்த இழிநிலைக்கு என்ன காரணம்?

செயற்கை உரங்களால் மலடாக்கப்பட்ட நிலம், வானம் பார்த்துக் கிடக்கும் மானாவாரி முறை, வேளாண்மை ஆராய்ச்சி என்ற முறையில் நடத்தப்படும்  கொள்ளை, பாடுபட்டு விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத கொடுமை, விவசாயத்தைவிட தொழில்துறைக்கு அரசால் அதிகமாக கொடுக்கப்படும் கவனம், ... என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

காரணங்கள் தெரிகின்றன. இவற்றுக்கு தீர்வு என்ன?

காரணம் என்ன என்று அறிய முயற்சிக்கும்போதே அதற்கான தீர்வைத் தேடும் எண்ணமும் துவங்கிவிடுகிறது. அந்த அடிப்படையில்தான்,  இதோ எங்களால் முடிந்த முயற்சியாக விவசாயிகளுக்காக பிரத்யேக  இணையதளமும், செய்தித்தாளும் வெளிவர இருக்கின்றன. முதற்கட்டமாக இதோ இணையதளத்தினை நாங்கள் வெளியிட்டுவிட்டோம்.

பத்திரிகைக்கு 'விவசாயி' என்று பெயர் சூட்டி அதற்கு அரசாங்கத்தின் முறையான அனுமதிக்காக காத்திருக்கிறோம். தமிழர் திருநாளம் தைத் திருநாள் அன்று   முதல் பதிப்பு வெளியிட இருக்கிறோம். மாதம் இரு முறை வெளியாகும் இதழாக  வெளியிட தற்போது திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பத்திரிகையின் அதிகாரபூர்வ இணையதளத்தையே  இன்றுமுதல் விவசாய தகவலுக்காக வெளியிடுகிறோம்.

எமது  இணையதளத்தில் விவசாயத்திற்கு உள்ள அனைத்து அரசாங்க இணையதளங்களின் இணைப்பையும்  கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.  மற்றும் விவசாயிகளுக்காக பல தகவல்கள் வலம் வர இருக்கின்றன. விவசாயிகளின் நம்மைக்காக பணிபுரியும் விவசாய சங்கங்கள், தன்னார்வலர்களின் சேவைகள் குறித்த தகவல்களை வெளியிடவும் திட்டமுள்ளது.

எங்களின் நோக்கம் பத்திரிகையே. இணையதளம்  மூலம் அதிக விவசாயிகளுக்கு   நம் கருத்துக்களை கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்.  எனவேதான்,  மாதமிருமுறை வெளியாகும் இதழை அறிமுகம் செய்கிறோம்.  எனினும் அந்த பத்திரிகைக்கு உறுதுணையாக இந்த இணையதளம் செயல்படும்.

இப் பத்திரிகை, சேவை நோக்குடனும்,  வியாபார ரீதியான அணுகுமுறையுடனும்  இருக்கும்.  மக்களிடம் விவசாய கருத்துக்களை கொண்டுசெல்வதும்,  விவசாயம் மீதான பற்றை அதிகரிக்கவும் எங்கள் பனி தொடரும்.

விவசாயிகளுக்கு  சந்தை விலையை அறிமுகப்படுத்தவும்,  விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவும் 'விவசாயி' இதழ்  பெரும் பங்களிக்கும். விவசாயத்தில் புதிதாக அறிமுகமாகியுள்ள தொழில்நுட்பங்கள், சிக்கன பாசன முறைகள், இயற்கை வேளாண்மை முறைகள், பாரம்பரிய விவசாய நடைமுறைகளையும் 'விவசாயி' பத்திரிகை முன்வைக்கும்.

'விவசாயி' இதழுக்காக புகழ் பெற்ற விவசாய ஆராய்ச்சியாளர்கள் பலர் கட்டுரைகளைத்  தரவும்,  விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனத்தினர்  தங்கள் கருத்துக்களைக் கூறவும் சம்மதித்துள்ளனர்.  அரசு தரும் பல மானியங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை அந்த விஷயங்களை சிறு விவசாயிகளுக்கும் கொண்டு செல்வது எங்கள் இலக்கு.

எங்கள் இதழில் விவசாயம் சார்ந்த கட்டுரைகளை வாசகர்களிடம் இருந்து வரவேற்கிறோம்.  நீங்கள் அளிக்கும் கட்டுரைகளை உங்கள் புகைப்படத்துடன் வெளியிடுகிறோம்.  உங்கள் கட்டுரைகளை எங்களது மின்அஞ்சலுக்கு அனுப்புங்கள் vivasayamnews@gmail.com (or) sat10707@gmail.com

இணையதளத்தை  அணுகும்  வாசகர்கள், தங்களுக்கு தெரிந்த விவசாயிகளிடம் எங்கள் இதழை பற்றி சொல்லுமாறு கோருகிறோம்.  வாசகர்களாகிய நீங்கள் படிக்கப்  படிக்கத்தான் எங்கள் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும். நமது நாட்டின் முதன்மைத் தொழிலும் ஆதாரத் தொழிளுமான விவசாயம் காக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

வாசகர்களே வாருங்கள்,

வாழ்த்துங்கள், வளர்கிறோம்...

கூட வாருங்கள்... வளர்வோம்...

இணைந்து செயல்படுவோம்; விவசாயம் வளர்ப்போம்!

நன்றி.
சங்கமேஸ்வரன்.செய்தி ஆசிரியர்
www.vivasayam.com
www.sangkavi.blogspot.com