Wednesday, January 23, 2019

சோத்துக்கடை ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ், சலீவன் வீதி, டவுன்ஹால், கோவை...

மாலை ஆனவுடன் நொறுக்கு தீனியை தேடி மனம் அழையும். மழை பெய்துவிட்டால் வாழக்காய் பஜ்ஜி தான் வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்போம். முன்னெல்லாம் மாலை வேளையில் வீட்டில் பொறி, கடலை கொடுப்பார்கள் இப்போது எல்லாம் காலம் மாறி வீட்டில் நொறுக்கு தீனி தின்பதும் மிக குறைந்துவிட்டது.

நம்ம ஊரைப்பொறுத்தவரை வட இந்திய உணவான பேல் பூரி, பானி பூரி, மசால் பூரி என்று ஊரைச்சுத்தி நிறைய கடைகள் உண்டு. ஆனால் நம் பாரம்பரியத்தில் ஊறிய நொறுக்கு தீனிகடைகள் மிக குறைவு தான். தேடித்தேடித் தான் திங்க வேண்டி இருக்கும்.

நம் பாரம்பரியத்தில் ஊறியது என்றால் பொறி, கடலை, மசால் பொறி, மசால் கடலை, தட்டு முறுக்கு செட், மசாலா கரம் போன்ற நொறுக்கு தீனிகள் தான். இந்த தீனி கடைகள் நம் வீட்டுப்பக்கத்தில் இல்லை. ஆனால் தேடனும் ஆசை தீர நாவிற்கு இனிய நொறுக்கு தீனி சாப்பிடவேண்டும் என்றால் தேடனும். அப்படி தேடி தேடி பிடித்த கடை தான் ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ் இது சலீவன் வீதியில் சின்ன கடையாக அமைந்துள்ளது.

கடைதான் சிறியது ஆனால் உள்ளே உள்ள நொறுக்கு தீனிகள் அனைத்து சுவையோ சுவை. இந்த கடைக்கு என்று நம்மை போல தேடி தேடி உன்னும் பலர் இங்கு வருகின்றனர்.

நாம் போய் ஆர்டர் செய்த பின் தான் மிக்ஸ் செய்து நமக்கு உண்ண தருகிறார். குறைந்தபட்சம் 5 நிமிடமாவது நின்றால் தான் நமக்கு சுவையான நொறுக்ஸ் கிடைக்கும். நான் இந்த கடையில் வாடிக்கையாளர் ஆகி 5 மாதம் தான் இருக்கும். பல முறை சென்று ஒவ்வொரு முறையும் ஒரு வகையான நொறுக்சை ரசித்து ருசிச்ச பின்தான் உங்களுக்கு பகிர்கிறேன்..


தட்டு முறுக்கு செட்தான் முதலில் ஆர்டர் செய்தேன் தட்டு முறுக்கு மேல் பீட்ரூட் காரச்சட்னி வைத்து பின் சிறிய தாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பின் அடுத்த தட்டு முறுக்கை எடுத்து அதில் தக்காளி காரச்சட்னி தடவி ஒரு செட்டுக்கு 4 என்ற கணக்கில் சான்விஜ் போல கொடுத்தார்கள்..



முழு தட்டு முறுக்கை எடுத்து அப்படியே ஒரு வாய் உள்ளே போட்டேன் மிதமான காரம், மொறு மொறுவென இருந்த தட்டுமுறுக்கின் சுவை, வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல் எல்லாம் கலந்து இருக்க சுவை அம்மியது. மனதிற்கும் சாப்பிட்ட சுவை இருந்தது நாவில் நின்றது அதன் காரம்.

தக்காளி கரம், பொடி கரம், பன் சேன்விஜ், பேல் மிகஸ் என ஒவ்வொன்றும் ஒரு சுவை. மாலை நேர சிற்றுன்டிக்கு அருமையான கடை. இது மட்டுமல்லாமல் வித விதமான நொறுக்கு தீனிக்கள் எல்லாம் சுவையோடு இருந்தது. விலையும் குறைவான விலையே...

மாலைநேரம் வாய்க்கு ரூசியா சாப்பிட இந்த கடைக்கு தாரளமாக போகலாம்.



டவுன்ஹால் சலீவன் வீதியில் ஆட்டோ ஸ்டேண்ட் முன்புறம் இந்த கடை அமைந்துள்ளது.

Friday, November 9, 2018

சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன் சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் சொல்வாங்க அங்க என்ன சிறப்பு, எதன் சுவை மெருகேறி இருக்கும் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அப்படியான மெஸ் தான் இந்த அம்மன் மெஸ். தினமும் மதியம் 12.30க்கு இங்கு களை கட்டும் சாப்பாட்டுத் திருவிழா 3.30க்கு முடிந்து விடுகிறது. இந்த மெஸ்சின் நேரமே 3 மணி நேரம் தான். காலை, மாலை எல்லாம் கிடையாது மதிய உணவு மட்டுமே இங்கு கிடைக்கும்..

இந்த மெஸ் கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு மேலாக இயங்குகிறது. நான் 4 வருடத்திற்கு முன் ஒரு முறை சாப்பிட்டுள்ளேன். அதன் பின் கடந்த 2 வருடமாகத்தான் இதன் சிறப்பை அரிய நேரிட்டது. அதனால் சாப்பிட நேரம் பார்த்து கிடந்தேன் இந்த தீபாவளி விடுமுறையில் அந்த சுவையை பதம் பார்த்து விட்டேன்.

மதியம் 2.20க்குத்தான் உள்ளே நுழைந்தோம் எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே சென்றோம் எங்க நேரம் எல்லாமே இருந்தது.

உள் நுழைந்ததும் ஒரு சின்ன அறை பழைய காலத்து மர டேபில் போட்டு அதில் சேர் போட்டு உள்ளனர் அந்த அறையில் 8 பேர் மட்டுமே சாப்பிட இயலும், அதற்கு அடுத்த அறையில் ஒரு 10 பேர் சாப்பிடும் அளவிற்கு மர டேபிள் போட்டு இருந்தார்கள், மிக முக்கியமாக நன்றாக சுத்தமாக பராமரிக்கின்றனர் உணவு உன்னும் இடத்தை.
15 நிமிட காத்திருப்புக்கு பின் ஒடி போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ( இங்கு இடம் இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கின்றனர், இல்லை என்றால் வெளியில் காத்திருந்து தான் செல்ல வேண்டும்)

நல்ல தலைவாழை இலை போட்டு தண்ணீர் வைத்ததும் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு கொண்டு வந்து வைத்தார்கள். மட்டன் கொத்துக்கறி, பிச்சுபோட்ட கோழி, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல் ஆர்டர் செய்தோம். ஒரு மொறத்தில் சாப்பாட்டை சுட சுட கொண்டு வந்து கொட்டினார்கள். உடன் கொத்துக்கறி வந்தது.

கொத்துக்கறி நன்கு மசாலாவோடு கலந்து இருந்தது, மசாலா ரொம்ப தூக்கலாக இல்லாமல் அளவான பதத்தில் இருந்தது. சாப்பாடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் போட்டதும் தான் மனம் நிறைந்தது. அப்படி ஒரு சுவை கொத்துக்கறியின் மனமும், மசாலாவின் மனமும் இனைந்து சாப்பாட்டை நன்கு பதம் பார்த்தது. மட்டன் குழம்பை சாப்பாட்டில் ஊத்தி கொத்துக்கறியோடு இனைந்து சாப்பிடுவது மிகச்சிறந்த சுவையாக பட்டது என் நாக்கிற்கு..

குழம்பை பற்றி சொல்லவேண்டுமானால் மசாலாவின் காரம் குறைவு, மல்லித்தூள் வாசம் அதிகம் இல்லாமல் வீட்டுச்சுவை அப்படியே இருந்தது.


மட்டன் வறுவலில் கறி நன்கு வேகவைக்கபட்டு வெங்காயம், பெப்பர் போட்டு நன்கு கலந்து கொடுத்தனர். நண்பர்களோடு பகிர்ந்து உன்னும் போது எனக்கு 4 துண்டு தான் கிடைத்தது. நாலு துண்டும் நறுக்கென்று இருந்தது. கறியை நன்றாக மென்னும் திங்கும் அளவு சுவை நாவிலேயே இருந்தது.

சிக்கன் வறுவல் போன்லெஸ் கிடைக்கவில்லை எலும்போடு இருந்ததும் நன்றாக மென்னு திங்கும் அளவில் வேகவைக்கப்பட்டு இருந்தது. மட்டனின் உள்ள மசாலாவும் சிக்கனில் உள்ள மசாலாவும் வேறு வேறு போல இரண்டின் சுவையும் ஒன்று போல இல்லை ஆனால் தனி ரகமாக நாக்கில் ஜொலித்தது.

பிச்சு போட்ட கோழி பல ஓட்டலில் சாப்பிட்டு இருந்தாலும் இங்கு வேறு வித சுவையோடு இருந்தது. நிறைய வெங்காயமும், பச்சை மிளாய்யும் போட்டு அதில் கோழியை பிச்சு போட்டு நன்றாக பெப்பர், மிளாய் தூள் போட்டு பிரட்டி கொடுத்தனர். எனது நாக்கை பிரட்டி போட்டது இதன் சுவை. அடுத்த முறை போகும் போது இதத்தான் முதல்ல சாப்பிடனும்ன்னு அப்பவே முடிவு செய்துவிட்டேன்.

அடுத்து ஆந்திரா முட்டை கொடுத்தார்கள் கடலை எண்ணெய் போட்டு சமைத்திருப்பார்கள் போல முட்டை பொறியலில் வரமிளகாய் தூக்கலாக போட்டு நன்கு வனக்கி கொடுத்தனர். இதன் சுவையோ அபாரம்.

எனக்கு முன் சாப்பிட்டவர் ஸ்பெசல் கலக்கி என்றார், நான் ரசத்துக்கு தாவும் போது சரி என எனக்கும் ஒன்று என்றேன். கலக்கியில் சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு அதில் முட்டை பெப்பர் போட்டு கலக்கி கொடுத்தனர் ரசத்துக்கு எல்லாம் தொட்டுக்கவில்லை கப்புன்னு நானே சாப்பிட்டேன் இதுவும் அங்க சாப்பிட போகும் போது மறக்காமல் சாப்பிட வேண்டியது.

சுடச்சுட இலையில் சாப்பாடு அதில் இரண்டு கரண்டி ரசத்தை ஊற்றி நல்லா பிசைந்து ஒரு வாய்தாங்க போட்டேன் அப்பப்பபா என்னா சுவை, ரசம் அப்படி இருந்தது. தக்காளியும், புளியும் சேர்த்து இப்படி எல்லாம் ரசம் கொடுக்க முடியுமா என்னும் அளவிற்கு சுவையாக இருந்தது.

கடைசியா கெட்டித்தயிர்ன்னு சொன்னாங்க சரின்னு நானும் நண்பரும் தயிர் ஊத்தி சாப்பிட்டோம். எருமைத்தயிர் போல எந்த புளிப்பும் இல்லாமல் தயிர் சாப்பிட்டது போல இருந்தது. தயிர் பிசைந்து ரவுண்டு கட்டும் போது அதில் தேனை ஊற்றினார்கள், தேன் தயிர் அடடா என்னா சுவை செம்ம காம்பினேசனாக இருந்தது. இதை ரசித்து ரசித்து சாப்பிடும் போது குல்கந்து கொடுத்தாங்க.. அச்சோ அங்கியே என் நாக்கு செத்திடுச்சு.. தயிர், தேன், குல்கந்து எப்பா என்னா சுவை என்ன ஒரு கலவை அப்படியே இலையை நன்றாக வழிச்சு நக்கிட்டு ஒரு பருக்கை கூட விடாமல் எழுந்து வந்தேன்...

வெளியே பில் கொடுத்தார்கள் பில் தொகையை எல்லாம் பார்க்கல, அப்படி ஒரு சுவை.. கொடுக்கற காசுக்கு குறைவில்லா சுவை என்பதை அடிச்சு சொல்லலாம். அப்படியே நாக்கில் எல்லா சுவையும் வந்து வந்து போகுதுங்க...

அமைவிடம்: கோவையில் இருந்து பெங்களுர் செல்லும் பைபாசில் பவானி காவிரி ஆற்றைத்தான்டியதும் இடது பக்கம் கொமராபாளையம் செல்லும் வழி வரும் அதே சாலையில் ஒரு அரை பர்லாங்கு போனதும் இடது பக்கம் வீடு போலத்தான் இருக்கும் அங்க போனா நம்ம நாக்கு அனுபவிக்கும் அப்படி ஒரு சுவையை....

Thursday, December 29, 2016

Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...

எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது. உடனே வண்டியை சர்வீஸ்க்கு விட்டேன். சர்வீஸ் சூப்பர்வைசர் 2000க்குள் செலவு வரும் சார் என்றார். கையில் பணம் இல்லண்ணே கார்டுதான் போடனும் என்று கூறினேன். அப்ப தலைமை அலுவலகத்தில் தான் சார் கார்டு போடனும், சர்வீஸ் சார்ஸ் போடுவாங்க கேட்டுக்குங்க என்றார். சரிங்க என்று சொல்லி வண்டியை விட்டு விட்டு வந்துவிட்டேன்.
மாலை வண்டியை எடுக்க சென்றேன் பில் தொகை 1850 சார், நீங்க தலைமை அலுவலகத்தில் கார்டு போட்டுக்குங்க என்று அனுப்பி வைத்தார். தலைமை அலுவகத்திற்கு சென்றேன் பில் தொகை அதனுடன் 1.75 service tax 33 ரூபாய் சேர்ந்து வரும் என்றார் அங்க பில் போட்ட பெண்மணி.
எதற்கு சர்வீஸ் சார்ஜ் அது தான் இப்போது கேஸ்லெஸ் என்ற முறை வந்திருக்கிறது கார்டில் பணம் கட்டினால் சர்வீஸ் சார்ஜ் இல்லை என்று சொன்னார்கள், நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்கறீர்கள் என்றேன். எனக்கு தெரியாது சார் நீங்க அக்கவுண்டன்ட் சாரைத்தான் கேட்கனும் என்றார்.
அக்கவுண்டன் சாரை கேட்டால் எனக்கு தெரியாது சார், நீங்க மேனேஜரைத்தான் பார்க்கனும் என்றார். சரி என்று இருக்கும் நேரத்தை எல்லாம் வீணாக்கி அவரை சென்று சந்தித்தேன்.
ரொம்ப தெளிவாக நிறுத்தி நிதானித்து பேசினார் மேனேஜர். சார் நாங்க சர்வீஸ் சார்ஜ் போடுவது உண்மை தான் ஆனால் அந்த பணம் எங்களுக்கு வருவதில்லை அது வங்கிக்கு போகுது என்று அவருடைய அக்கவுண்ட் புத்தகத்தை காண்பித்தார் ( வங்கி ஸ்டேட்மெண்டை காண்பித்தால் உண்மை தெரிந்துவிடுமுள்ள) இல்ல சார் இது தவறாக தெரிகிறதே என்றேன்.
நீங்கள் வங்கியைத்தான் கேட்கவேண்டும், வேண்டும் என்றால் நாளை வாங்க வங்கிக்கு சென்று கேளுங்கள் என்றார் அதாவது உங்க பில் தொகை 1850 தான் எங்களுக்கு வரும், சர்வீஸ் வரி வங்கிக்கு போய் விடும் என்றார். நேரம் 8 மணி ஆகிவிட்டது, அதற்கு மேலும் அங்கு பேச மனதில் தெம்பு இல்லை சரி என்று பில் போட வந்தேன்.
சரி அந்த சர்வீஸ் டேக்ஸ்க்கு பில் போட்டு கொடுங்க என்றால் அது வங்கிக்கு போகும் பணம், நாங்க எப்படி பில் போடுவது என்று சார் என்று மறுபடியும் பேசினார். போய்த்தொலையுது என்று பில்லை கட்டினேன்.
நான் பில் கட்ட கட்ட இன்னொருவரும் இதே சண்டையையிட்டார். அவரிடமும் சமாதானம் பேசி, அங்க இருந்து அனுப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தார் மேனேஜர்.
இந்திய பிரதமர் அறிவித்த பின்பும் சர்வீஸ் வரி பிடிக்கிறார்கள், கேட்டால் வங்கியில் பிடிக்கிறார்கள் என்கிறார்கள் அதற்கும் பில் தருவதில்லை. வங்கியில் பிடிக்கும் பணத்திற்கு நாங்கள் எப்படி பில் தருவது என்கிறார். என்னுடைய சந்தேகம் எல்லாம் இந்த 33 ரூபாய் யாருக்கு போகிறது வங்கிக்கா? இல்லை Orpi Agencyக்கா?.
வங்கி அதிகாரியை கேட்டால் வங்கியில் பிடிப்பதில்லை என்கிறார். Orpi Agency கேட்டால் வங்கிதான் பிடிக்கிறது என்கிறார்கள்..
நான் யாரை போய் கேட்பது. கண் முன்னே என் பணம் கருப்பு பணமாக மாறுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கேஸ்லெஸ் என்று அதற்காக பல திட்டங்களை போடுகிறார்கள் பல வழிகளை சொல்கிறார்கள் ஆனால் வரி என்ற பெயரில் சிறு சிறு பணமாக நம்மிடம் பிடுங்குகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆக நம் செய்யும் செலவிற்கு ஒவ்வொன்றிற்கும் வரி கட்டுகிறோம். கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும்...

Monday, June 13, 2016

போகிர போக்கில்...

கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை, மேல் தட்டு நடுத்தர வர்க்கம் எல்லாம் இங்கு தான் குண்டூசி கூட வாங்குவார்கள் அந்த அளவிற்கு பிரபலமான, மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அதுவும் தற்போது 100 அடி சாலையில் வேலை நடப்பதால் இங்கு எப்போது சென்றாலும் ஊர்ந்து தான் செல்ல வேண்டி இருக்கு அந்த அளவிற்கு வாகன நெறிசல்.

சிக்னலில் இருந்து முன்னாடி சென்ற உயர்தர வாகனங்களுக்கிடையே எறும்பு போல ஊர்ந்து சென்றது என் வாகனம், முன்னால் சென்ற பொலிரோவின் புகையால் தத்தளித்தது என் நாசி. இம்புட்டு கூட்டத்தின் நடுவிலே தேடினேன் அந்த பூக்கார அக்காவை. மங்களகரமாக உட்கார்ந்து அவுங்க பூ விற்கும் அழகே தனி. மல்லிகைப்பூ நெருக்கமாக கட்டியவை ஒரு கூடையின் மேலும், கொஞ்சம் லுசா கட்டிய பூக்கள் ஒரு கூடையிலும், துளசி கலந்து பூ ஒரு கூடையிலும், சாதி மல்லிகைப்பூ ஒரு கூடையின் மேலும் அழகாக வரிசையாக அடுக்கி அதன் நடுவே ஒரு பூப்போல அமர்ந்திருப்பார்.

வருபவர்களை வாஞ்சையாக வரவேற்று அவர் பூ அளக்கும் அழகே தனி, தம்பி வாங்க என்ன வேனும் என்று ஒவ்வொன்றின் விலையை அடுக்கி சொல்வோர் நமக்கு வேண்டியதை வாங்கி திரும்பும் போது, தம்பிக்கு புது கண்ணாலம் போல இந்த ரோசவையும் வாங்கிக்க சம்சாரம் சந்தோசமாக வாங்கிக்கும் என்று அங்கேயே வீட்டு நெனப்பை மனம் முழுவதும் பரப்பி விடுவார்.


எனக்கு அவுங்க எப்பவும் சென்டி மெண்ட், அதனால் அந்த சாலையில் பயணிக்கும் போது எல்லாம் பூ வாங்க மறக்கமாட்டேன். இம்புட்டு நெறிசலில் பூ வாங்க இயலவில்லை என்ற வருத்தத்தோடு வண்டியை உருட்டிக்கொண்டே சென்றேன். நான் பொருள் வாங்க வேண்டிய கடை வந்தது ஆனால் வாகனத்தை நிறுத்தத்தான் வழியக்காணம். வரிசையாக நிற்கின்றன இரு சக்கர வாகனங்கள். கடைசியாக ஒரு ஆண்டி தன் ஏக்டிவ்வாவை எடுத்ததும் அந்த இடத்தில் சொருகி நிறுத்தினேன்.

வண்டியில் இருந்து இறங்கி அப்படியே கண்ணாடிய பார்த்து புகைக்கு நடுவில் சிக்கிய என் முகத்தை சிறு துண்டின் மூலம் துடைச்சு கொஞ்சம் என் முகத்தை அழகாக்கி அந்த கண்ணாடியில் புன்னகையை காட்டி நடைய கட்டினேன் நான் செல்லும் கடைக்கு.

பொருளை வாங்கிவிட்டு கடையில் இருந்து காலை வெளியே வைத்தேன், அப்படியே ஒரு கூட்டம் இந்த பக்கம் தள்ளியது, இன்னொரு கூட்டம் எதிர்புறம் தள்ளியது, தள்ளி தள்ளி என் வாகனம் இருக்கும் இடைத்தை தாண்விவிட்டேன், எதிரே திரும்பினால் வழி எங்கும் வாகனங்கள் ஆமையை விட வேகம் குறைவாக நகர்ந்தன, ஸ்ரீதேவியில் இருந்து கூட்டம் இறங்குவதும், உள்ளே நுழைவதுமாக இருந்தது. கால் டெக்சி ஆட்களோ வழக்கம் போல நடுரோட்டில் ஆட்களை ஏற்றி இறக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தான் கவனித்தேன் என் வாகனத்தின் அருகே ஒரு டிப்டாப் ஆசாமியை, பார்ப்பதற்கு ஆள் இந்தி நடிகன் போல இருந்தார், ஆனால் இவரை எல்லாம் எங்க ஊர் ஆட்களிடம் காட்டினால் பெட்சீட் விக்கர இந்திக்கார பையனட்டியே இருக்குதும்பாங்க.. ஆம் அப்படித்தான் இருந்தார் ஒரு சாயலில். அவர் வந்து லாயமாக என் வண்டியின் பக்கத்தில் அவரின் பல்சரை நிறுத்திவிட்டு பந்தாவக இறங்கியவரை ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்தேன், பின்னாடி பிகர் எதாவது கூட்டிக்கொண்டு வந்தாரா என்று... ம்கும் ஒன்னையும் காணம்.

அதற்குள் இறங்கிய அந்த இந்தி ஆசாமி வேகமாக என் வண்டியின் கண்ணாடியை திருப்பி தலையை வாரு வாரு என்று வாரினார். நீ எல்லாம் ஆல்ரெடி அழகு தான்டா அப்புறம் ஏன் சீவுகிறாய் என்று கேட்க தோன்றியது, வாட்ட சாட்டமா இருக்கிறான் ஒரு வீசு வீசினால் பல்லு 32ம் போய் விடும்மோ என்ற பயந்தான். இருந்தாலும் அவன் வண்டியை விட்டு விட்டு என் வண்டி கண்ணாடியை திருப்பி தலை சீவுபவனுக்கு ஒரு பஞ்ச் வெக்க வேண்டுமல்லாவா??

தலை வாரி முடித்த பின் அவன் திரும்புகையில், சார் இது என் வண்டி தான் என்றேன் தைரியத்தை வரவைத்துக்கொண்டு...

Sorry sir, sorry sir, very sorry sir என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்று விட்டான்.. கண்ணாடியை சரி செய்யாமலே... 

தலையில் அடித்துகொண்டு வண்டியை எடுத்து வந்தேன், ஆனால் அவனை எத்தி போட்டு மிதித்துக்கொண்டு இருந்தேன் என் மனதில்...

Tuesday, May 17, 2016

மார்க் முக்கியம் இல்லடா மாக்கானுகளே !!

+2 தேர்வு முடிந்ததும் மார்க் எவ்வளவு, மார்க் எவ்வளவு என்று ஊர்ல போறவன், வர்றவன் எல்லாம் கேள்வியா கேட்டு சாகடிப்பானுக, 1000க்கு மேலே மதிப்பெண் பெற்றவன் எல்லாம் கெத்தா சொல்லுவான், என்னைப்போல 700க்கு கீழே உள்ளவன் எல்லாம் பல்ல மட்டும் தான் காட்டுவோம்.

மதிப்பெண் குறைவா எடுத்தா மதிப்பும் குறைந்து விடுகிறது, அந்த மதிப்பை மீட்க பல காலம் போராட வேண்டி இருக்கு, இந்த மதிப்பெண் சிஸ்டத்தை கொண்டுவந்த அரசாங்கம் இன்னும் அப்படியே இருக்கு..  காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டாமா? இன்னும் மார்க், மார்க் என்று குழந்தைகளை தாளிக்கின்றனர்...
நமது அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் கல்வியின் தரத்தில் நாம் குறைவாகத்தான் இருக்கிறோம். நம்ம ஊரில் ஐஐடி யில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு, இதே ஆந்திர மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஏன் அதிகம், ஏன் குறைவு என்று ஒப்பிட்டு பார்த்து கல்வியை சரி செய்ய இங்கு யாரும் முன்வருவதில்லை..
இன்ஜினியரிங் படிப்பு எல்லாம் தகுதி அற்ற பலர் படித்து விட்டு இன்னிக்கு 5000க்கும், 6000க்கும் ஙே என்று அழைந்து கொண்டு இருக்கின்றனர்.
எனக்கு தெரிந்த ஒரு பையன் 6000 சம்பளத்திற்கு வேலைக்கு படித்த வேலைக்கு போகாமல், செக்கியூரிட்டி வேலைக்கு செல்கிறான், ஏன்டா இங்கன்னு கேட்டேன், இங்க 10000 சம்பளம் அண்ணா அதுவும் இல்லாமல் நிறைய நேரங்களில் படிக்க நேரம் கிடைக்கிறது, அதானல மேல படிக்க உதவும், மற்றும் நேரம் கிடைக்கையில் நேர்முகத்தேர்வுக்கு போகிறேன் என்றான். மகிழ்வாக இருந்தது அவன் சொன்னது. இன்றைய காலத்தில் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்றால் கடைசியாக திருவோடு தான் மிஞ்சும்.
எத்தனையோ படிப்பு இருக்கிறது, ஆனால் இன்ஜினியரிங் படித்து பராக்கு பார்ப்பவர்கள் நிறைய.
இன்று வந்த +2 தேர்வின் முடிவில் என் சித்தியின் மகன் 705 மார்க் தான் பெற்றான், எனக்கோ மிக மகிழ்ச்சி என்னை விட 30 மார்க் தான் அதிகம் வாங்கி இருக்கிறான் என்று.
இன்ஜினியரிங் சேர்த்தலாம் என்று ஒத்தக்காலில் நின்னாங்க, நான் தான் மண்டைய கழுவி ஆங்கில இலக்கியம் படிக்கட்டும் என்று அவனுக்கு ஆசைய உண்டாக்கி, அதிலேயே சேர விண்ணப்பம் வாங்க அனுப்பிவிட்டேன்.
தயவு செய்து +2 முடிச்ச மாணவச் செல்வங்களை மேலே என்ன படிக்கறீங்கன்ன கேளுங்க, மார்க்கை கேட்டு அவர்களின் மனதை மானபங்கபடுத்தாதீர் !!

மார்க் முக்கியமில்லடா மாக்கானுகளே !!