Friday, November 9, 2018

சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன் சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் சொல்வாங்க அங்க என்ன சிறப்பு, எதன் சுவை மெருகேறி இருக்கும் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அப்படியான மெஸ் தான் இந்த அம்மன் மெஸ். தினமும் மதியம் 12.30க்கு இங்கு களை கட்டும் சாப்பாட்டுத் திருவிழா 3.30க்கு முடிந்து விடுகிறது. இந்த மெஸ்சின் நேரமே 3 மணி நேரம் தான். காலை, மாலை எல்லாம் கிடையாது மதிய உணவு மட்டுமே இங்கு கிடைக்கும்..

இந்த மெஸ் கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு மேலாக இயங்குகிறது. நான் 4 வருடத்திற்கு முன் ஒரு முறை சாப்பிட்டுள்ளேன். அதன் பின் கடந்த 2 வருடமாகத்தான் இதன் சிறப்பை அரிய நேரிட்டது. அதனால் சாப்பிட நேரம் பார்த்து கிடந்தேன் இந்த தீபாவளி விடுமுறையில் அந்த சுவையை பதம் பார்த்து விட்டேன்.

மதியம் 2.20க்குத்தான் உள்ளே நுழைந்தோம் எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே சென்றோம் எங்க நேரம் எல்லாமே இருந்தது.

உள் நுழைந்ததும் ஒரு சின்ன அறை பழைய காலத்து மர டேபில் போட்டு அதில் சேர் போட்டு உள்ளனர் அந்த அறையில் 8 பேர் மட்டுமே சாப்பிட இயலும், அதற்கு அடுத்த அறையில் ஒரு 10 பேர் சாப்பிடும் அளவிற்கு மர டேபிள் போட்டு இருந்தார்கள், மிக முக்கியமாக நன்றாக சுத்தமாக பராமரிக்கின்றனர் உணவு உன்னும் இடத்தை.
15 நிமிட காத்திருப்புக்கு பின் ஒடி போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ( இங்கு இடம் இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கின்றனர், இல்லை என்றால் வெளியில் காத்திருந்து தான் செல்ல வேண்டும்)

நல்ல தலைவாழை இலை போட்டு தண்ணீர் வைத்ததும் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு கொண்டு வந்து வைத்தார்கள். மட்டன் கொத்துக்கறி, பிச்சுபோட்ட கோழி, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல் ஆர்டர் செய்தோம். ஒரு மொறத்தில் சாப்பாட்டை சுட சுட கொண்டு வந்து கொட்டினார்கள். உடன் கொத்துக்கறி வந்தது.

கொத்துக்கறி நன்கு மசாலாவோடு கலந்து இருந்தது, மசாலா ரொம்ப தூக்கலாக இல்லாமல் அளவான பதத்தில் இருந்தது. சாப்பாடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் போட்டதும் தான் மனம் நிறைந்தது. அப்படி ஒரு சுவை கொத்துக்கறியின் மனமும், மசாலாவின் மனமும் இனைந்து சாப்பாட்டை நன்கு பதம் பார்த்தது. மட்டன் குழம்பை சாப்பாட்டில் ஊத்தி கொத்துக்கறியோடு இனைந்து சாப்பிடுவது மிகச்சிறந்த சுவையாக பட்டது என் நாக்கிற்கு..

குழம்பை பற்றி சொல்லவேண்டுமானால் மசாலாவின் காரம் குறைவு, மல்லித்தூள் வாசம் அதிகம் இல்லாமல் வீட்டுச்சுவை அப்படியே இருந்தது.


மட்டன் வறுவலில் கறி நன்கு வேகவைக்கபட்டு வெங்காயம், பெப்பர் போட்டு நன்கு கலந்து கொடுத்தனர். நண்பர்களோடு பகிர்ந்து உன்னும் போது எனக்கு 4 துண்டு தான் கிடைத்தது. நாலு துண்டும் நறுக்கென்று இருந்தது. கறியை நன்றாக மென்னும் திங்கும் அளவு சுவை நாவிலேயே இருந்தது.

சிக்கன் வறுவல் போன்லெஸ் கிடைக்கவில்லை எலும்போடு இருந்ததும் நன்றாக மென்னு திங்கும் அளவில் வேகவைக்கப்பட்டு இருந்தது. மட்டனின் உள்ள மசாலாவும் சிக்கனில் உள்ள மசாலாவும் வேறு வேறு போல இரண்டின் சுவையும் ஒன்று போல இல்லை ஆனால் தனி ரகமாக நாக்கில் ஜொலித்தது.

பிச்சு போட்ட கோழி பல ஓட்டலில் சாப்பிட்டு இருந்தாலும் இங்கு வேறு வித சுவையோடு இருந்தது. நிறைய வெங்காயமும், பச்சை மிளாய்யும் போட்டு அதில் கோழியை பிச்சு போட்டு நன்றாக பெப்பர், மிளாய் தூள் போட்டு பிரட்டி கொடுத்தனர். எனது நாக்கை பிரட்டி போட்டது இதன் சுவை. அடுத்த முறை போகும் போது இதத்தான் முதல்ல சாப்பிடனும்ன்னு அப்பவே முடிவு செய்துவிட்டேன்.

அடுத்து ஆந்திரா முட்டை கொடுத்தார்கள் கடலை எண்ணெய் போட்டு சமைத்திருப்பார்கள் போல முட்டை பொறியலில் வரமிளகாய் தூக்கலாக போட்டு நன்கு வனக்கி கொடுத்தனர். இதன் சுவையோ அபாரம்.

எனக்கு முன் சாப்பிட்டவர் ஸ்பெசல் கலக்கி என்றார், நான் ரசத்துக்கு தாவும் போது சரி என எனக்கும் ஒன்று என்றேன். கலக்கியில் சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு அதில் முட்டை பெப்பர் போட்டு கலக்கி கொடுத்தனர் ரசத்துக்கு எல்லாம் தொட்டுக்கவில்லை கப்புன்னு நானே சாப்பிட்டேன் இதுவும் அங்க சாப்பிட போகும் போது மறக்காமல் சாப்பிட வேண்டியது.

சுடச்சுட இலையில் சாப்பாடு அதில் இரண்டு கரண்டி ரசத்தை ஊற்றி நல்லா பிசைந்து ஒரு வாய்தாங்க போட்டேன் அப்பப்பபா என்னா சுவை, ரசம் அப்படி இருந்தது. தக்காளியும், புளியும் சேர்த்து இப்படி எல்லாம் ரசம் கொடுக்க முடியுமா என்னும் அளவிற்கு சுவையாக இருந்தது.

கடைசியா கெட்டித்தயிர்ன்னு சொன்னாங்க சரின்னு நானும் நண்பரும் தயிர் ஊத்தி சாப்பிட்டோம். எருமைத்தயிர் போல எந்த புளிப்பும் இல்லாமல் தயிர் சாப்பிட்டது போல இருந்தது. தயிர் பிசைந்து ரவுண்டு கட்டும் போது அதில் தேனை ஊற்றினார்கள், தேன் தயிர் அடடா என்னா சுவை செம்ம காம்பினேசனாக இருந்தது. இதை ரசித்து ரசித்து சாப்பிடும் போது குல்கந்து கொடுத்தாங்க.. அச்சோ அங்கியே என் நாக்கு செத்திடுச்சு.. தயிர், தேன், குல்கந்து எப்பா என்னா சுவை என்ன ஒரு கலவை அப்படியே இலையை நன்றாக வழிச்சு நக்கிட்டு ஒரு பருக்கை கூட விடாமல் எழுந்து வந்தேன்...

வெளியே பில் கொடுத்தார்கள் பில் தொகையை எல்லாம் பார்க்கல, அப்படி ஒரு சுவை.. கொடுக்கற காசுக்கு குறைவில்லா சுவை என்பதை அடிச்சு சொல்லலாம். அப்படியே நாக்கில் எல்லா சுவையும் வந்து வந்து போகுதுங்க...

அமைவிடம்: கோவையில் இருந்து பெங்களுர் செல்லும் பைபாசில் பவானி காவிரி ஆற்றைத்தான்டியதும் இடது பக்கம் கொமராபாளையம் செல்லும் வழி வரும் அதே சாலையில் ஒரு அரை பர்லாங்கு போனதும் இடது பக்கம் வீடு போலத்தான் இருக்கும் அங்க போனா நம்ம நாக்கு அனுபவிக்கும் அப்படி ஒரு சுவையை....

No comments:

Post a Comment