Monday, July 19, 2010

ஆடி மாதமும்... திருவிழாவும்....

ஆடி மாதம் பொறந்தாலே சந்தோசந்தான் எனக்கு. எங்கள் ஊரைச்சுற்றி உள்ள முனியப்பன் கோயிலில் எல்லாம் திருவிழா மையந்தான். சிறிய வயதில் இருந்தே ஆடி மாதம் என்றால் திருவிழாக்கள் தான் ஞாபகம் வரும்.

சிறுவயதில் ஆடி முதல் நாள் அன்று காலை காவிரிக்கரைக்குச் செல்லோம். எங்கள் வீட்டில் இருந்து காவிரிக்கரை 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆடி முதல் நாள் அன்று அப்பாவுடன் சென்று காவிரியில் நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள சொக்கநாச்சி அம்மனை வழிபட்டுத் திரும்புவோம். சிறுவயதில் ஆற்றுக்குப் போய் குளிப்பதே ஒரு தனி குஷி தான்.

ஆடி 18 அன்று பக்கத்து வீட்டில் இருந்து எல்லோரும் சேர்ந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காவிரி ஆற்றிற்குச் சென்று குளித்து விட்டு ஆட்டம் போடுவோம். குளிக்கும் போது தலையில் 10பைசா வைத்து மூன்று முறை முழுகி எழுவோம் மூன்றாம் முறை முழுகும் போது 10 பைசாவை ஆற்றில் விட்டுவிடுவோம். பின் அங்கேயே கொண்டு போன கட்டுச்சோறை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்று திரும்புவோம். நான் 11வது படிக்கும் போது இருந்து காவிரிக்குச் செல்வதில்லை வீட்டிலேயே குளித்து விட்டு மேட்டூர் சென்று விடுவோம் மேட்டூர் அணையை ஒட்டி இருக்கும் அணை முனியப்பன் கோயில் திருவிழா நடக்கும் அங்கு சென்று மேட்டூர் அணையை சுற்றிவிட்டு மீன் சாப்பிட்டு விட்டு வருவோம்.

வேலைக்குச் சென்ற பின் ஆடி 18 அன்று நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 407 வண்டி வாடகைக்கு எடுத்து அதில் வைக்கோல் பிள் போட்டு அதற்கு மேல் தார் பாய் போட்டு ஆட்டம் பாட்டத்துடன் ஒகேனக்கல் செல்வோம் ஆடி 18 என்றாலே அழகான சுற்றுலாவோடு தான் கழிப்போம்.

ஆடி 18க்கு அடுத்த நாள் எங்கள் ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மொன்டிபாளையம் என்னும் ஊரில் தன்னாசிமுனியப்பன் திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும் இங்கு சென்று தூரி ஆடுவது தான் எங்கள் உற்சாகம்.

ஆடி கடைசியில் எங்கள் ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு 1 லட்சம் பேர்க்கு மேல் கூடுவார்கள். இதிதிருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஐதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. 

இப்பொழுது எல்லாம் அங்காங்கே பொருட்காட்சி நடத்தி ராட்டினம், பைக்ரேஸ் போன்றவை நடத்துகிறார்கள். சிறுவயதில் எங்க ஏரியா வாசிகளுக்கு ராட்டினம் என்றால் அந்தியூர் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும் எனக்கு ஞாபகம் தெரிந்ததில் இருந்து இன்று வரை இத்திருவிழாவிற்கு நான் சென்று கொண்டு இருக்கிறேன். இந்த வருட திருவிழா ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நடைபெறும் என நினைக்கிறேன். இந்த வருடம் திருவிழா பற்றி நிறைய விசயங்கள் பதிவு செய்கிறேன் விரைவில்.

4 comments:

  1. பதிவுக்காக காத்திருக்கிறேன்...திருவிழா

    ReplyDelete
  2. அவசியம் எழுதுங்கள்

    ReplyDelete
  3. எங்க ஊர் அழகர் திருவிழாவுக்கு ஒரு தரம் வாங்க தல..

    ReplyDelete
  4. அழகிய ஊர் நினைவுகள்.

    ReplyDelete