Tuesday, May 18, 2010

வாங்க பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடலாம்....


இன்று அனைவரும் படித்து விட்டு வெளியூருக்கு குடும்பத்தை விட்டு வேலைக்கு செல்கின்றனர். இதில் நிறைய பேர் மேன்ஷனில் தங்குகின்றனர் இன்னும் சில பேர் நண்பர்களின் அறையில் தங்குகின்றனர். இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் பாட்டி கடை அல்லது கையேந்தி பவன் என அவர் அவர் வசதிக்கு ஏற்ப சாப்பிடுவார்கள். சிலர் நான்கு பேர் ஒரு வீடு எடுத்து சமையல் பாத்திரங்கள் எல்லாம் வாங்க அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள். இதில் நான் கடைசி ரகம்.

நான் கொஞ்ச நாள் ஈரோட்டில் வேலை செய்து விட்டு சென்னைக்கு 2002 ம் ஆண்டு சென்னைக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு நாங்கள் 5 பேர் சேர்ந்து திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் அருகே உள்ள முத்துருன்னிசா பேகம் வீதியில் உள்ள அப்துல் காதர் வீட்டில் வீடு எடுத்து தங்கி இருந்தோம் எனது அலுவலகம் வாலாஜா ரோட்டில் இருந்தது. முதன் முதலாக இங்கு தான் நான் சமைக்கப்பழகினேன். முதலில் தக்காளி பச்சி கூட செய்யத் தெரியாமல் குக்கரில் எத்தனை டம்ளர் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் என தெரியாமல் இருந்த நான் கொஞ்ச நாளில் நாங்கள் 5 பேரும் சமையலை ஒரு அளவிற்கு கற்றுக்கொண்டோம். அன்று முதல் இன்று வரை சமையல் செய்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான் இம்முறை எங்கள் ஊரிற்கு சென்ற போது நாங்கள் ஒரு 10 பேர் சேர்ந்து நாட்டுக்கோழி 4 கிலோ எடுத்து காவிரி ஆற்றங்கரையில் சமைத்து சாப்பிட்டோம். அன்று எனது சமையல் ரொம்ப நாளைக்கு அப்புறம் அரங்கேறியது. நம் பதிவர்களில் நிறைய பேர் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் என அனைவரும் இருப்பார்கள் உங்களில் பலபேருக்கு சமையல் தெரிந்து இருக்கும் தெரியாமலும் இருக்கும் நீங்கள் சிக்கன் செய்ய விரும்பினால் உங்களுக்கு எல்லாம் உதவும் என்ற வகையில் எனக்கு தெரிந்த எங்கள் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான பள்ளிபாளையம் சிக்கன் எப்படி செய்வது என்று சொல்கிறேன். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள் பள்ளிபாளையம் சிக்கனை.


பள்ளிபாளையம் சிக்கன்


தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ

சின்னவெங்காயம் - கால் கிலோ

வரமிளகாய் - 10 ( மிளகாய் உள் இருக்கும் விதைகளை எடுத்து விடவேண்டும்)

தேங்காய் - 1 (சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்)

சிக்கன் மசாலா - 50 கிராம்

எண்ணெய் - 6 ஸ்பூன்

கறிவேப்பில்லை - 6 இலை

கொத்தமல்லி - 6 இலை

மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு

செய்முறை

சிக்கனை சுத்தமாக தண்ணீரில் அலாசி தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்ற கடுகு பொறிய விடவேண்டும். பின் வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும் வதக்கும் போது மஞ்சள் தூள் கொஞ்சம் சிக்கன் மசாலா துளை போட்டு கொஞசம் தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும் சிக்கன் வேகும் போது கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உப்பு தேவையான அளவு போட்டு விட்டு 20 நிமிடம் கழித்து நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து சிக்கனை வேக விடவேண்டும். சிக்கன் வெந்துவிட்டதா என ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு பாருங்கள் வெந்த உடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி வைத்து சாப்பிட ஆரம்பிக்கவும். இப்ப சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார். இந்த பள்ளிபாளையம் சிக்கன் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலம்.

நண்பர்களே நீங்களும் செய்து சாப்பிட்டு இந்த சுவையை அனுபவியுங்கள்.

13 comments:

  1. அண்ணே, என்னோட ஃபேவரிட்! ஒரு வாட்டி ஈரோடு வந்திருத்தப்போ என் நண்பர் பெருந்துறை ரோட்டுலே ஒரு டாபாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி பள்ளிப்பாளையம் சிக்கன் ஆர்டர் பண்ணினாரு! தேங்காய் தூக்கலாப்போட்டு, நல்ல காரசாரமா....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! நாக்குலே தண்ணி ஊறுதுண்ணே! ஆஹா!

    ReplyDelete
  2. நாங்கூட ரொம்ப கஷ்டம்னு நெனச்சேன்... சிம்பிளாத்தான் இருக்கு.... நன்றிங்க....

    ReplyDelete
  3. எளிதான செய்முறை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பசி நேரத்தில் படித்தேன்.. அடடா. அசத்தல்

    ReplyDelete
  5. இப்பவே நாக்கு ஊறுதே....

    இந்த சண்டே நான் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் அண்ணா...

    :-)

    ReplyDelete
  6. சிக்கன் சூப்பர்!
    visit my blog
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  7. ரொம்ப சுலபமான செய்முறையா இருக்குது.

    பகிர்வுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
  8. அருமை !!
    தொடருங்கள் ... வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கோழிக்கு கூடவா பேர் வைப்பாங்க:)

    ReplyDelete
  10. கைவசம் தொழில் ரெஸ்சன் பற்றி கவலை படவேண்டாம் ..

    ReplyDelete
  11. ரொம்ப சுலபமான செய்முறையா இருக்குது. இந்த சண்டே நான் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் அண்ணா...நாங்கூட ரொம்ப கஷ்டம்னு நெனச்சேன்... சிம்பிளாத்தான் இருக்கு.... நன்றிங்க....

    M.BOOPATHI
    NATIONAL INFORMATICS CENTRE,
    C.G.O.COMPLEX,
    NEW DELHI.
    INDIA

    ReplyDelete