Saturday, April 24, 2010

எங்க ஊர் திருவிழா....

நீங்க வெளி நாட்டில் இருக்கலாம், அல்லது வேலை விசயமாக வெளியூரில் இருக்கலாம், பெண்கள் தங்கள் புகுந்த ஊரில் இருக்கலாம், ஆண்களோ பெண்களோ வெளியூருக்கு குடி பெயர்ந்து இருக்கலாம் ஆனால் எல்லாருக்கும் சொந்த ஊர் என கண்டிப்பாக இருக்கும். எனக்கு சொந்த ஊர் பிடிக்காது என சொல்லுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்த ஊரில் அதுவும் கிராமமாக இருந்தால் நிச்சயம் அந்த ஊரில் திருவிழா தான் முக்கிய அங்கம் வகிக்கும். அந்த திருவிழா இப்ப எங்க ஊர்ல ஆரம்பிச்சிருச்சு...

என் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே சித்தார் என்னும் கிராமம் எங்க கிராமத்துல மாரியம்மனுக்கு பூச்சாட்டியாச்சு என எங்கப்பா சொன்னார். நான் படித்து முடித்து வேலைக்கு வந்ததற்கு அப்புறம் கோயில் திருவிழாவை திருவிழா அன்று புதன், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் மட்டும் தான் இப்பவெல்லாம் போக முடியுது. எனக்கு ஞாபகம் தெரிந்தில் இருந்து எங்க ஊர் கோயில் கம்பம் நட்டு விட்டால் எங்களுக்கொல்லாம் ஒரே கொண்டாட்டம் தான் எங்க திருவிழா எப்பவும் மே முதல் வாரத்தில் தான் வரும் பள்ளி, கல்லூரி எல்லாம் விடுமுறை நாள் என்பதால் 15 நாளும் எங்களுக்கு கொண்டாட்டமே.

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான் கம்பம் நடுதல், சாமி ஊர்வலம், முப்போடு, பாரா நடத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை மிக முக்கியமாக கிடா வெட்டுதல், மஞ்சள் நீராடுதல் என 15 நாட்களுக்கு ஒரே ஆட்டம் பாட்டமாக இருக்கும். இது தவிர இரவு நேரங்களில் பட்டிமன்றம், நாடகம், பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என களை கட்டும் (2 வருடங்களுக்கு முன்பு நீக்ரோ பாய்ஸ் ஆட்டம், திரைப்பட நாட்டிய நிகழ்ச்சி என்ற பெயரில் 3 நாட்களுக்கு குத்தாட்டம் நடை பெறும் இப்ப அதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது) கம்பம் நட்டு விட்டால் அசைவ உணவுகள் சாப்பிடமாட்டோம், ஹோட்டலில் சாப்பிட மாட்டோம், எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்து விடுவோம் என்ற ஊர்கட்டுப்பாடு உண்டு.

கம்பத்து ஆட்டம்

மாரியம்மன் கோயிலில் திருவிழாக் காலங்களில் மிக முக்கியமானது அதுவும் இளைஞர்கள் விருப்பப்படுவது. கம்பத்து ஆட்டம் தான். எங்கள் ஊரில் நெம்பர் தாத்தா என்று ஒருவர் இருக்கிறார் அவர் என் நண்பனின் தாத்தாவும் கூட அவர் தான் எங்கள் கம்பத்து ஆட்டத்தின் குரு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 4 வரிசையாக நின்று கொண்டு தாத்தாவின் சொல்படி ஆடுவோம். 1ம் அடி, 2 ம் அடி, 3ம் அடி என 13 வகையான ஆட்டங்களை எங்களுக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். இந்த 13 வகையான ஆட்டமும் எனக்கு அத்துப்பிடி. கம்பம் நட்ட முதல் நாள் ஆட்டம் ஆட மாட்டோம் இரண்டாம் நாளில் இருந்து இரவு 8 மணிக்கு ஆரம்பித்தால் 12 மணி வரை ஆட்டம் களை கட்டும். இந்த ஆட்டத்தைக் காண ஊர் மக்கள் எல்லாம் திரண்டு இருப்பார்கள் அதுவும் என் நண்பர்கள் எல்லாம் அவர்களின் தோழிகள் ஆட்டத்தை காண வந்து இருந்தால் ஆட்டம் இன்னும் களை கட்டும்.

கம்பத்து ஆட்டம் ஒவ்வொரு ஊரிற்கும் வேறுபாடு உண்டு. ஒரு சில ஊரில் கம்பத்தை சுற்றி ஆடுவார்கள் எங்கள் ஊரில் கம்பத்தின் முன் தான் ஆடுவோம். கம்பத்து ஆட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஆட்டம் காவடி சிந்து என்னும் ஆட்டம் தான். இந்த ஆட்டத்தை மட்டும் மேளம் அடிப்பவர்களை 3 முறைக்கு மேல் இதே ஆட்டத்தை கேட்டு ஆடுவாம். இந்த ஆட்டம் ஆடும் போது எங்க ஊர் நெம்பர் தாத்தா அவர்கள் இதற்கு தாளம் சொல்லுவார் தகிம்தா தகிம்தா தகிம்தா தந்தனத்தோம் தகிம்தா இன்றும் என் காதில் ஒளிக்கிறது.

கரகாட்டம், ஒயிலாட்டம்

கம்பத்து ஆட்டம 13 நாட்களுக்கு நடக்கும் 13 வது நாள் செவ்வாய் அன்று இரவு காவிரி கரையில் இருந்து சாமி ஊர்வலமாக புறப்பட்டு கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கையும் ஊர்வலம் நடைபெறும். கரகாட்டத்தையும், குறவன் குறத்தி ஆட்டத்தையும் பார்க்க கூட்டம் அலைமோதும். சுமார் 1 மணி நேரத்திற்கு வாணவேடிக்கை நடக்கும் சுற்று வட்டார கிராமங்களில் இருப்பவர்கள் எல்லாம் அங்கு கூடியிருப்பர். அடுத்த நாள் புதன்கிழமை காலை முப்போடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். கம்பம் நட்ட நாள் முதல் பூசாரி கோயிலில் தான் தங்கி இருப்பார் அவர் தான் முப்போடு எடுப்பார் அன்று இரவு பாரா நடக்கும் நிகழ்ச்சி நடக்கும் பாரா நடப்பது என்றால் கோயிலைச்சுற்றி விடியும் வரை நடக்கவேண்டும் இதற்கு பெயர் தான் பாரா நடத்தல்.

திருவிழா நாள்

வியாழக்கிழமை தான் திருவிழா நாள் நானும் என் நண்பர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால் திருவிழா அன்று தான் ஊரிற்கு செல்லோம் அன்று காலை தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கும் அந்த ஊர்வலத்துக்கு முன் ஒரு 3 மணி நேரம் எங்க ஆட்டத்தை பட்டையக்கிளப்புவோம். அன்று தான் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும் அழகு குத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு ஊரில் நாடகம், பாட்டுகச்சேரி, கூத்து போன்ற எதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.

மஞ்சள் நீராடல்


வெள்ளிக்கிழமை காலை கம்பத்ைதை எடுத்து ஆற்றில் கரைத்து விடுவர் பின்பு சாமி ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டு விழா நடை பெறும். அன்று ஊரில் போற வர்றவங்க எங்களுக்கு பிடிச்சவங்க என ஆண் பெண் பேதமின்றி எல்லார் மேலேயும் தண்ணீர் ஊற்றுவோம், மஞ்சள் நீர் என்ற பெயரில் சாயம் கலந்து கலக்கி விடுவோம். நண்பர்களை ரோட்டில் போட்டு உருட்டுவோம் அன்றுடன் திருவிழா நிறைவுபெறும்..

இந்த வருடம் வரும் மே 5, 6, 7 தான் திருவிழா நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஊரிற்கு சென்று திருவிழா கொண்டாடா.....

சொர்க்கமே என்றாலும்
அது
நம் ஊரப் போல
வருமா?
..................உண்மையான வரிகள்...

21 comments:

  1. //இந்த 13 வகையான ஆட்டமும் எனக்கு அத்துப்பிடி.//

    ஆஹா அருமை பங்காளி, நேர்ல பார்க்கும்போது ஒரு ஆட்டம் போடுங்க!


    //எங்களுக்கு பிடிச்சவங்க என ஆண் பெண் பேதமின்றி எல்லார் மேலேயும் தண்ணீர் ஊற்றுவோம்,//

    மஞ்சள் நீராடல் என நாங்களும் பண்ணுவோம்...

    //சொர்க்கமே என்றாலும்
    அது நம் ஊரப் போல வருமா?
    //
    சொந்த ஊரப்போல வருமா!.....

    அருமை பங்காளி... முடிச்சிட்டு தயாரா இருங்க, அனுபவங்கள நம்மோட பகிர்ந்துக்க!

    பிரபாகர்...

    ReplyDelete
  2. கட்டாயம் வரணும் போல இருக்கு சங்கவி... கடைசியில் உண்மைய உளறிட்டீங்க

    ReplyDelete
  3. வாங்க பங்காளி....

    இந்த முறை எங்க திருவிழாவை உங்கள் பார்வைக்கு அழகான புகைப்படங்களுடன் விரைவில்.....

    ReplyDelete
  4. வாங்க றமேஸ்.....

    பதிவுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்குந்தான்.....

    ReplyDelete
  5. ஆஹா ! உங்களின் திருவிழா பற்றிய இந்த பதிவு நேரில் சென்று திருவிழாவை பார்த்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது .மிகவும் ரசிக்கும் வகையில் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிறீர்கள் நண்பரே .
    வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !



    ஏலே மக்கா மறக்காம அடுத்த திருவிழாவிற்கு கூப்பிடணும்ல ஆமா .

    ஏலே மீண்டும் வருவேன் திருவிழாவிற்கு இல்லைல ,உங்க பதிவை படிக்க .

    ReplyDelete
  6. ஊரில் திருவிழாவா.. போயிட்டு வந்து எல்லாத்தையும் சொல்லணும் ஆமா..

    கம்பத்து ஆட்டமும் சிலம்பாட்டமும் ஒண்ணுதானா,.. வேறயா?..

    ReplyDelete
  7. //அதுவும் என் நண்பர்கள் எல்லாம் அவர்களின் தோழிகள் ஆட்டத்தை காண வந்து இருந்தால் ஆட்டம் இன்னும் களை கட்டும்.//

    ஏனுங்க பிரதர் உங்க தோழியெல்லாம் உங்க ஆட்டத்தைப் பாக்க மாட்டாங்களா -:))

    ReplyDelete
  8. இன்னும் ஈரோடு நோம்பிக்கே பீல் பண்ணி முடிக்கல,
    அதுக்குள்ள அடுத்ததா ????
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. கண்டிப்பாக நிறைய புகைப்படங்கள் எடுத்து, தொகுத்து எழுதி - எங்களுக்கு பதிவுலகில் - உங்கள் ஊரு திருவிழாவை காட்டி விடுங்கள்.

    ReplyDelete
  10. கொடுத்து வச்சிருக்கீங்க.வேற என்ன சொல்ல !அவ்ளோ சந்தோஷமாயிருக்கு சங்கவி.
    எனக்குமாச் சேர்த்து வேண்டிக்கிட்டு வாங்க !

    ReplyDelete
  11. கிரரமத்துத் திருவிழா மனம் நிறைந்த இடுகை.

    கம்பத்து ஆட்டம் சந்தோசமாய் இருக்கு.

    படம் போடுங்க சங்கவி.

    ReplyDelete
  12. மிகுந்து அனுபவித்து எழுதி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  13. @சங்கவி

    நீங்க ஈரோடா .. நமக்கு சொந்த ஊர் சேலம். படிச்சது திருசெங்கோடு. உங்க ஊர் பக்கம் வந்திருக்கேன். என்ன சொல்லுங்க, நம்ம ஊர் பண்டிகைக்கு இணை வரத்து. நான் ஆடி மாசத்துக்கு காத்திருக்கேன்,

    ReplyDelete
  14. திருவிழா நினைவுகள் அருமை.

    ReplyDelete
  15. அடுத்தமுறை ஊருக்குப்போனால் படம் பிடிச்சு அதையும் போடுங்க

    ReplyDelete
  16. உங்க கிராமத்துத் திருவிழாவுக்கு எங்களையும் கூட்டிக்கிட்டு போனதுக்கு ரொம்ப நன்றி!

    ReplyDelete
  17. ஏஞ்சாமி,

    பங்காளிகளுக்கு அழைப்பு-கிழைப்பு இன்னும் கெடையாதா?

    கோவம் கோவமா வருதுயா உம்மேல.!

    ReplyDelete
  18. எங்க ஊர்லயும் சாமி சாட்டிருக்காங்கலாம் போறதுக்கு முடியாதுன்னு தோணுது. உங்க ஊர் நோம்பிய பதிவு பண்ணுங்க.. நாஞ்சந்தோசப் பட்டுக்கறேன்.

    ReplyDelete
  19. பதிவு சூப்பர்ங்ணா! ஆனா என்ன, ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா போட்டோ போட்டிருந்தீங்கன்னா என்னைய மாதிரி அரைவேக்காடுங்களுக்குப் புரிஞ்சு, இன்னும் நல்லா ரசிச்சிருப்போம்!

    ReplyDelete
  20. Ur full name is Sankameswaran?

    ReplyDelete
  21. ROMBA SANTHOSHAMA IRUKU SANGAVI.IPPAVE PONUM POLA IRUKKU

    ReplyDelete