Sunday, February 7, 2010

தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்

மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை சங்கமம் என்று அழைப்பார்கள். காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுதநதி இம்மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தை கூடுதுறை என்று அழைக்கிறார்கள். இக் கூடுதுறையை தென்னிந்தியாவின் திருவேணி சங்கமம் என்றும் அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் பவானி இங்கு தான் கூடுதுறை அமைந்துள்ளது. ஒவ்வொரு அம்மாவசை அன்றும் கூடுதுறையில் கூட்டம் அலைமோதும்.

சங்கமேஸ்வரர் ஆலயம் அமைப்பு:
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர் திருநணா (பவானி) இறைவன் பெயர் சங்கமேஸ்வரர் இறைவி பெயர் வேதநாயகி, வேதாம்பிகை
பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர்.
கூடுதுறையில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
அம்பிகையின் பெருமை:
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.
இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.
ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
ஆடி 18
பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர். சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர். திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர்.
பரிகார தலம் : 
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது.
இலந்தை பழம் நைவேத்தியம் : 
கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது. மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு.
இத்தளத்தின் சிறப்பு அம்சம்:
அகால மரணமடைந்தவர்களுக்காக "நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம். பிரார்த்தனை குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு. தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாந்திசனி மகன் கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும். ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.
குறிப்பு: இப்பகுதியில் பலர் சிவபெருமான் பக்தர்கள் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சங்கமேஸ்வரன் என்று பெயரிடுகின்றனர். இப்பகுதியில் நிறைய சங்கமேஸ்வரன்கள் உள்ளனர் எனது பாட்டனார் தீவிர சிவ பக்தனாம் அதனால் தான் எனக்கு சங்கமேஸ்வரன் பெயர் வைத்தாரம்.

39 comments:

  1. அருமையான பகிர்வு..
    இந்த இடங்களையெல்லாம் ஒரு சுற்றுவரவேண்டும் என்பது ரொம்ப நாள்ஆசை...

    ReplyDelete
  2. வாங்க நாஞ்சில் பிரதாப்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  3. அட... நம்ம ஊரு பத்தி அழகான இடுகை..

    நன்றி

    ReplyDelete
  4. இப்பகுதியில் நிறைய சங்கமேஸ்வரன்கள் உள்ளனர் எனது பாட்டனார் தீவிர சிவ பக்தனாம் அதனால் தான் எனக்கு சங்கமேஸ்வரன் பெயர் வைத்தாரம்.

    .............இந்த பெயரை முதல் முறையா கேட்கிறேன். பெயர் மற்றும் பெயர் காரணம் - எல்லாமே புதுமை.

    ReplyDelete
  5. அருமையான இடங்களை பற்றிய எளிய பகிர்விற்கு நன்றி சங்கவி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு சங்கவி.

    பெயர் காரணம் நிறைய பேருக்கு இப்படித்தான் :)

    ReplyDelete
  7. வாங்க கதிர்....

    //அட... நம்ம ஊரு பத்தி அழகான இடுகை..//

    நம்ம கொங்கு மண்ணின் அழகே அழகு தாங்க....

    ReplyDelete
  8. வாங்க சித்ரா வாங்க...

    இன்னும் இது போல வித்தியாசமான பெயர்கள் நிறைய உள்ளன....

    ReplyDelete
  9. வாங்க வண்ணத்துப்பூச்சியாரே...

    ரொம்ப நாளா பதிவையேக் காணவில்லை...

    ReplyDelete
  10. வாங்க ஷங்கர்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. அருமையான இடம். விரிவான பதிவு சங்கவி.

    ReplyDelete
  12. வாங்க மாதேவி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  13. அருமை. கொங்கு நாட்டை பற்றி இன்னும் அறிய ஆவலை தூண்டுகிறது.

    நன்றி.

    ReplyDelete
  14. என் அப்பா அஸ்தி கரைக்க நேற்று அங்கேதான் சென்றிருந்தோம்.. நேரில் மிக அழுக்காக குளிக்க அருவெறுப்பாக இருந்தது :((

    ReplyDelete
  15. நமக்கெல்லாம் எங்கும் செல்வதற்கான வாய்ப்பே கிட்டுவதில்லை. இம்மாதிரியான பதிவு மனசை சந்தோஷப் படுத்துகிறது.

    ReplyDelete
  16. வாங்க Vetrimagal....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  17. வாங்க மயில்...

    //நேரில் மிக அழுக்காக குளிக்க அருவெறுப்பாக இருந்தது//

    என்ன செய்வது நிர்வாகம் சரி இல்லை....

    ReplyDelete
  18. வாங்க தமிழ்உதயம்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  19. அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
    கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,

    ReplyDelete
  20. தமிழ் உதயம் said...
    நமக்கெல்லாம் எங்கும் செல்வதற்கான வாய்ப்பே கிட்டுவதில்லை. இம்மாதிரியான பதிவு மனசை சந்தோஷப் படுத்துகிறது


    நானும் இதையே சொல்லிக்கிறேன்... நல்ல பகிர்வு.. நிகழ்வுகளை பதிவாக பகிர்வதில் உங்களுக்கு நிகர் நீங்கத்தான்....

    ReplyDelete
  21. வாங்க தமிழரசி...

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  22. வாங்க ராதாகிருஷ்ணன்..

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  23. சங்கமமும்சங்கமேஸ்வரனும் சங்கவியும் அருமை

    ReplyDelete
  24. வாங்க thenammailakshmanan

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  25. சங்கமேஸ்வரன் என பெயர்வைத்து கொண்டு கூடுதுறைபற்றி
    எழுதாமல் இருக்கிறாரே என்று நினைத்தேன்.அருமையான பதிவு எழுதியதற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  26. வாங்க கீதா....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  27. வாங்க சொல்லரசன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  28. கூடுதுறை பற்றி கேள்விப்பட்டிருக்கேன். பார்த்ததில்லை. பாக்கணும்னு தோண வெச்சிட்டீங்க.

    ReplyDelete
  29. அருமையான பகிர்வு.. :)

    ReplyDelete
  30. எங்கள் ஊரில் நிறைய நெல்லையப்பன்கள் உண்டு. சங்கமேஸ்வரன் - அழகான பெயர். பவானி என்றால் ஜமுக்காளம்தான் நினைவு வரும். இவ்வளவு விசேஷம் உண்டா. ஒருமுறை வர தோன்றுகிறது.

    ReplyDelete
  31. அற்புதம் !
    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  32. வாங்க அமைதிச்சாரல்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  33. வாங்க கலகலப்ரியா....


    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  34. வாங்க சகாதேவன்....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  35. வாங்க சங்கர்.....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  36. நல்ல பகிர்வுங்க. இந்த பக்கமெல்லாம் வந்ததேயில்லை. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டுகிறது.

    ஆமாம், பவானி என்றால் ஜமுக்காளம் என்றவரையில்தான் தெரியும் சகாதேவன் சொல்லியிருப்பது போல.

    இலந்தைப் பழம் கண்ணால் பார்த்தே வருடங்களாயிற்று:)!

    ReplyDelete
  37. பிறந்து வளர்ந்தது பவானில் ஆனாலும் அதன் அருமை நீங்க சொல்லி தான் தெரியும் . ரொம்ப நன்றி.

    ReplyDelete