Wednesday, February 29, 2012

அஞ்சறைப்பெட்டி 01/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
கூடங்குளம் விவககாரம் தான் மக்கள் மத்தியில் அதிகம் ஒலிக்கிறது காரணம் எல்லா ஊர்களிலும் மின்சாரம் தடை. கூடங்குளம் இயங்கினாலும் முழுஅளவில் மின்சாரம் தர இயலாது என்பது தான் உண்மை ஆனால் கூடங்குளம் இயங்காத காரணத்தால் தான் மின் தடை ஏற்பட்டுள்ளது என்று சொல்லி சொல்லியே மக்களின் ஆதரவை அரசு அமோகமாகப் பெருவர்.
...............................................................................................

கூடங்குளம் விவகாரத்தில் இன்னும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏனோ.. ஒரு வேளை சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த பின் அம்மாவின் அடுத்த அதிரடி இந்த விவகாரமாத்தான் இருக்கும்...
...............................................................................................

சண்டிகார் மாநிலம், குருஷேத்ரா மாவட்டம் சுனாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கரம்பிர்சிங் (வயது 44). விவசாயியான இவர், உயர் ரக காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளைக்கு யுவராஜ் என்று பெயர் வைத்துள்ளார். இந்த காளை மூலம் கரம்பீர் சிங்குக்கு லட்சம் லட்சமாக வருமானம் கிடைக்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா?. மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வரை உரிமையாளருக்கு இந்த காளை வருமானம் ஈட்டித்தருகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கிறது. உயர் ரக காளை என்பதால், இதன் உயிரணுவுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் மட்டும் உயிரணு விற்பனை முலம் ரூ.12 லட்சம் சம்பாதித்துள்ளது.

இந்த காளை விலங்குகள் கண்காட்சியில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வென்றுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னலில் நேற்று முன்தினம், தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விலங்குகள் கண்காட்சி நடந்தது. இதில் காளை யுவராஜ், சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.24 ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டது. அதே போல், ஹிஸாரில் நடந்த கண்காட்சியிலும், ரூ.16, ஆயிரம் பரிசு வென்றது.

இதுபற்றி, இந்த காளையின் உரிமையாளர் கரம்பீர் சிங் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காளை யுவராஜிடம் இருந்து உயிரணுக்கள் எடுக்கப்படுகிறது. இதுவரை 5000 டோஸ் உயிரணுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு டோஸ் உயிரணு ரூ.300-க்கு விற்கிறேன். உத்தரபிரதேசத்தை சேர்ந்த உயிரணு வங்கியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர், இந்த காளையை ரூ.1 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறினார். ஆனால் கொடுக்க நான் மறுத்துவிட்டேன்.

பரிசுகள் வெல்வதன் மூலம், உயிரணுக்களை விற்பனை செய்வதன் மூலமும் சம்பாதிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
................................................................................................

இடைத்தேர்தல் வெற்றி அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இம்முறை திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் மக்களின் பார்வையும் இப்போது அங்கே தான் இருக்கிறது. ஆனால் இந்தமுறை மதிமுக கணிசமான ஓட்டுகள் வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். கணிசமான ஓட்டுக்கள் வாங்கினால் தான் பாரளுமன்ற தேர்தலில் கணிசமான சீட்டுகள் வாங்க முடியும்.

................................................................................................

மின்சார பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமத்து விவசாயிகள் தான் நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டுக்கள் இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் மின்சாரம் இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரம் தான் அதிகமாக இருக்கிறது. தண்ணீர் பாய்ச்சுவதற்கு போதிய மின்சாரம் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர்..

...............................................................................................

இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதுடன், இலங்கைக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி... தவறு செய்தவர்கள் தண்டனையை அடைந்தே தீரவேண்டும் அந்த வகையில் இவர்களுக்கு தண்டனைக்கு கிடைக்குமா ? பொறுத்திப்போம்...
..................................................................................................

சீனாவில் உள்ள நகரங்களில் ஆண்களுக்கு அதிக அளவில் பொது கழிவறைகள் உள்ளன. பெண்களுக்கு மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கழிவறைக்கு செல்ல பெண்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று ஆண்களின் கழிவறையை கைப்பற்றும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஆண்கள் கழிப்பறையை கைப்பற்றி முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். கையில் 'பேனர்'களை தாங்கி இருந்தனர். அதில் 'ஆண்கள் நேசிப்பதாக இருந்தால் கழிவறைக்கு செல்ல எங்களை காக்க வைக்காதீர்கள்' என எழு தப்பட்டிருந்தது.


இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு குவான்ஷு நகரில் இப்போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆண்களைப் போன்று பெண்களுக்கும் கூடுதலாக கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.
..................................................................................................

 
ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சமீபத்தில் தான் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டியைப் பார்த்தேன் 40 ஓவரில் 320 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சொன்னதால் 20/20 மேட்ச் போல் இருக்கும் என்று ஆவலுடன் ஓடி ஓடி மேட்ச் பார்த்தேன்.. நான் எதிர்பார்த்தபடியே நம் கோலி அடித்த அடியில் உற்சாகம் கரைபுரண்டது.


தகவல்
 
 
ஆழ்ந்த உறக்கத்துக்காக சிலர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் உயிரை பறித்து விடும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 23,500 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள்.

தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய 2 1/2 வருடத்தில் பலவிதமான நோய்களுக்கு ஆளாகினர். இவர் களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 18 முதல் 55 வயதுக்குட் பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூக்க மாத்திரைகள் சாப்பிடும் அளவை பொறுத்து அவர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எனவே, தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது டாக்டர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக வஜிர் அலியின் கவிதைகள் பெயரில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் சமூக கண்ணோட்டத்தோடு இருக்கின்றன அனைவரும் படிக்க வேண்டிய கவிதைகள்...
http://vazeerali.blogspot.in/

 
தத்துவம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

Wednesday, February 22, 2012

அஞ்சறைப்பெட்டி 23/02/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த ஒரு மாதமாக தமிழக போலீசுக்கு தண்ணிகாட்டிக்கொண்டு இருந்த கொள்ளையர்கள் நேற்று இரவு சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்று காலை செய்தியில் பார்த்ததும் மிக மகிழ்ச்சி...

கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு போனவங்க எல்லாம் திரும் வந்துட்டானுக என்று என்ன கிழி கிழி என்று கிழித்தவர்கள் எல்லாம் இன்று காலை கிலி வந்திருக்கும்..

தமிழ்நாட்டு திருடன் என்றால் நம் போலீசார் 15 நாட்களில் கண்டு பிடித்து விடுவர் காரணம் அவனுக பல இடங்களில் திருடி இருப்பானுக அதனால் கைரேகை எப்படியும் கிடைத்து விடும்..

இப்ப தமிழ்நாட்டில் அதிகம் இருப்பது பீகார், உபி, மேற்கு வங்க திருடர்கள் தான் அதிகம் இவனுக ஒரு முறை திருடிவிட்டு அவனுக ஊருக்கு போய்விடுகிறானுக இந்த புது கைரேகையை வைத்து எங்க போய் பிடிக்கறது இதனால் தான் நம்ம போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்திருந்து புதுசு புதுசா யோசிச்சு இந்த திருடர்களை என்கவுண்டர் செய்த தமிழக போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட்....

...............................................................................................

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் ஏற்கவே சூடு பிடித்த நிலையில் தேமுதிகவும் அம்மாவின் சவாலை ஏற்று போட்டி இடுவதாக அறிவித்துள்ளது. இன்னும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மந்திரிகள் கூட்டம் அங்கு முகாமிட்டு தீவிர ஓட்டு வேட்டையாடிக்கொண்டு இருக்கின்றனர். திமுகவும், மதிமுகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டன ஆக மொத்தம் இந்த இடைத்தேர்தல் பணம் கொட்டும் தேர்தலாக இருக்கும்... வாழ்த்துக்கள் சங்கரன்கோவில் அதிஷ்டசாலி வாக்களர்களுக்கு...

...............................................................................................

பெங்களூர் வழக்கில் மாற்றம் ஏற்பட்டு அம்மாவுக்கு இந்த வழக்கில் பிரச்சனை இருக்காது என்பது போல் இருப்பதால் உடனே சிபிஐ அம்மாவின் மேல் உள்ள பிறந்தநாள் பரிசு வழக்கை தூசி தட்டு எடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர் உச்சநுதிமன்றமும் ஏற்று நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.. இந்த வழக்கு அம்மாவின் மேல் உள்ள கோபத்தில் அவரை மனஉளைச்சல் ஏற்படுத்துவதற்காகவே போடப்பட்டுள்ளது போல் உள்ளது..

எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா சொன்னது போல் எதையும் சந்திக்கும் மனதைரியம் அம்மாவிற்கு உண்டு..
................................................................................................

கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் இன்று டெல்லி வருகிறார். இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் வருகிறாராம்..

நம்ம ஆளுங்கல இந்தப்பக்கம் தினமும் அடிச்சு விரட்டறானுக ஆனா நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் உடனே போகிறாரா இல்லை மாநிலத்தில் ஆளும் கட்சிகள் தொடந்து கடிதம் அனுப்பினாலும் அதை அந்த நாட்டிடம் பேசுவதற்காக இது வரை சென்ற மாதிதி தெரியவில்லை... இத்தாலிக்காரங்கள பாருங்க ஒரு வாரத்தில் அவர்கள் ஆட்களை பாதுகாக்க எத்தனை முயற்சிகள் எடுதிது வருகின்றனர்.. நாமூம் தான் இருக்கோமே...

................................................................................................

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பள்ளியொன்றில் 12 இளம் மாணவிகளுக்கு ஒரே வகையான அதிசயமான நோய் அறிகுறியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Conversion Disorder அல்லது Mass Hysteria என அழைக்கப்படும் இந்நோய் அறிகுறி, அவர்கள் மன உளைச்சலுக்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ ஆளாகும் போது திடீரென அவர்களது உடலில் ஏற்பட்டுவிடுகிறது.

தங்களுக்குள் இந்நோய் அறிகுறி ஒரே மாதிரியாக இருப்பதே நீண்ட தேடுதலுக்கு பின்னர் தான் அந்த மானவிகளுக்கு தெரியவந்துள்ளது. மிக அரிதான நிகழ்வாக இதை குறிப்பிடும் டாக்டர்கள், அவர்கள் நடிக்கவில்லை. உண்மையில் இதனால் வலியை உணர்கின்றனர். முன்னர் உலகெங்கிலும் பல பாகங்களில் இது நடைபெற்றுள்ளது. ஆனால் இதை உளவியல் சிகிச்சை மூலம் முற்றாக குணப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பார்வை மங்குதல், பேச முடியாமல் தவித்தல், உடல் உதறுதல், நரம்பியல் சார்ந்த சில பிரச்சினைகளை எதிர்கொள்ளல், என அனைத்தும் ஒரே நேரத்தில் இவர்களுக்கு திடீர் திடீரென வந்து போகிறது. 'நன்றாகத்தான் இருக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் நித்திரையிலிருந்து காலையில் எழுந்ததும் இப்பிரச்சினை தொடங்கிவிடுகிறது 

..................................................................................................

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென் (41). இவரது மனைவி தெரசா (32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி (5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான். ஷாஜெரியின் 3-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவன் தான் ஆண் அல்ல, பெண் என்பதை உணர்ந்தான். தனது பெற்றோரிடம் நான் பெண் குழந்தை என கூறி அடம்பிடித்தான். 
ஆண் குழந்தைகள் விளையாடும் பொம்மையை தூக்கி எறிந்து விட்டு பெண் குழந்தைகளுக்கான பொம்மையை எடுத்து விளையாட தொடங்கினான். அவனின் இந்த நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியது. உடனே, அவனை மனோதத்துவ டாக்டரிம் அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை என அவனது மூளையும் மனதும் சொல்கிறது.
எனவே அவன் மனதளவில் பெண் குழந்தைதான் என்று தெரிவித்தார்.   அதைத் தொடர்ந்து அவன் தனது 5 வயதில் பெண்ணாக மாறினான். பெண் குழந்தைகளுக்குரிய ஆடைகள், அணிகலன்களை அணிகிறான். நீண்ட முடி வளர்த்து இருக்கிறான். தற்போது அவன் படிக்கும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறையை பயன்படுத்தி வருகிறான். அவனது இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் சம்மதித்து பெண் குழந்தையாக வளர்த்து வருகின்றனர்.
.................................................................................................


தியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது.

தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.

.................................................................................................

24.02.2012 நாளை பிறந்த நாள் காணும் இன்று தமிழகத்தின் முதல்வர் நாளை இந்தியாவின் பிரதமராகும் எங்கள் அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

தகவல்
உண்ணாவிரதம் இருந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்
உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
அவர்கள் நீண்டநாள் உயிர் வாழமுடியும் என தெரிய வந்துள்ளது.   ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது. குறைவான அளவு உணவு சாப்பிடுவதால் மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன.
இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம். 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் கீதாமஞ்சரி என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆஸ்த்திரேலிய பள்ளிகள் பற்றி அற்புதமான தொடர் கட்டுரை எழுதி வருகிறார் நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று...

http://geethamanjari.blogspot.in/
தத்துவம்

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.  

Sunday, February 19, 2012

சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் இளைஞனுக்கு வாருங்கள் உதவுவோம்...

நம் தமிழ் இளைஞன் ஒருவர் (மகேந்திரன்) சத்திமில்லாமல் கல்விக்காக பல திட்டங்களை துவங்கி அது வெற்றி பெற பல முயற்சிகள் செய்து சில வெற்றிகளும் பெற்றுள்ளார். 

நண்பர் அன்பழகன் மூலம் அறிமுகமான இவர் எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்பி இருந்தார் அதன் மூலம் அவரின் கல்வித்திட்டம் பற்றியும் அதற்காக அவர் பெற்ற விருதையும் இனி பெறப்போகும் விருதையும் அறிந்தேன் நாம் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் அவர் வெற்றி இன்னும் அதிகமாகும்.. மகேந்திரனைப்பற்றியும், அவரின் திட்டங்கள் பற்றியும்...


 தமிழகத்தை சார்ந்த மகேந்திரன் மற்றும் குழுவினர்  அனைத்து சுற்றுகளையும் தண்டி  "இந்தியாவின் தலைசிறந்த திட்டம் - (India's Top innovative Concept)" பட்டதை வென்றனர். இவர்களது திட்ட நேர்காணல் மட்டும் (முழு திட்ட வடிவமைப்பை வெளியிட கூடது ) NDTV profit ஒளிபரப்ப படவிருகிறது.

இவர்களது திட்டம் - Dreamkampus - innovate! educate!  

கல்வி அமைப்பில்  ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது இவர்களில் எண்ணம். அதிலும் கிராமப்புறம் மற்றும் குறு நகரன்கிளில் உள்ள பள்ளி கல்லூரிகளை சர்வதேச அளவில் கற்பிக்கும் முறையில்  மாற்றவேண்டும். அனைவர்க்கும் எளிமையான முறையில் கல்வி கிடைக்க செய்வது இவர்களில் குறிக்கோள். இதற்கான மென்பொருள் வடிவமைப்பை உருவாக்குவது மற்றும் அதை கல்ல்விக்காக மட்டுமே உபயோகிப்பது, கிராமப்புற ஆசிரியர்களுக்கு பெரிய பேராசிரியர்கள் உதவு செய்வது, முப்பரிமான (3d) பாட திட்டங்களை வடிவமைப்பது போன்ற பல வளர்சிகளை  கிராமப்புறம் மற்றும் குறு நகரன்கிளில் உள்ள பள்ளி கல்லூரி ஆகியவற்றிகு வழங்குவதின் மூலம் சர்வதேச வளர்ச்சியை உருவாக்க முடியும். 

உதவுங்கள் தமிழ் நண்பர்களே!!

"இந்தியாவின் தலைசிறந்த திட்டம் " தற்போது உங்கள் வோட்டு இருந்தால் பல கிராம மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும். மகேந்திரன் இவர் திருப்பூர்/ ஈரோடு - தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசு/குண்டடம்  கிராமத்தை சார்த்தவர்.  இவரைப் போன்றவற்றுக்கு நாம் உதவி செய்வதம் மூலம் எதிர்கால கல்வி எல்லா கிராமங்களுக்கும் கிடைக்கும்.கிராமத்தில் இருந்து நகரம் தினமும் காலை மாலை  இரண்டு மணிநேர பயணம் பள்ளி கல்விக்காக.  பெற்றோர் சொந்தகளை விட்டு உயர்கல்விக்க வேறு நகரை வந்தது உயர்கல்விக்காக. கிடைத்த வேலையை வைத்து வெளிநாடு சென்று செட்டில் ஆகி இருக்கலாம். ஏனோ தெரியவில்லை செல்லவில்லை. ஒரு முயற்சி நான் கண்ட கனவுகள் "கிராமத்திலும்/சிறு நகரத்திலும் மிகச்சிறந்த கல்விகிடைதால், என் கிராமம் அழியாது,விவசாயம் அழியாது", போன்ற எத்தனையோ உள்ளது. இந்நேரம் அறிவியல் முறைகளை என்னை சுற்றி உள்ள மக்களுக்கே சொல்லி இருப்பேன். இதை மேலும் மேலும் வளர விட மனம் இல்லை. அதுதான் "dreamkampus" - யன் கனவுகளையும் நாம் கற்ற கல்வியையும் இணைத்து ஒரு புதிய கோணத்தில் பயணத்தை தொடங்கி உள்ளோம். 

லெனோவோ டூ நெட்வொர்க் (Lenovo Do network) - நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய பத்து திட்டங்களை தேர்தெடுக்கும் ஒரு தளம். இதில் எல்லா  துறையில் இருந்தும் பங்கேற்கலாம். அவை "இந்தியாவின் தலைசிறந்த திட்டம்-India's Top innovative Concept " பட்டதை வெல்ல முடியும். மேலும் ஒரு திட்டம் மக்கள் வாக்கெடுப்பில் $25000 ஊக்கத்தொகையாக பெரும்.

இந்த முறை 27000+ போட்டியளர்கள் பங்கவ்ற்றனர்.கடந்த மூன்று மாத காலமாக மூன்று நிலைகளில் தேர்தெடுப்பு  நடந்தது.
இதில் தமிழகம் சார்த ஒரு குழு "கல்வி முறை மற்றும் கல்வி சார்த்த துறையில் " தேர்தெடுக்க பட்டுள்ளது. 

சோதனைகல் பல !!!

இப்போட்டியில் " இந்தியாவின் தலைசிறந்த திட்டம் - (India's Top innovative Concept)" பாட்டத்தை வெல்வது சுலபம் அல்ல.

 1.ஆறு தகுதி சுற்றுகளில் முதலில் தேர்ச்சி பெற வேண்டும்.
2.முதல் கட்ட வாக்கு மற்றும் சோதனைகளில் தேர்சி பெற வேண்டும்.
3.எட்டு பெரிய தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் குழுக்கள் ஆய்வு செய்யும்.

4.The Mentors / selection board 

1.Rajiv Makhni   - Managing Editor for Technology at NDTV, New-Delhi, India
2.
Rajan Anandan - MD Google India, India
3.
Narvir Chand Sud - Former Scientist G DRDO, Bangalore, India
4.
Mahesh Murthy - Managing Partner at Seedfund; Founder & CEO at Pinstorm; Founder & Principal at passionfund, Mumbai, India
5.
Kishore AK - Co-Founder & CEO of Althea Systems, Bangalore, India
6.
Shantanu Prakash - Chairman and Managing Director of Educomp Solutions Limited, Delhi, India
7.
Maxwell Pereira - CEO- Maxwell Pereira Advisors Pvt Ltd.,Ex-IPS officer, Delhi, India
8.
Shiva Prasad - Dean Academics- Indian Institute of Technology, Bombay, Mumbai,

இந்த குழுவின் தேர்வில் 40/50 போட்டியளர்கள் முழு தகுதிநிலை அடைவார்கள். மேலும் நேர்கானல், கேள்வி சுற்று போன்றவை நடத்தபடும்.

இறுதியாக 10 வல்லுனர்களும் டெல்லிஇல் பிப் 16,17 18 ஆகிய தேதிகளில் அனைவர் முன்னிலையிலும் சமபிர்பார்கள்.இந்த நிலையில் கூட அவர்கள் வெளியேற்ற படலாம்.இன்று காலை முழு அங்கீகாரம் அல்லிகபட்டு  "இந்தியாவின் தலைசிறந்த 10 திட்டம் - (India's Top Ten innovative Concept)" அருவிக்க பட்டது.

இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. நாங்கள் ஒரு வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொருவரும் தினம் ஒரு வாக்கு பதிவு செய்யலாம். எல்லோரிடமும் சொல்லுங்கள் !

உங்களின் மூன்று நிமிட நேரம் ஏதோ ஒரு மாணவனின் வாழ்க்கையாக மாறும்!! 

வாக்களிக்கும் முறை  : 
1.http://donetwork.lenovo.com/in/project-detail_1759_Dream-Kampus.html  தலத்தில் உள்ள அவர்கள் த்திடர்திற்கு நீல நிற "vote for project" லிங்க் 
2.Facebook நுழைவை வைத்து உள்ளே நுழையுங்கள்.
3.இப்போது மீண்டும் வோட்டை பதிவு செய்து உறுதி செய்யுங்கள்
அல்லது - Email முகவரி பதிவு செய்தும் வாகளிகலம்.

மகேந்திரனைப்பற்றி அறிய..
twitter - @mahedreams
நண்பர்களே ....
இப்பதிவின் மூலம் இந்த மாணவனின் திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் இப்பதிவை அனைவருக்கும் கொண்டு செல்லவும்.. இந்த இளைஞனின் முன்னேற்றத்தில் நம் பங்கும் இருக்குட்டும்... அனைவரும் வாக்களிக்கவும்..
தங்கள் அன்புள்ள
சங்கவி...

Thursday, February 16, 2012

வாங்க நாட்டுக்கோழி சாப்பிடலாம்...


எனது பதிவில் நாட்டுக்கோழிச்சாறு பற்றி குறிப்பிட்டு இருந்தேன் நாட்டுக்கோழியின் மீது அலாதி பிரியம் வைத்துள்ள என் இனிய நண்பர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் அதன் செய்முறை சொல்லுங்க ( எங்க வீட்ல நான் சமைக்கிற மேட்டர் தெரிஞ்சிருச்சு போல) என்றார். அவருக்கும் இங்குள்ள  நாட்டுக்கோழி பிரியர்களுக்காகவும் நாட்டுக்கோழியைப் பற்றியும் நாட்டுக் கோழிச்சாறு பற்றியும் இப்பதிவில் பதிகிறேன்..

நாட்டுக்கோழி

கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் 15 வருடங்களுக்கு முன்பு கோழி வளர்ப்பது வழக்கம் அப்போது கோழி என்றால் அது நாட்டுக்கோழி மட்டுமே காலப்போக்கில் பிராய்லர் கோழி வந்த பிறகு நாட்டுக்கோழியுன் தாக்கம் குறைந்தது அதற்கு காரணம் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் மக்கள் சாப்பிடுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக அதிகமாக பிராய்லர் கோழியின் விற்பனை அதிகரித்தது.

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சிறந்தது என்பதால் கடந்த சிலவருடங்களாக நாட்டுக்கோழிக்கு மதிப்பு அதிகரித்தது. அது கிடைப்பது சுலபமல்ல என்பதால் ஆட்டிறைச்சிக்கு ஈடான விலையில் தற்போது நாட்டுக்கோழி விற்பனை ஆகிறது..

இந்த கோழி விற்பனையாளர்கள் நாட்டுக்கோழி நன்றாக விற்பதை அறிந்து பிராய்லர் கோழி போலவே தற்போது நாட்டுக்கோழியை பண்ணையில் வளர்த்து அதே விலைக்கு விற்கின்றனர் அதையும் மக்கள் நாட்டுக்கோழி என்று வாங்கி தற்போது ஏமாறுகின்றனர்..

தற்போது நாட்டுக்கோழி பண்ணை தொழில் கொடிகட்டி பறக்கிறது நாம் இடத்தை காண்பித்து பணம் கொடுத்தால் அவர்களே பண்ணை அமைத்து தீனி கொடுத்து வளர்க்க வைக்கின்றனர் 3 மாதத்திற்கு ஒரு முறை கோழியை பிடித்துச் செல்கிற்னர் மாதம் 10000 முதல் 25000 வரை நம் முதல் போடுவதற்கு ஏற்ற இலாபம் நிச்சயம் உண்டு. ஆனால் இது அசல் நாட்டுக்கோழி அல்ல.

அசல் நாட்டுக்கோழி இன்று கிடைப்பது மிக அரிது கிராமங்களில் தோட்டத்தில் இயற்கை சூழ்நிலையில் வளரும் கோழிகளே அசல் நாட்டுக்கோழிகள்.  எனக்கு வாரம் வாரம் எப்படியாவது எனது நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒரு நாட்டுக்கோழி கொடுத்துவிடுவர். ஞாயிற்றுக்கிழமை காலை எங்கள் ஊரில் இருந்தால் நிச்சயம் நாட்டுக்கோழிச்சாறும் இட்லியும் தான் எனது காலை உணவு.. ( மதிய உணவு தனிக்கதை).


அடுத்து நாட்டுக்கோழியில் இன்னும் அதிக சுவை உள்ளது கோழிச்சண்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இதை எங்கள் பகுதியில் கோச்சை என்று சொல்வோம். இந்த கோச்சைக்கறியும், குழம்பும் சாப்பிடும் போது உலகம் மறந்து இருக்கும் அவ்வளவு சுவை. இந்த கோச்சை கிடைப்பது அரிது கோழிச்சண்டை நடக்கும் இடங்களில் சென்று சண்டையில் இறந்த கோச்சையைத்தான் விற்பனை செய்வார்கள் அதுக்கு பயங்கர போட்டி இருக்கும். நான் கோச்சை பொங்கல் சமயத்தில் சாப்பிட்டேன். சண்டையில் செத்த கோச்சை அல்ல இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடிபட்டுருச்சு அப்புறம் பேசி 3 கிலோ எடையுள்ள கோச்சை 1000 கொடுத்து சந்தோசமாக வாங்க வந்து சாறு காச்சி சாப்பிட்டோம்...

கோழியை வீட்டில் அறுத்து சுத்தம் செய்த காலம் எல்லாம் இப்ப இல்லை கடையில் வாங்கும் போது உயிருடன் உங்கள் முன் அறுத்து வெட்டி தருமாறு பார்த்து வாங்கவும்.



நாட்டுக்கோழிச்சாறு

நாட்டுக்கோழிச்சாறு அல்லது குழம்பு வைப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பக்குவம் என் கைபக்குவத்தை செய்து பார்க்க முயற்சி செய்யுங்க

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய்  1/2 மூடி
கறிவேப்பிலை - 6 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்ப

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி தோல் உறியும் வரை வதக்க வேண்டும்.

அதிலேயே தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து அம்மியில் அரைக்கவும் ( மிக்சியை விட அம்மி சுவை நன்றாக இருக்கும்)

ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
   

பின்னர் இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
   

மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.

அரைச்சமசாலா சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வைக்கவும்.

கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதில் கோழிகறியை மட்டும் தனியாக எடுத்துபோட்டு வதக்கவும்.

வதக்கும் போது கொஞ்சம் கோழிச்சாறு ஒரு 5 கரண்டி ஊற்றி வதக்கி பெப்பர் போட்டு நன்கு கிளறவும்.

இப்போது நாட்டுக்கோழிவறுவல் தயார்.

சூடான இட்லியை இலையில் போட்டு நாட்டுக்கோழிச்சாறு ஊற்றி பிசைந்து சாப்பிடவும் அன்று முழுவதும் அந்த மனமே இருக்கும்.

உடனடி நாட்டுக்கோழி வறுவல்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி  ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்று வெங்காயம், தக்காளி, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

இத்துடன் கோழித்துண்டுகள்,  தேங்காய் துண்டுகள் போட்டு கிளறவும். பின் கடையில் விற்கும் சிக்கன் மசலா பாக்கெட்டை கொட்டி நன்கு வேக விடவும் இப்பொழுது உங்களுக்கு உடனடி நாட்டுக்கோழி வறுவல் ரெடி. 

இந்த முறையில் பிராய்லர் கோழியையும் செய்யலாம்..

Wednesday, February 15, 2012

அஞ்சறைப்பெட்டி 16/02/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
எந்த பக்கம் திரும்பினாலும் மின்வெட்டு அதுவும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 8 மணி நேரம் இது நகர்புறத்தில் கிராமங்களில் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதால் விவசாய நிலங்களுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்ற வருத்ததில் உள்ளனர் விவசாயிகள்..

சென்னைக்கு மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு என்பது கண்டிக்கத்தக்கது. சென்னையில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு தால் மற்ற இடங்களுக்கு அது கிடைக்க வாய்ப்பிருக்கிறது அப்போது எல்லா இடங்களுக்கும் ஒரே சீரான மின்வெட்டு கொண்டுவரலாம்.

மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில் இரவில் நிச்சயம் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவர்களின் எதிர்காலம் கருதியாவது இரவு நேர மின்வெட்டை குறைக்க வேண்டும்...


...............................................................................................

நில அபகரிப்பு சீசன் போல தற்போது வருமான வரி ரெய்டு சீசன்.. பல முன்னாள் மந்திரிகள் வீட்டில் தினமும் ஒரு ரெய்டு நடக்கிறது.. நாளை யாரோ????
................................................................................................

 
வங்கதேச இளைஞர்கள் நம் நாட்டின் 20000 இணையதளத்தை ஹேக்கிங் செய்துள்ளனர்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நம் எல்லைப்பாதுகாப்பு படையினர் மேல் குற்றம் சாட்டி உள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பது போல் நம்ம ஊர் சாப்ட்வேர் என்ஜினியர்கள் எத்தனை பேர் இருப்பாங்களோ அதுதான் அவர்கள் மக்கள் தொகையாக இருக்கும் இருந்தும் 20000 இணையதளத்தை முடக்கிவிட்டனர் கிள்ளாடிகள்...

................................................................................................

சமூக வலைதளங்களை தணிக்கை செய்ய எனக்கு உடன்பாடு இல்லை. இதனை இந்தியாவில் எந்த அரசும் தணிக்கை செய்யாது. ஆனால் நாட்டின் சட்டத்துக்கு ஒவ்வொருவரும் கீழ்படிய வேண்டும். என்று கபில் சிபில் கூறிஉள்ளார்...

நாட்டின் சட்ட திட்டத்துக்கு பொதுமக்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் ஆனால் அரசியல்வாதிகள் தான் கட்டுப்படுவதில்லை முதலில் அவர்களை கட்டுப்படுத்துங்கள் அப்புறம் சமூக இணையதளத்துக்கு வாங்க சார்...

...............................................................................................

சென்னையில் மாணவன் ஆசிரியை கொலை செய்த விவகாரம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டி உள்ளது. ஆசிரியை கொன்ற மாணவன் நிச்சயம் தண்டணை அனுபவித்தே ஆக வேண்டும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. தாய் தந்தைக்கு பின் குரு தான் தெய்வம் என்று சொல்லித்தான் குழுந்தையை அனைவரும் வளர்க்கின்றனர் குருவையே கொலை செய்ய துணிபவனை என்ன செய்வது... காலம் கலி காலமாகிவிட்டது.

..................................................................................................



பேருந்து தினம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு மாணவர்கள் வருடம் தோறும் தொந்தரவு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.  தினமும் செல்லும் பேருந்தில் சந்தோசம் தேவை தான் அதற்காக பொதுமக்களை பாதிக்கும் சந்தோசம் தேவைதானா? 
பேருந்து தினம் கொண்டாட முதலில் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் அனுமதிக்க கூடாது. 100 பேர் சந்தோசத்திற்கு 1000 பேர் துக்கமிருக்க வேண்டி இருக்கு இந்த பேருந்து தினத்தால்...

..................................................................................................

அடுத்து களை கட்டப்போவது சங்கரன்கோயில் இடைத்தேர்தல் இதில் அதிமுக, திமுக, மதிமுகவிற்கு மும்முனைப்போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்கிறோம் தேமுதிக இன்னும் அவர்கள் முடிவை கூறவில்லை. ஆக எப்படி இருந்தாலும் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் பாடுபட்டு நிச்சயம் ஆளுங்கட்சிதான் வெல்லும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...

..................................................................................................



காதலர் தினத்தில் இந்து முண்ணனியில் போராட்டம் தேவையற்ற ஒன்று தினமும் தான் காதலர்கள் நிறைய இடங்களில் கூடுகின்றனர் அங்கு சென்று தாலியைக் கொடுத்து கட்டாயப்படுத்தி கட்டவைக்கலாம் அல்ல. அப்படி இல்லை எனில் கொடுக்கும் தாலியாவது ஒரு 10 பவுனில் கொடுத்து கட்ட சொல்லியிருந்தால் நியாயம் மஞ்சள் கயிறை மட்டும் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது..

இந்து முண்ணனிக்கு முகத்தில் கரி பூசிய பெருமை புதுச்சேரியை சேரும்... இந்து முன்னணி தலைவர் சனில் குமார் மற்றும் முருகையா தலைமையிலான 9 பேர் புதுவையில் உள்ள பாரதி பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. ஆனால் வடிவேலு, உமாமகேஸ்வரி ஜோடி மட்டும் தைரியமாக பெஞ்சில் அமர்ந்திருந்தது.


இது தான் நேரம் என்று வந்த அந்த 9 பேர் அந்த ஜோடியிடம் காதலிக்கவா செய்கிறீர்கள், அப்படி என்றால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தாலியை நீட்டினர். உடனே வடிவேலு எந்தவித பதட்டமும் இன்றி அந்த தாலியை வாங்கி உமா கழுத்தில் கட்டினார்.

இதை இந்து முன்னணியில் எதிர்பார்க்கவில்லை. கெஞ்சுவார்கள், வேண்டுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வடிவேலு தாலியை வாங்க, உமா மகேஸ்வரி கழுத்தை நீட்டவே, சற்றே குழம்பிப் போயினர்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அவர்களில் ஒருவர் ரூ.1001 மற்றும் இன்னொருவர் ரூ.501 மொய்யாகக் கொடுத்தனர். அந்த ஜோடி பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு டக் டக்கென வீறு நடை போட்டு இடத்தைக் காலி செய்தது.

அப்பாடா திருமணம் நடத்தி வைத்துவிட்டோம் என்று அந்த 9 பேர் பெருமிதம் கொண்ட வேளையில் அந்த ஜோடி பைக்கில் ஏறிக் கொண்டது. புறப்படும் முன்பு தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த பெண் தாலியைக் கழற்றி வீசிவிட்டும் சென்றார்.

.................................................................................................

ரூ 24.5 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப் பணம பதுக்கி வைத்துள்ளதன் மூலம், இந்த விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.
நம்ம ஊர்ல என்னடான்னா சோத்துக்கே வழி இல்லாம இருக்கறவங்க எண்ணிக்கையைப்பார்த்தால் எண்ணில் அடங்கா இருக்கு.. இங்க சம்பாரிக்கறவனுக எல்லாம் பணத்த வேற நாட்டில் பதுக்கறானுக.. இந்த பணம் எப்ப இந்தியா வந்து நாம எப்ப வல்லரசாகிறது...


.................................................................................................


குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இனி சிகரெட் குடிக்கும் அப்பாக்கள் எல்லாம் கொஞ்சம் கவனிச்சு குடிங்க...


தகவல்



 அதிக நேரம் தூங்குவது ஆபத்து

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக நேரம் உறங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பெண்களின் தூக்கத்திற்கும் நோய் பாதிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

சராசரி 7 மணிநேர உறக்கம்

50 முதல் 79 வயதுவரை உடைய 93,676 வயதான பெண்மணிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 1994 முதல் 2005 வரை நாடுமுழுவதும் 40 மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் 37.5 சதவிகித பெண்கள் சராசரியக 7 மணிநேரம் உறங்குவதாக தெரிவித்தனர். 26.9 சதவிகித பெண்கள் 6 மணிநேரமும், 8.3 சதவிகித பெண்கள் 5 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதாக தெரிவித்தனர். மேலும் 22.7 சதவிகிதம் பேர் 8 மணிநேரம் உறங்குவதாகவும், 4.6 சதவிகிதம் பேர் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குவதாகவும் கூறியுள்ளனர்.

பக்கவாத நோய் பாதிப்பு

இவர்கள் உறங்கும் நேர அளவைப் பொருத்து பக்கவாத நோய் பாதிப்பு கணக்கிடப்பட்டது. 7 மணிநேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருந்தது. 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்படுவது 14 சதவிகிதமாக இருந்தது. அதேசமயம் 9 மணி நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாதநோய் பாதிப்பு 70 சதவிகிதமாக இருந்தது தெரியவந்தது. எனவே குறைவாக உறங்குபவர்களை விட அதிக நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ரத்தம் உறைந்து விடும்

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் தங்களின் ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தூக்கம் கெட்டாலும் நோய் வரும், அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து சராசரியாக 7 மணிநேரம் உறங்குவதே ஏற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் கிராமத்து கருவாச்சி என்ற பெயரில் எழுதி வருகிறார் கலை என்பவர். மிகவும் ரசிக்கவைக்கும் அதே சமையம் சிந்தனையுள்ள கவிதைகளாக எழுதி அனைவரையும் ரசிக்க வைக்கிறார்... அனைவரும் ரசிக்க வேண்டிய பதிவு...
தத்துவம்
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே.. உனக்கு கொடுத்த பணியை முழு ஊக்கத்துடன் செய்.. வெற்றி உனக்கே...

அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன் தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல்.

போகும் போது என்னை ரசித்து விட்டு போ !!!திரும்ப வர மாட்டேன் இப்படிக்கு காலம்..