Monday, June 28, 2010

உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி


ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.

தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.

மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.

மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.

Tuesday, June 22, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மக்கள் வெள்ளம்.... படங்களுடன்...

கலைஞர் செம்மொழி மாநாட்டை அறிவித்ததும் கோவை களை கட்ட ஆரம்பித்தது. மாநாடு தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று எனது அலுவலகம் முடிந்ததும் 6 மணிக்கு மாநாடு அரங்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என நானும் எனது நண்பனும் சென்றோம். அவிநாசி ரோட்டில் வழக்கமான போக்குவரத்து நெறிசலே இருந்தது. மாநாடு முகப்பை அடைந்தது ஆச்சர்யம் பல ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டு இருந்தது நாங்களும் உள்ளே சென்ற போது தான் ஆச்சர்யம் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் கட்சி வேட்டி கட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஒருவரை கூட நாங்கள் பார்க்க வில்லை.

எங்கு காணினும் மக்கள் வெள்ளம் கோவையில் இதற்கு முன் இது போல் எந்த விழாவும் நடக்க வில்லை இது தான் முதல் முறை. மாநாடு 23ம் தேதிதான் தொடங்குகிறது ஆனால் 21ம் தேதி கோவை மக்களின் கூட்டத்தால் மாநாடு அரங்கம் நிரம்பி வழிந்தது. மாநாடு உணவகத்தை நேற்று காலை தான் துணை முதல்வர் திறந்திருக்கிறார் மாலை உணவகம் நிரம்பி வழிந்தது.

பொதுமக்கள் அதிகம் பேர் குடும்பத்துடன் தான் கலந்து கொண்டனர் செம்மொழி மாநாடு என முகப்பில் எழுத்துக்களால் வைத்து இருக்கிறார்கள் அங்கு புகைப்படம் எடுக்கும் கூட்டம் அதிகம். அநேகமாக வந்தவர்கள் பாதிபேர் புகைப்படக்கருவி உள்ள கைபேசி மூலம் புகைபடங்களை எடுத்து குவித்துக்கொண்டு இருந்தனர்.

மாநட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது மாநாட்டு வளாகத்தை காண கலைஞர் வந்தார் பொதுமக்கள் அனைவரும் அதிக கெடுபிடி இன்றி அவரை பக்கத்தில் பார்த்ததில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கை அசைத்தனர். கலைஞர் கண்காட்சியை பார்வையிட சென்ற போது மூத்த அமைச்சர்கள் எல்லாம் தரைத்தளத்தில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது..

மாநாட்டு பணிகளை முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட செல்லும் போது இரண்டு நிமிடங்கள் மட்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் காவல்துறையினர். இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு மிகவும் உதவினர். மூத்த குடிமகன்கள் எல்லாம் வாகனத்தை நிறுத்தும் போது தடுமாறினர் அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவர்களுக்கு மிகவும் உதவினர்.

மாநாட்டுக்கு சென்று என்னுடைய கைபேசியில் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....


கோவையில் வரலாற்றில் பதியும் இம்மாநாட்டை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்....

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஜூலை 25, 2010ம் நாள் பிற்பகல் 3.45 மணியிலிருந்து மாலை 4.15 வரையிலும், மாநாட்டு வளாகத்தில் இருக்கும் முரசொலி மாறன் அரங்கத்தில், கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார் ஈரோடு கதிர் அவர்கள். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அனைவரும் வந்து உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கண்டுகளிக்குமாறு அன்புடன் வரவேற்கிறேன்......


Saturday, June 19, 2010

100 கோடி மக்கள் இருந்து என்ன செய்வது?

இன்று உலகம் கோப்பை கால்பந்து திருவிழா அரங்கேறி நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. உலக வரைபடத்தில் தேடிப்பார்த்தால் கண்ணுக்கு தெரியாத நாடு எல்லாம் விளையாடிக்கொண்டு இருக்கிறது. 100 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில் ஒரு 11 பேர் கிடைக்கவில்லையா? உலகில் 7 வது பெரிய நாடு நம் நாடு என்று பெருமை பட்டுக்கொள்கிறோம். ஆனால் இங்கு கால்பந்து விளையாட ஆள் இல்லை என்கிறார்கள். விளையாட ஆள் இல்லையா? இல்லை நம் மக்களுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் இல்லையா?


சத்தியமாக ஆர்வம் இருக்கிறது இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் நம் இந்திய மக்கள் ஆசிய கோப்பையை விட கால்பந்து போட்டியையே அதிகம் ரசிக்கின்றனர் என்று ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது. விளையாட்டை நம் ஆட்கள் ஊக்குவிப்பது இல்லை அது தான் உண்மை.

நமது நாட்டில் கால்பந்து அணி இருக்கிறது ஆனால் நம் அணி தகுதிச்சுற்றுக்கு சென்றால் போன விமானத்திலேயே திரும்பி விடுகிறார்கள்.

உலகில் ஒலிம்பிக் நடக்கிறது நம் இந்தியர்கள் 2 வெண்கலம் மட்டும் வாங்கி வருகிறார்கள் இவர்களை 100 கோடி பேரும் பாராட்டுகிறோம். 2 வெண்கலத்துக்கே இப்படி என்றால் 50 தங்கம் வாங்கி வந்தால் 2 நாட்கள் அரசாங்க விடுமுறை நிச்சயம். நம் மக்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அரசாங்கம் பாராட்டுகிறதோ இல்லையோ நம் நாட்டு இளைஞன் அவன் ஊரில் ஒரு பேனர் கட்டி பெருமை கொள்கிறான்.

மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுக்கு என ஒரு தனி அமைச்சர் உள்ளார் அவர் இதற்காக என்ன முயற்சி எடுத்தார் என்று தெரியவில்லை அப்படியே அமைச்சர் முயற்சி எடுத்து ஒரு அணியை உருவாக்கினால் அவருக்கு உயர் பதவியில் உள்ள இன்னொருவர் இது எனக்கு வேண்டிய பையன் இவனை களத்தில் இறக்கு என பல போன்கள் வரும் அப்ப அந்த அணி என்ன ஆகும் நாசமாகத்தான் போகும். இதனால் தான் நம் நாட்டில்  எந்த விளையாட்டும் சோபிக்காமல் போனதுக்கு காரணம்.

சென்னையை சேர்ந்த ஒரு ஏழை மாணவி கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். அதற்கு அம்மாணவி விளம்பரதாரர் பிடித்து விளையாட்டுப் போட்டிக்கு செல்வதற்குள் படாது பாடு பட்டார் பத்திரிக்கைகள் உதவியதால் அரசாங்கம் உதவி செய்து உலக சாம்பியன் பட்டம் பெற்றார். அந்த பெண்ணைப்பற்றி எந்த பத்திரிக்கையிலும் சிறப்பு பேட்டிகள் எல்லாம் இல்லை. அந்த பெண்ணின் பெயர் கூட மறந்து இருப்போம்.  அப் பெண்ணின் மூலம் கேரம் விளையாட்டை பிரபலப்படுத்தி இருந்தால். இன்று நம் நாட்டில் நிச்சயம் நிறைய அற்புதமான கேரம் வீரர்கள் இருப்பார்கள் அவர்கள் திறமை வெளியே தெரியவரும்.

100 கோடி மக்களில் 11 கால்பந்து வீரர்கள் இருக்க மாட்டார்காளா? நிச்சயம் இருப்பார்கள் அவர்கள் யார் என சரியாக நாம் தேர்ந்தெடுக்க வில்லை என்பதே உண்மை. அரசாங்கம் சரியான வழிகாட்டியாக செயல்பட்டு பள்ளியில் இருந்தே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேர்மையாக வீரர்களை தேர்வு செய்தால் நாமும் உலகில் பல சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உண்டு.

Thursday, June 17, 2010

"அரசு மருத்துவமனையும் அதிரடி டாக்டரும்"

புருஷோத்தம் விஜயகுமார் இந்த பேரைக்கேட்டால் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் அலறுகின்றன. அனைத்து பத்திரிக்கைகளிலும் இவரின் செயல் இன்று பிரபலமாகிக்கொண்டு இருக்கின்றது. இவர் தான் இன்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை கூடுதல் இயக்குநர்.

இவர் செய்வது எல்லாம் இவருடன் 2 கண்காணிப்பாளர்கள், 8 உதவியாளர்கள் என்று இன்று தமிழகம் முழுவதும் முன் அறிவிப்பின்றி இ.எஸ்.ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாறு வேடத்தில் சென்று அங்கு நடப்பவற்றை பொறுமையுடன் கவனித்து தவறு செய்யும் அதிகாரிகளை உடனே சஸ்பெண்ட் செய்வது அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வைப்பது தான் இவரின் தனித்துவம்.

இன்று அரசு மருத்துவமனைகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்று நமக்கு நன்றாகவே தெரியும் இவரைப்பற்றிய செய்திகளை படித்த உடன் ஒர் இனம் புரியாத சந்தோசம் நமக்கு. ஒரு அருமையான அதிகாரி கிடைத்து இருக்கிறார் நம் மருத்துவ துறைக்கு என்று. இவர் ஓர் ஊரிற்கு சென்று அங்கு ரெய்டு நடத்தி வரும் ஏழை தாய்மார்களுக்கு நல்ல சிகிச்சை கிடைத்தால் அவர்களின் சந்தோசம் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. இந்த மாதிரி அதிகாரிகளால் உயிர் போகக்கிடந்த ஒருவர் பிழைத்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.

இந்த மருத்துவரைப்பற்றியான செய்தியை நான் ஜீனியர் விகடனில் படித்தேன் உங்கள் பார்வைக்கும்...

பர்தா, அல்லது லுங்கி, சட்டை... இதுதான் நாமக்கார டாக்டரின் சர்ப்ரைஸ் யூனி ஃபார்ம்! சில நாட்களுக்கு முன்பு, பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் பர்தா அணிந்தபடி சென்றார் இந்த நாமக்காரர். வெளி நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் இடத்தில் தலைக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுப்பதைப் பார்த்து அதிர்ந்தார். காயத்துக்குக் கட்டுக் கட்ட பணம் வசூலிப்பதையும் நேரில் பார்த்தார். ஒரு நோயாளி ஆஸ்பத்திரிக்கு வர... ஊழியர் ஒருவரே டாக்டர் ரேஞ்சுக்கு நர்ஸைப் பார்த்து, ''இவருக்கு இன்ன ஊசி போடும்மா...'' என்று மருந்து பேரைச் சொல்லி உத்தரவு போட, நர்ஸ§ம் அந்த ஊசியைக் கூலாகப் போட்டு அனுப்பினார். இந்த மாதிரி பல பகீர் காட்சிகளைக் கண்டு டென்ஷனான நாமக்காரர், படக்கென்று பர்தா வேஷத்தைக் கலைத்தார். தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார்தான் அந்த மாறுவேட டாக்டர்! அந்த ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கிய ஆறு பேர் அந்த ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட்! மற்ற சிலருக்கு கடும் எச்சரிக்கை!

கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்.
இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்திதெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

ஜூன் 10-ம் தேதி மேட்டூரில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஜயகுமாரிடம், ''எப்படி வந்தது இந்த மாறுவேட ஆக்ஷன் ஐடியா?'' என்று நாம் கேட்க... ''கடலூரில் ஒரு பெண் அபார்ஷன் ஆகிற நிலைமையில் வலியால் துடித்தார். வயிற்றில் ஸ்கேன் எடுத்துவரச் சொன்னார்கள். ஒரு வீல் சேர்கூட இல்லை. கதறித் துடித்தவர், தவறி கீழே விழுந்து விட்டார். வலி பொறுக்க முடியாமல் தாயாரின் மடியில் புரண்டு அழுதார். இந்தக் காட்சியை ஓரமாக நின்று பார்த்த நான், பொறுமை இழந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். கோத்தகிரியில் மயக்கவியல் டாக்டர் ஒருவர், அங்கு உள்ள நர்ஸ§க்குப் பிரசவம் பார்த்தார். 10 மணி நேரமாகியும் பிரசவம் நடக்கவில்லை. பிறகு, பிரசவ டாக்டரை அழைத்து வருகிறார். குழந்தை இறந்தே பிறக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் எப்படி விடுவது? குடியாத்தத்தில் மாலை நேரத்தில் தனது ஓய்வறையில் டிரிப் போட்டு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுத்தேன்...

புகார் வந்து பல விஷயங்களில் நடவடிக்கை எடுக்கிறேன். பல இடங்களில் புகார்களை சரிபார்ப்பதற்கு நேரிலேயே போக வேண்டியிருக்கிறது. அப்போது மாறுவேடம் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவரையும், பணியாளரையும் நான் அன்னை தெரசாவாகப் பார்க்கிறேன். ஏழை மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க இப்போது உள்ள அரசாங்கம் தேவையான கருவிகள், மருந்துகள் அனைத்தையும் வாரி வழங்குகின்றன. அதை எல்லாம் ஏழை மக்களுக்குக் கொண்டுசெல்லும் பாலமாகச் செயல்பட வேண்டியவர்கள் மருத்துவத் துறையினர்தான். அவர்களில் ஒருசிலர் தவறாக நடப்பதால், எவ்வளவு ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்! நடவடிக்கைகளுக்குப் பிறகாவது, மருத்துவனைகள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்!'' என்ற விஜயகுமாரை இடைமறித்து,

''நீங்கள் பார்த்த மருத்துவமனைகளிலேயே உங்களை பிரமிக்க வைத்தது எது?'' என்றோம். ''குமரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஊரான குழிபிறையில் இயங்கும் ஆஸ்பத்திரி... நெஞ்சு வலிப்ப தாகச் சொல்லிக்கொண்டு கிராமத்தான் போல நுழைந் தேன். பலவித பரிசோதனைகள் செய்து, ஆம்புலன்ஸ் வைத்து வெளியூருக்குச் சிகிச்சைக்காக அனுப்பும் வரை அக்கறை யாகக் கவனித்தார் அங்கு உள்ள பெண் மருத்துவர் ஒருவர். அதேபோல், மேட்டூர் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த சமையல்காரப் பெண்மணி விஜயா, நான் பலவித கேள்விகள் எழுப்பியபோதும் ரொம்பவும் சின்ஸியராகத் தெரிந்தார். அவருக்கு மனமார பாராட்டுச் சான்றிதழ் தந்துவிட்டு வந்தேன்!'' என்றார்.
'
'உங்களைப் பாதித்த விஷயம்?'' எனக் கேட்டபோது,
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்றார் புருஷோத்தம் விஜயகுமார்!

நன்றி ஜீனியர் விகடன்:

இவர் மேல் பல புகார் கூறினாலும் பார்சல் அனுப்பினாலும் இவரின் பணியை சிறப்பாக செய்த புருஷோத்தம் விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இவரின் பணியை அறிந்து நீங்கள் மேலும் பல மருத்துவமனைகளில் ஆய்வு நடத்துங்கள் என்று பச்சைகொடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் வாழ்த்துக்கள்...

புருஷோத்தம் விஜயகுமார் அவர்களின் இ-மெயில் கிடைத்தால் அவருக்கு இப்பதிவை அனுப்புவது உடன் வாழ்த்தும் சொல்வோம்...யாருக்காவது கிடைத்தால் அனுப்புங்க....

இந்த நேர்மையான அதிகாரியை பற்றி நான் படித்து அறிந்ததை உங்களிடம் பகிர்கிறேன்... நீங்களும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்.....