Wednesday, March 21, 2012

அஞ்சறைப்பெட்டி 22/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு என்று மன்மோகன் அறிவித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் அந்த தீர்மானத்தில் உள்ள விசயங்கள் என்னவோ தமிழ்மக்களுக்கு அதிகம் பயன்படுவது போல் தெரியவில்லை. இந்த தீர்மானத்தில் இலங்கை தோற்றால் அது இலங்கைக்கு நிறைய எதிர்ப்புகளை உருவாக்கும். அவர்கள் செய்த போர்குற்றத்திற்கு தண்டனை அனுபவத்தே தீரவேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்றே நம்புவோம்...
...............................................................................................

கூடங்குளம் விவகாரத்தில் அம்மா சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு அப்புறம் நிச்சயம் முடிவெடுப்பார் என்று ஏற்கனவே அஞ்சறைப்பெட்டியில் எழுதி இருந்த போது நண்பர்கள் அம்மா மேல் உங்களுக்கு ரொம்ப நம்பிக்கைபோல என்று கூறி இருந்தனர்.

 இப்போது அது நடந்து விட்டது கூடங்குளம் அனு உலையால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அது ஆபத்தானது என்று தான் உதயகுமார் தரப்பினர் போராட்டம் நடத்துகின்றனர் இதற்கு ஆரம்பத்தில் அதிக ஆதரவு இருந்தது ஆனால் தற்போது மின்சாரத் தடையின் காரணமாக அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும் நிலைக்கு வந்து விட்டனர்.

அனைவரும் ஆதரவு தருகிறோம் ஆனால் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கு கிடைக்குமா என்று தான் இன்னும் விளங்கவில்லை..

...............................................................................................

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்தது போல் தற்போது குஜராத்தில் இரு எம்எம்ஏக்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். மக்கள் ஓட்டுப்போட்டு மக்களின் பிரச்சனையை பேசு என்று சட்டமன்றத்திற்கு அனுப்பினால் அங்க போய் ஆபாச படம் பார்க்கும் இவர்கள் மக்களுக்காக என்ன பேசப்போகிறார்கள். எம்எல்ஏக்களுக்கு ஆபாச படம் பார்க்க இடமே இல்லை போலும்... மானங்கெட்ட மனிதர்கள்...
................................................................................................

மாநகராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தாததால் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள் பெயரில் ரூ.6. கோடி கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் எம்.பி.க்களின் கட்டண பாக்கி குறித்து டெல்லி மாநகராட்சியிடம் விவரம் கேட்டிருந்தார்.
 
அதற்கு அளித்த பதிலில் ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக 3,335 பில்கள் நிலுவையில் உள்ளது. இதற்கான தொகை ரூ.6.27 கோடியாகும். இதில் அதிக பட்டசமாக முன்னாள் மத்திய மந்திரி கனிகான் சவுத்ரி ரு.42 லட்சம் பாக்கி வைத்துள்ளார். இவர் இறந்துவிட்டார். இவருக்கான கட்டண பாக்கியை யாரும் செலுத்தவில்லை.
 
இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜேஷ்பைலட், சுனில்தத், ஜானேஷ்வர் மிஸ்ரா, ஆகியோர் பெயரிலும் கட்டண பாக்கி உள்ளது. முன்னாள் எம்.பி. சவுத்திரி ரூ.34 லட்சம் டெலிபோன் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோரும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

எது எதுக்கோ கேஸ்போட்டு மானத்தை வாங்குபவர்கள் இதற்கும் கேஸ் போட்டு அவர்களை கோர்ட்டுக்கு இழுத்தால் கட்டாமலா  விட்டுவிடுவார்கள்.. சம்பளம் கொடுக்கும் போதே இதுக்கெல்லாம் பிடிச்சிடனும்...

................................................................................................

கிராமப்புறங்களில் ரூ.22.40-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் நகர்ப்புறங்களில் ரூ. 28.65-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் ஏழைகள் அல்ல. இதற்கு கீழ் உள்ளவர்கள் ஏழைகள் என கூறலாம். நுகர்வோர் குறித்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த வறுமைக்கோடு வரம்பு கொண்டுவரப்படவில்லை என கூறியுள்ளார்.

நாடு வல்லரச ஆகவேண்டும் என்றால் முதலில் இவ்ரைப்போல் ஆட்களை துரத்திவிடனும்.. இவர் இதை அறிவித்ததைப்பார்த்தால் பாரளுமன்ற கேன்டினில் சாப்பிட்டு விட்டு அங்க இருக்கும் விலையை வைத்து சொல்லி இருப்பரோன்னு டவுட்டு???

இவருக்கு சம்பளம் கொடுக்கம் போது ஒரு நாளைக்கு 32 ரூபாய் கணக்கு போட்டு கொடுத்தால் வாங்கிக்குவாரா ?? டவுட்டு?

...............................................................................................
 
கர்நாடக மாநிலம் கார் வாரா பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களை எதிர்த்து காப்ரி என்பவர் போராடி வெற்றி பெற்றார். பின்னர் போர்ச்சுக்கீசியர்களிடம் அடிமைகளாக இருந்த பொது மக்களை மீட்டார். அவர் இறந்த பிறகு அவரது சமாதியை அப்பகுதி மக்கள் கோவிலாக மாற்றி வழிபடத் தொடங்கினர். காப்ரிக்கு மது, பீடி, சிகரெட் என்றால் இஷ்டம். இதனால் காப்ரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரது சமாதியில் மது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள்.
 
பின்னர் பீடி, சிகரெட் பாக்கெட்களை படையலாக வைத்து கும்பிடுகிறார்கள். நேற்று காப்ரியின் ஜெயந்தி விழா என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் அனைவரும் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். மராட்டியத்தில் இருந்து வந்த பக்தர் ஷ்யாம் கூறும் போது எங்களது குலதெய்வம் காப்ரிதான். அவரது சிலைக்கு மது ஊற்றி அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் பலிக்கும். தோஷங்கள் நீங்கும். முன்பைவிட இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றார்.

..................................................................................................

 
பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன். 43 வயதாகும் இவர் தற்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாகவே கருதப்படுகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றவர். இத்தகைய அழகை அவர் எப்படி? பாதுகாக்கிறார் என்ற ரகசியத்துக்கு விடை கிடைத்துள்ளது.  
 
இவர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறார். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறார். 
 
..................................................................................................
 
இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களை விட சங்கரன்கோயில் இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியது காரணம் விலைவாசி உயர்வு, மின்சாரம் இல்லாதது, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவையால் ஆளும் கட்சிக்கு பாதிப்பு இருக்கும் என பல நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அப்படியே ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் ஒட்டுவித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என நடுநிலையாளர்கள் கருத்து இருந்தது ஆனால் அங்கு நடந்தது இதற்கு எதிர்மாறனது இதுவரை இல்லாத எதிர்த்து நின்றவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்து வெற்றி வாகை சூடியது அதிமுக..

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி ஆனால் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் காலியாக்குவது எங்கள் அம்மாவின் புது விதி..

32 மந்திரிகள் வெற்றிக்காக பாடுபட்டார்கள் என்று சொல்கிறார்கள் எதிர்கட்சியில் எத்தனை முன்னாள் மந்திரிகள் வந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல தயங்குகின்றனர்..

மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வென்ற சகோதரி முத்துச்செல்விக்கு வாழ்த்துக்கள்...

தகவல்
அமெரிக்காவில் உள்ள யுதா மாகாணத்தை சேர்ந்தவர் மேரி ஹார்டிசன். 101 வயதான இவர் பாரா கிளைடர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார். இதன் மூலம் மிக அதிக வயதில் பாரா கிளைடரில் பறந்து சாதனை படைத்த பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
 
இது குறித்து அவர் கூறும்போது-
 
தனது 75 வயது மகன் பாரா கிளைடர் விமானத்தில் பறந்து பொழுதை கழித்து வந்தார். அதைப்பார்த்து எனக்கும் அதில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதற்கான பயிற்சி பெற்றேன். தற்போது இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறேன்.
 
இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பாரா கிளைடரில் பறந்து சாதனை படைத்த மேரி ஹார்டிசனை அவரது குடும்பத்தின் 4 தலைமுறையினரும் வாழ்த்தினர்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  இனியவை கூறல் என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார். இவரின் கொங்கு மண்டல வரலாற்று சான்று அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..

http://eniyavaikooral.blogspot.in/
 
தத்துவம்
 
தராசைப்போல் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்பவனே ஞானி. எதையும் சிந்தித்து பார்ப்பவனும் அவனே.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய ஆம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாவைக இருக்கின்றது...

சதுரங்க விளையாட்டைப்போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறது..

Friday, March 16, 2012

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள்...


அழிந்து வரும் நாட்டுப்புறபாடல்களில் வகைகளில் ஒன்றான "ஒப்பாரி " பாடல்.....

என்னப் பெத்த ராசாவே..........

இது நம் தமிழ் மண்ணில் நம் முன்னோர்களால் பாடப்பட்ட நாட்டுப்புறப்பாடலான ஒப்பாரி பாடலின் முதல் வரி ஆகும்.

ஒப்பாரி பாடல்கள் ஏறக்குறைய இன்றைய காலகட்டத்தில் 98 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். கிராமங்களில் வயதான ஒருவர் இறந்து விட்டால் என்றால் அவரை ஒப்பாரி பாட்ல் பாடி அவரது சாதனைகள் வேதனகளைச்சொல்லிதான் அனுப்பிவைப்பார்கள்.

மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு;கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.

ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்று ஆனால் அது இன்றல்ல. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தான் தாலட்டும், ஒப்பாரி பாடல்களும். மனிதனின் தொடக்க காலத்தில் பாடுவது தாலட்டு, அவன் வாழ்க்கை முடிந்து போகையில் பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும். தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.

நான் அறிந்தவரையில் எங்க ஊரில் பொன்னாத்தாள் என்ற ஒரு பாட்டி இருந்தார்கள் யாராவது வீட்டில் இறந்து விட்டார்கள் எனில் பொன்னாத்தாவை தான் கூப்பிடுவார்கள். வயதான வாழ்ந்து அனுபவித்த ஒருவர் இறந்து விட்டர் எனில் அங்கு ஒப்பாரி ரொம்ப பலமாக இருக்கும். அந்த வீடுகளில் ரேடியோ கட்டி ஒருநாள் முழுக்க பொன்னாத்தாள் மைக்பிடித்து ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பிக்கும். அப்படி பாடும் போது அவரின் அருமை பெருமைகள் அனைத்தும் அப்பாடல்களில் வரும். ஆனால் இன்று கால வேகத்தில் ஒப்பாரி என்னும் கிராமியபாடல்களே அழிந்து விட்டது என்றே கூறலாம்.

நான் படித்த சில ஒப்பாரி பாடல்கள்....

இறந்தவர்களின் உறவு முறை அடிப்படையில் ஆரம்பிக்கும் முதல் வரி....

என்னை ஆளவந்த ராசாவே -மனைவி
என்னப் பெத்த சீதேவியே- மகள்
என்ர மகளே- தாய்
என்ர மகனே- தாய்
என்ர பிறவியரே- சகோதரி நான் பெறாமகனே-
பெரியதாய் அல்லது சிறியதாய்


இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் ஒப்பாரி


பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ

பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதற்கான பாடல்....

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன

 **********************************

முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு
நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே

தந்தைக்கும், கணவனுக்கும் பொறுந்தக்கூடிய பாடல்....

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ
மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு.


என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன்


மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல்...

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு
உன்னைகட்டைக்கோ அனுப்புகிறேன்....

இறந்தவர் வீட்டுக்கு இரண்டு நாள் கழித்து துக்கம் விசாரிக்க வருபவருக்கான பாடல்...
“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு
ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்”

இப்படி பல வகையான பாடல்கள் நம் சமூகத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற ஒப்பாரி பாடல்கள் ஆகும். ஆனால் இன்று இவைகள் அழிந்துவிட்டன என்கிற போது வருத்தப்பட வேண்டி உள்ளது...

இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய ஒரு மீள்பதிவு...

Wednesday, March 14, 2012

அஞ்சறைப்பெட்டி 15/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மூன்று இலட்சம் அப்பாவிகளை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரும் போது இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகள் எதிர்ப்பது வழக்கமானதுதான். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோவைப் பார்த்த பின்பாவது மனம் மாற வேண்டாமா ??? என்ன செய்வது தமிழனின் தலைஎழுத்து....
...............................................................................................

ரயில்வே பட்ஜெட்டில் விலை பயணக்கட்டணத்தை உயர்த்தி பட்ஜெட் வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர். இந்த பயணக்கட்டண உயர்விற்கு அவரது கட்சிதலைமையே எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. அமைச்சராக இருந்தும் சுதந்தரமாக செயல்படமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம்...

இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிதாக 10 ரயில்கள் என்று அறிவித்துள்ளனர் இது மிகவும் குறைவுதான் இருந்தாலும் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள்வோம்...
...............................................................................................

முன்எப்போதையும் விட இலங்கை பிரச்சனைக்காக தமிழக கட்சிகள் எல்லாம் பாரளுமன்றத்தில் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக ஒரே பிரச்சனைக்கு கூக்குரலிட்டது வரவேற்கத்தக்கது. இவர்கள் கொடுத்த கூக்குரல் காங்கிரஸ் அரசுக்கு கேக்காது என்பது தனிபிரச்சனை.. இவர்கள் ஒன்றினைந்து கூக்குரலிட்டது எதிர்காலத்தில் பல போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருக்கு...

................................................................................................

தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மந்திரிகளின் முற்றுகையால் செல்வச் செழிப்போடு இருக்கிறது சங்கரன்கோயில். இடைத்தேர்தல் வந்தாலே தொகுதிமக்களுக்கு குஷி தான். ஒவ்வொரு தொகதி மக்களும் மிகுந்து எதிர்பாக்கின்றனர் நம்ம தொகுதிக்க இடைத்தேர்தல் நடக்காதா என்று...

................................................................................................

அழகாக மாற 200 தடவை ஒரு பெண் ஆபரேசன் செய்து கொண்டார். சீனாவில் உள்ள நாங்ஜிங் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியம் அடைத்தனர்.  
 
ஏனெனில் அவரது உடலில் ஏராளமான ஆபரேசன்கள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது உடல் அழகுக்காக 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.  
 
இதனால் அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது எலும்புகள் செல்லரித்து மிகவும் பலவீனமாக உள்ளன. மேலும் அவரது இடது மார்பில் 3 செ. மீட்டர் நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.  
 
இந்த ஆபரேசன்களுக்கு அவர் ரூ. 3 கோடி செலவு செய்துள்ளார். கண் இமைக்கு நேரத்தில் மட்டும் 16 தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.  
 
சிறிதுகாலம் இவர் தென் கொரியாவில் தங்கி இருந்தார். அப்போதுதான் இந்த ஆபரேசன் செய்து இருக்கிறார். இவரது பெற் றோர் வசதி படைத்தவர்கள் என்பதால் இவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளனர். 
 
...............................................................................................

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
 
கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார்.   அவனது, பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
 
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது அதன் காரணமாக இவனை கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
..................................................................................................

இந்தியாவில் 63 சதவீதம் பேரிடம் போன் உள்ளது. ஆனால் 50 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதியே கிடையாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. நாட்டில் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள் ளப்படுகிறது. 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீடுகள், அதில் உள்ள வசதிகள், வாழ்க்கை தரம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் வருமாறு:-
 
நாட்டில் மொத்தம் 24 கோடியே 66 லட்சத்து92 ஆயிரத்து 667 வீடுகள் உள் ளன. இவற்றில் கிராமப் பகுதியில் 16 கோடியே 78 லட்சத்து, 26 ஆயிரத்து 730 வீடுகளும், நகர்ப்பகுதியில் 7 கோடியே 88 லட்சத்து 65 ஆயிரத்து 937 வீடுகளும் அமைந்துள்ளன. இதில் 37 சதவிகிதம் வீடுகள் ஒரே ஒரு அறையை மட்டுமே உடை யது ஆகும். 32 சதவிகிதம் வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் உள்ளன.
 
67 சதவிகிதம் வீடுகளில் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் 54.3 சதவிகி தம் பேரிடமும், நகரங்களில் 82 சதவிகிதம் பேரிடமும் போன் உள்ளது. (டெலி போன் மற்றும் செல்போன் இரண்டும் சேர்த்து சராசரி 63.2 சதவிகிதம்). செல்போன் மட்டும் என்று எடுத்துக் கொண்டால், கிராமங்களில் 47.9 சதவிகிதம் பேரிடமும், நக ரங்களில் 64.3 சதவிகிதம் பேரிடமும் உள்ளது.
 
(சராசரி 53.2 சதவிகிதம்). அதே நேரத்தில், நகரம் மற்றும் கிராமங் களில் உள்ள 53 சதவிகிதம் வீடுகளில் கழிப்பறை வசதியே கிடையாது. நகரங்களில் 81.4 சதவிகிதம் வீடுகளிலும், கிரா மங்களில் 30.7 சதவிகி தம் வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ளன. சமைப் பதற்கு பதிப்பேர் இன்னும் விறகையே பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் 62.5 சதவிகிதம் வீடுகளிலும், நகரங்களில் 20.1 சதவிகிதம் வீடுகளிலும் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகின்றன.

தகவல்
காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான். இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி திடீர் உயிரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகள் உட்கொள்ளும் பாராசிட்டமல் அளவில் ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் அதனால் திடீரென இறந்தும் போய்விடுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
 

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  இவர் Pakee Creation என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கவிதைகள் பெயரில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் காதலர்கள் திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் கவிதைகள்...
http://www.pakeecreation.blogspot.in/
 
தத்துவம்
 
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. மற்றவரை அறிந்தவன் புத்திசாலி; தன்னைத்தான் அறிந்தவன் ஞானி.

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்! அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

Tuesday, March 13, 2012

வெய்யிலுக்கு குளிர்ச்சி + நம்ம ஊருக்கு வயாகரா

 
இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று தான் நானும் இருந்தேன் அதைப்பற்றிய ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் அதற்காக புதிய தகவல்களை நான் தேடும் போது ஒரு பழைய பத்திரிக்கையில் வந்த செய்தியை படிக்கும் போது ஆண்மை விருத்திக்கு தர்பூசணி மிகவும் உதவுகிறது சொல்லப்போனால் அது ஒரு வயகாரா என்று படித்தேன். 
 
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது. 
 
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா' என்பது தான். 
 
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. 
 
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. 
 
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. 
 
அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
 
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாக' எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
 
வெள்ளை பகுதியில்தான்...
 
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
 
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
 
தர்பூசணியின் பயன்கள்:
 
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
 
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
 
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
 
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
 
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
 
வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள். கோடையைக் கொண்டாடுங்கள்.

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "


உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொலவடை. 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா...