Sunday, June 15, 2014

மஞ்சப்பை - இது சினிமா விமர்ச்சனம் அல்ல...


தற்போது வாழ்க்கைக்காக இடம் பெயறுபவர்கள் தான் நிறைய, அதுவும் படித்து முடிச்சு பட்டணத்தில் வேலை பார்த்து, அப்படியே தங்கள் இலட்சியமாக அமெரிக்கா போவது எப்படி என்பதைத்தான் அடுத்த இலக்காக வைத்து செயல்படுகின்றனர், இது தான் இன்றைய இளம் தலைமுறையினரின் இலட்சியமும் கூட.

பட்டணத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எத்தனை பேர் தன் தாய், தந்தையரை பட்டணத்துக்கு அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுகின்றனர் என்றால், சொற்ப எண்ணிக்கைதான் என்று அடிச்சு சொல்லமுடியும் நம்மால். அதுவும் தாய், தந்தையர் படிச்சு இங்கு கிராமத்தில் வேலையில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களை அழைத்து வந்து இதுதாம்மா நீ ஆனந்த விகடனில் படித்த வேளச்சேரி மால், கிழற்கு கடற்கரை சாலை என ஒவ்வொன்றையும் சுற்றிக்காட்டுவர். கிராமத்தில் கூலி விவசாயியாக இருந்தால் இதை எல்லாம் தவிர்ப்பவர்களே இங்கு அதிகம்.

கிராமத்தில் ஏழை விவசாயியாக இருந்தால் அதிகபட்சம் சென்னைக்கு வர ஆசைப்படுபவர்கள் தலைவர் எம்ஜிஆர் சமாதியை ஒருநாளைக்காவது கூட்டிட்டுப்போய் காட்டுப்பா என்று தவமாய் தவமிருப்பர், அப்புறம் அவர்களை அழைத்து வந்து ஊரைச்சுற்றிக்காட்டுவது அதிகபட்சம் ஒரு வார இறுதி நாட்களாகத்தான் இருக்கும்.

நான் தற்போது இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த எனது அப்பா, காலை எழுந்ததும் கைலியும், முண்டா பனியனும் போட்டுகிட்டு வாக்கிங் கிளம்பி விடுவார் நான் இப்படி எல்லாம் போகாதே சட்டையும், வெள்ளை வேஷ்டியும் கட்டிட்டுப்போங்க என்று கட்டாயப்படுத்துவேன் இந்த மஞ்சப்பை பார்த்ததும் நான் செய்தது மிக தவறு என்பதை உணர்ந்து வருத்தப்பட்டேன், அடுத்த முறை வரும் போது கைலியும், முண்டா பனியனோடுமே நீங்க வாக்கிங் செல்லுங்க என்று கூறுவது என்று இப்போதே முடிவெடுத்து விட்டேன்.

இந்த மஞ்சப்பை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம், தனது அப்பா, அம்மாவை தன்னோடு வைத்துக்கொள்ளாதவர்கள் நிச்சயம் பட்டணத்தில் படும் பாடு அவர்களுக்கு நன்றாக தெரியும், தன்னை வளர்த்த தாத்தாவை நிச்சயம் இப்போதிருப்பவர்கள் தன்னோடு வைத்துக்கொள்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இந்த படத்தில் தாத்தாவை தன்னோடு வைத்துக்கொண்டு அவர் செய்யும் எதாச்சையான சேட்டைகளை நம்மால் மிக ரசிக்க முடிகிறது. அதனால் அவர் அறியாமல் வரும் விபரீதங்கள் நம் கண்களில் நீர் வரை வைக்கிறது.

படத்தின் முதல் பாதி நல்ல ஜாலியாக போன படம் பின் பாதியில் நிறைய முறை என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் வரவைத்து விட்டது. சினிமாவுக்கு செல்லும் போது சந்தோசமான இடங்களிலும், நெகிழ்ச்சியான இடங்களிலும் என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வரும் என்பது நான் அறிந்ததே, படத்திற்கு சென்றால் மனைவியையும் அழைத்து செல்லவேண்டும், அங்கு நான் அழுததை அவள் ரசிப்பாள் என்பதற்காகவே படத்திற்கு செல்வதை தவிர்த்து வந்த நான், என் மச்சானுடன் இந்த படத்திற்கு சென்று, கொஞ்சம் நிறையவே என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது இந்த படம்.. என்ன கடைசியாக மச்சானின் பக்கத்தில் உட்கார்ந்ததால் என் கண்ணீரை யாரும் காணவில்லை, பட் படம் முடிஞ்சு வரும்போது எங்க வீட்டில் எல்லோரும் அழுதிருந்தது நிறைய மனதில் இடம் பிடித்து விட்டது இந்த படம்.

சிலர் விமர்ச்சனம் என்ற பெயரில் இந்த மாதிரி எல்லாம் தாத்தா சேஷ்டைகள் செய்ய மாட்டார் என்றும், கொஞ்சம் ஓவர் என்றெல்லாம் பில்டப்போடுவாங்க, தீவிர சினிமா ரசிகன் அல்லாத எனது பார்வையில் நிச்சயம் இந்த படத்தை பார்க்கவேண்டும், நம் பெற்றோரையும், தாத்தாக்களையும் பாடாது பாடு படுத்துவதை நாம் அறிய இந்த படம் மிக உதவியாக இருக்கும். இந்த படம் பார்த்த அன்று எனக்கு என் தாத்தாவின் நினைவுகளும், நான் அவரிடம் செய்த சேட்டைகளும் மனதில் வந்து நினைவுகளை இனிமையா தந்தது அன்றைய இரவு.

Monday, June 9, 2014

மகனும் முதல் நாள் பள்ளியும்....



முதல் நாள் மகன் பள்ளிக்கு எப்போது செல்வான் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு காத்திருந்தேன், அதற்கு முதலில் பள்ளியில் சேர்த்தவேண்டும், நாங்கள் நினைத்த பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்கவேண்டும், ஏகப்பட்ட பணத்தை கட்டணமாக கட்ட வேண்டும், என 4 வருட கணவாக இருந்தது மகனை பள்ளிக்கு அனுப்புவது. மகனை பள்ளிக்கு அனுப்புவது என்பது நடைமுறையான ஒன்று, ஆனால் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது அவன் போகமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், அவனை கட்டாயப்படுத்தி விட்டுவிட்டு வந்து, அவன் என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்று மனம் அவனைச்சுற்றிக்கொண்டே வரும், நிச்சயம் இதை எல்லாம் அனுபவிக்கும் போது தான் மனது மிக சந்தோசமடைகிறது.

என் மகன் Pre KG வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய பள்ளியில் அது பள்ளி என்று சொல்ல இயலாது வீட்டில் வைத்து நடத்துகின்றனர் கிட்டத்தட்ட Home Care போலத்தான், அங்கு 1 வருடம் தினமும் அரை நாள் மட்டும் சென்று வந்து கொண்டு இருந்தான், கடந்த அக்டோபரில் இருந்து பல பள்ளிகளுக்கு படை எடுத்து, அப்ளிக்கேஷன் வாங்கி அதை கொடுத்து, நேர்முகத்தேர்வுக்கு பையனைக்கிளப்பி என அப்போதே ஆரம்பித்தோம் பள்ளி செல்லும் அளப்பறையை.

எங்கள் அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து அவர்களும் பள்ளிகளை தேட, நானும் தேடினேன், ஊரில் பாதி சிபிஎஸ்சி பள்ளிகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு கட்டணத்தில். ஒரு இடத்திற்கு இன்னொரு இடம் அதிகமாகத்தான் இருக்கிறது, குறைந்த பாட்டைக் காணம்.

இப்படி வலைவீசி தேடுகையில் எதேச்சையாக அமைந்தது ஓர் 150 வருட பாரம்பரிய பள்ளியில் இருந்து ஓர் நேர்முகத்தேர்வு, மனைவி சகிதமாக சென்றோம், எந்த பள்ளியிலும் நேர்முகத்தேர்வில் பதிலே சொல்லாத மகன் இந்த பள்ளியில் அனைத்து கேள்விகளுக்கும் அழகாக பதில் சொன்னான், அதனாலயே எங்களுக்கு அந்த பள்ளியிலேயே சீட்டும் கிடைத்தது.

பணம் கட்டிய பின் ஏப்ரலில் ஒரு நாள் துணி, புத்தகம் என் ஒவ்வொரு நாளாக கொடுத்தனர், சூன் 2 அன்று பள்ளி என்றதும் சந்தோசத்தில் மகனுடன் நாங்களும் திளைத்தோம். அதே அன்று என் மச்சானுக்கும் திருமணம்  என்றதும் என்ன செய்வது, பள்ளிக்கு அனுப்பி ஆகவேண்டும் என முடிவு செய்தோம்.

ஆசை ஆசையாக புறப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை, மச்சானின் திருமண மேடையில் நாங்கள் இருந்தோம், தாலி கட்டி முடித்ததும் அடிச்சு பிடிச்சு துணியை பையனுக்கு மாற்றிவிட்டு, காரில் வேகமாக சென்றால் அன்று பார்த்து எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெறிசல், அங்கிருந்து பள்ளிக்கு சென்றால் காரை நிறுத்த இடம் இல்லை. அப்புறம் வஉசி பூங்காவில் நிறுத்தி விட்டு பையனைத்தூக்கிகிட்டு போனோம், முதலிலேயே பள்ளியில் தெளிவாக சொல்லி இருந்தனர், ஒன்னும் கொண்டு வரவேண்டாம் என்று, ஆனால் அங்கு எல்லா பெற்றோரும் அனைத்து புத்தகத்தையுத் தூக்கி கொண்டு வர, என் மனைவி நீ போய் எடுத்து வா என்று என்னை துரத்த மீண்டும் ஓடி புத்தகத்தை எல்லாம் எடுத்து வந்தேன்.

பள்ளிக்கு உள்ளே வந்ததும் பையனை மட்டும் வாங்கிக்கொண்டு எங்களை வெளியே அனுப்பினர். அவனும் அழுகாமல் சமத்தாக சென்றவன் பைபை கூட சொல்ல முடியவில்லை, அதற்குள் வகுப்புக்கு அழைத்து சென்றுவிட்டனர், பின் நாங்க திருமண மண்டபத்துக்கு சென்றோம், இப்படித்தான் சென்றது கடந்த வாரம் முழுவதும், திருமண வீடு, பள்ளி என சுவாரஸ்யம் குறைவாகத்தான் போனது.

இன்று காலை பள்ளிக்கு மகனை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பினால் நான் போகவில்லை, எனக்கு பள்ளி பிடிக்கவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை தூக்கி கொஞ்சி, ஒவ்வொரு வேலை செய்யும் போதும் அவனுக்கு கதை சொல்லி, சின்ன சினுங்களுடன் மிரட்டி என 1 மணி நேரம் போராடி புறப்பட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பள்ளிக்கு புறப்பட்டவனை வேனில் ஏற்றுவது தான் அடுத்த பெரும் வேலை, வேன் வாசலை நோக்கி வந்ததும் அழுக ஆரம்பித்தவனை வலுக்கட்டாயமாக தூக்கி வண்டியில் உட்காரவைக்க, உள்ளே சென்றவன் கண்களில் நீர் இல்லாமல், அழுகாமல் இங்கியே இரு, இங்கியே இரு என்று டாட்டா சொல்லிக்கொண்டே பள்ளிக்கு சென்றுவிட்டான்...

மகன் முதல் நாள் பள்ளி சென்றதை விட இன்று தான் எனக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டாம் மற்றும் திண்டாட்டமாக இருந்தது அவனை வழி அனுப்புவதில்...


Wednesday, May 28, 2014

வாழ்த்துக்கள் மகனே....


நான்கு ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவனையில் லேபர் வார்டு முன் குடும்பத்தில் உள்ள 30 பேரும் குழுமியிருந்தோம். ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்று சொன்னாதால் கிழமை, நேரம் எல்லாம் குறித்து மருத்துவர்களிடம் சொல்லி விட்டோம், சொந்த பந்தங்கள் எல்லாம் குழந்தையை பார்க்க காத்திருந்தனர் கூடவே நானும்... என்ன என் மனதில் இனம் புரியாத பயமும், பல தமிழ் படங்களின் பிரசவ சீன்கள் கண் முன்னே வந்தோடியது, படத்தில் வரும் மழை போல அன்றும் மழை பெய்து இடி இடித்ததால், உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் நடுக்கமுமாக காணப்பட்டேன். சரக்கடிக்கவும் தைரியமில்லை அடிச்சிருந்தாலாவது போதையில் பயம் தெளிந்திருக்கும். 10 மணியில் இருந்து 11 மணி வரை என்று நேரம் கொடுத்திருந்ததால், பிரசவ அறையின் சுவற்றில் காது வைத்து கேட்டுக்கொண்டு இருந்தேன்.

மகனின் முதல் குரலை நான் தான் கேட்க வேண்டும் என்ற ஆவலில், ஒரு சத்தமும் கேக்கவில்லை அந்த அளவிற்கு கெட்டியான பில்டிங்போல. 10.55க்கு வழக்கம் போல நர்ஸ்தான் முதலில் வந்தாங்க, எதுவும் பேசாம வேக வேகமா சென்றதால் மீண்டும் சினிமா காட்சிகள் நினைவில் வந்து கலக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்ற அனஸ்திசியா டாக்டரும் வெளியே வந்துவிட்டார், எங்கள் நெருங்கிய நண்பரான மருத்துவர் கடைசியாக பையனை கொஞ்சிக்கொண்டே கொண்டு வந்தார், நானும் சினிமா போல அப்பனிடம் தான் பையனை கொடுப்பார்கள் என்று தூரத்தில் இருந்தே என்னை கூப்பிடுவாங்கன்னு ஆவலா இருந்தேன். எங்க குடும்பம் இந்த சாங்கியம், சம்பிரதாயங்கள் நிறைந்த குடும்பம், குழந்தை பிறந்தால் வெள்ளித்தட்டில் வீட்டின் பெரியவர்கள் தான் முதலில் வாங்குவார்கள்.
குடும்பமே போய் பையன பார்த்து விட்டு எல்லோரும் அவ அம்மா மாதிரின்னு சொல்லிகிட்டே என்னைய பார்க்கவிடல, இங்கேயும் கடைசியாத்தான் என் கையில் வாங்கி கொஞ்சினேன். சொன்ன போலவே அவ என் கலர் இல்லை என்பதில் நிறைய மகிழ்ச்சிதான் எனக்கு...
செக்கச்சிவந்து கண் கூட திறக்காமல் அந்த மழலை மொழி எனக்கு.... எப்படியோ என்ன பாடாப்படுத்தி நீ அப்பானிட்டே என்றது போல இருந்தது...

இது நடந்து இன்றோடு 4 வருடம் ஆனாலும் எனக்கு நேற்று நடந்தது போல தான் உள்ளது எனக்கு..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என் அன்பு பிரசன்னஸ்ரீஹரிக்கு...




Tuesday, May 13, 2014

ஊர்வலம்...


பவானிக்கு சென்று கொண்டு இருக்கும் போது வழியில் சரியான கூட்டம், என்னடா இது, இத்தனை கூட்டம் என்று பயம் வந்து விட்டது, பெரிய விபத்தாக இருக்குமோ? இல்லை, எதாவது கட்சி கூட்டமாக இருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது, தேர்தல் முடிவு வந்த பின் தான் அதுவும் நடக்கும். அநேகமாக விபத்தாகத்தான் இருக்கும், இவ்வளவு கூட்டம் இருக்குது, எத்தனை உசிரு போச்சோ! என்று மனம் வருந்தி வண்டியை எறும்பை விட மெதுவாக ஊர்ந்து வரும் படி இயக்கினேன்.
தீடீர் என ஒரு பயம் போலீஸ்காரங்க செக் செய்கிறார்களோ? என்ற பயம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என் நான்கு சக்கர வாகனத்தில் எல்லாம் பக்காவாக இருக்கிறது ஆனால் வண்டியை ஓட்டும் நான் தான் பக்காவாக இல்லை, காலையில 11 மணியில் இருந்து குடிச்ச மார்ப்பிஸ் இப்ப என்னைக்காட்டிக் கொடுத்திட்டால், எப்படியும் 1000 ரூபாய் பைன் போடுவாங்களே என்ற பயம் தான் காரணம். காசைக்கூட கட்டி விடலாம் ஆனால் உள்ளுர்காரன் யாராவது பார்த்து விட்டால் மான மரியாதை எல்லாம் போய் விடுமே என்ற பயந்தான் மிக அதிகம்.

ஒரு பெரியவரிடம் கேட்டேன் என்னங்க எதவாது அடிபட்டுருச்சா? அதற்கு அவர் கண்கலங்க தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினார். அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் போக அவரை அழைத்ததும் எப்பவும் என்னைக் கண்டால் நன்றாக பேசும் அவர், என்னடா என்றார், எண்ணன்னே கூட்டம் என்றோன், அட ஊரில் இருந்த நல்லவர்களில் மிக இளவயது நல்லவன் ஒருவன் போய்ட்டாண்டா என்று கதறினார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சரி என்றேன். கூட்டத்தைப்பாருடா என்றார் எனக்கு தெரிஞ்சு தலைவனாக, கட்சி பிரபலமாக இல்லாத ஒருவருக்கு இத்தனை கூட்டம் என்பது மிக ஆச்சர்யம் தான், சுடுகாட்டுக்கு போகும் வரை கூட்டம், நிச்சயம் எல்லோர் மனதிலும் இருப்பவருக்குத்தான் இத்தனை கூட்டம் வரும், அந்த அளவிற்கு கூட்டம், போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்யவே கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆனது அந்த அளவிற்கு கூட்டம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

பொதுவாக நமது ஊரில் ஊர்வலம் என்றால் அதற்காக கூடும் கூட்டங்களை விட கூட்டப்படும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும், கோயில் திருவிழா ஊர்வலங்களில் வருபவர்கள் பாதி பேர் வேண்டுதலுக்காகவும், இன்னும் பாதி பேர் சைட் அடிப்பதற்காகவும் வருபவர்கள் தான் அதிகம், ஒருவர் ஊர்வலத்துக்கு வருகிறார் என்றால் நிச்சயம் ஆதாயம் இருக்கும், அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆதாயம் இல்லாமல் ஊர்வலத்துக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அது சவ ஊர்வலம் தான். பிறக்கும் போது தொப்புள் கொடியோடு பிறந்து வளருபவன் பின்னாளில் எதை சம்பாரிச்சாலும் போகும் போது கொண்டு போவது ஒன்றும் இல்லை. அவன் அணிந்த அருணாக்கொடி கூட அத்துகிட்டு தான் எரிப்பர். அவ்வளவு நல்ல சமூகம் நம்முடிடையது. ஆனால் சுடுகாட்டிற்கு போகும் போது அவனிற்கு பின்னால் வரும் கூட்டம் தான் அவனின் பேர் சொல்லும் சொத்து என்றால் மிகையாகது.
இன்னும் கிராமத்தில் சொல்வார்கள் நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதற்கு நிச்சயம் போக வேண்டும் என்பார்கள். பங்காளி சண்டையால் பல வருடம் பிரிந்து இருப்பவர்கள் கூட திருமணத்தில் சேருவதை விட, இறப்புக்கு சேர்ந்தவர்கள் தான் அதிகம். என் அப்பத்தா அப்படித்தான் எனக்கு ஞபாகம் தெரிந்ததில் இருந்து அதனுடன் நான் பேசியது இல்லை, எங்கள் வீட்டில் சண்டை போட்டுகிட்டு கோவிச்சிகிட்டு போய் விட்டது என்பார்கள், அது இறக்கும் தருவாயில் ஒரு வார காலம் நாங்கள் தான் கூட இருந்தோம், ரொம்ப வருத்தப்பட்டது இத்தனை நாள் உன்னை கொஞ்ச முடியவில்லை என்று, சாவுக்கு ஒன்று சேர்ந்தால் தான் என் கட்டை வேகும் என்று அடிக்கடி சொல்லும் என்று பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சொல்வாங்க.
ஒருவன் இருக்கும் போது இருக்கும் மரியாதையை விட அவன் சாகும் போது அவனுக்கு கிடைக்கும் மரியாதையில் தான் அவன் வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்...

Tuesday, May 6, 2014

திருவிழா கிடாக்கறியும்...


நமது கலாச்சாரத்தின் அடையாளம் தான் திருவிழா. நம் மண்ணின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் இந்த திருவிழாவிற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. கிராமங்களில் தான் கலாச்சார பின்னணியில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு கொண்டாடுவர் திருவிழாக்களை.

ஒவ்வொரு ஊரிற்கும் மண் மாறுபடுவதை போல திருவிழாக்களும் மாறுபடும், அந்த ஊரின் பெருமைகளையும், அந்த மண்ணின் மரியாதையையும் இந்த திருவிழாக்கள் தெரியப்படுத்தும். குறிப்பாக தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மாரியம்மன் கோயில் தான் அதிக அளவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஊர் மாரியம்மனுக்கும் ஒரு சிறப்பு உண்டு அந்த வகையில் திருவிழாக்கள் அமைந்திருக்கும், எங்கள் ஈரோடு பகுதியில் நிறைய மாரியம்மன் கோயில்கள் உண்டு, இங்கும் நிறைய வகையில் திருவிழாக்களை கொண்டாடுவர். எங்கள் ஊரைப்பொருத்தவரை திருவிழாவையும், கிடா வெட்டையும் பிரிக்கமுடியாது. அந்த அளவிற்கு திருவிழாவோடு இணைந்தது கிடா.

எங்கள் ஊரைப்பொருத்தவரை சித்திரை மாதம் தான் திருவிழா. மாரியம்மனுக்கு கம்பம் நட்டு பதினைந்து நாட்களுக்கு கொண்டாடுவோம் திருவிழாவை. எப்போதும் அக்னி நட்சத்திரத்தில் தான் எங்கள் திருவிழா வருவதால் வெய்யில் வாட்டி வதைக்கும். கம்பம் நட்டு 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பூஜை செய்வார்கள். 

இந்த திருவிழாக்களில் பகுத்தறிவிற்கு எதிராக நிறைய சம்பிரதாயங்கள் இருக்கும் நாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை காரணம் மக்கள் அதை விரும்புகிறார்கள், நாம் ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என விட்டுவிடவேண்டும்.

நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், வாட்டர் தீம் பார்க் என நிறைய இருக்கின்றன, உல்லாசமாக பொழுதை போக்குவதற்கு. கிராமத்தில் அப்படி இல்லை கிணறும் அதை ஒட்டி அமைந்துள்ள தோட்டம் இது தான் பொழுது போக்கு. களைப்பில் இருப்பவர்களை சந்தோசப்படுத்தத்தான் முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்டது திருவிழா. அப்போது எல்லாம் விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்றால் அந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகிறேன், இந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகின்றேன் என்பது எனக்கெல்லாம் வேத வாக்கு. அதை மனதில் வைத்திருந்து சொல்லி வாங்கச்சொல்லும் போது தான் குடும்ப வறுமை தெரியும் கால கட்டமிது.

எனக்கு தெரிய எங்க வீட்டு இட்லி குண்டா எல்லாம் அந்தியூர் திருவிழாவில் வாங்கியது தான். அந்த அளவிற்கு திருவிழாவோடு ஒன்றிப்போனவர்கள் நாங்கள். 

ஆட்டம், பாட்டம் மட்டுமல்ல திருவிழா வெய்யில் காலங்களில் அனைவரும் சுத்தமாக இருக்கவேண்டும். ஊரில் கம்பம் நட்டு விட்டால் அனைவரும் இரு வேளை குளித்து கோயிலுக்கு செல்வர், அடுத்து அனைவரும் மஞ்சளை கம்பத்துக்கு பூசி தண்ணீர் ஊற்றுவதால் அது கிருமியை அண்ட விடாமல் தடுக்கும். இது போன்ற நிறைய அறிவியில் காரணங்களையும் சொல்லுவர்.



சரி எதுக்குடா இவன் இவ்வளவு திருவிழா புராணம் பாடுகிறான் என்று நினைக்கின்றீர்களா, ஆம் எங்க ஊரில் திருவிழா, நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை நான், திருவிழாவை கொண்டாடுவதற்காகவே விடுமுறையை சேமித்து ஒட்டு மொத்தமாக எடுக்க காத்திருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு கிளம்பி இன்று இரவு முழுவதும் ஆடடம் பாட்டத்துடன் நானும் கலந்து கொண்டு கும்மியடிக்போகிறேன்.. கரகாட்டாம், நையாண்டிமேளம், சிங்காரி நடனம், நடன நிகழ்ச்சி அப்படியே கிடாக்கறி விருந்தும், கூட்டாஞ்சோறு விருந்தும் இருக்கு இதை எலலாம் முடிச்சிட்டு வந்து அனுபவங்களோடு உங்களை சந்திக்கிறேன்..