இந்த வருடம் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. கோவையில் வெப்பத்தின் தாகம் இந்த வருடம் அதிகரித்து உள்ளது கோவையிலே இப்படி என்றால் சென்னையை கேட்கவேண்டியதே இல்லை. உடல் சூட்டைத் தணிக்க இன்று எத்தனையோ குளிர்பானங்களும் மருந்துகளும், மாத்திரைகளும் வந்து விட்டன ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இத்தனை பானங்கள் எல்லாம் இல்லை அவர்கள் சூட்டைத்தனிக்க குடித்தது கம்மங்கூழ் தான்.
தமிழனின் பாரம்பரிய உணவு கம்மங்கூழ் என்று சொல்வதில் பல பெருமைகள் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் கம்மஞ்சோறு இருந்திருக்கும். ஆனால் இன்று வீடுகளில் கம்மஞ்சோறு செய்வது மிகவும் குறைந்து விட்டது. இன்று விற்பனை பொருளாகிவிட்டது. இன்று நகர்புறமாகட்டும், கிராமப்புறமாகட்டடு ஒரு தள்ளு வண்டியில் இரண்டு பானைகளுடன் இருக்கும் அங்கு கம்மங்கூழ் விற்பனை தூள் பறக்கின்றது. கம்மங்கூழ்க்கு தொட்டுக்க மாங்காய், குடல், வத்தல், அன்னாசிப்பழம், மோர் மிளகாய் இன்னும் ஏரியாவிற்குத் தகுந்த மாதிரி நிறைய இருக்கும் இதை சாப்பிடும் போதே உடல் குளுமையாக இருக்கும்.
என் நினைவில் சிறு வயதில் வீட்டில் பாட்டி ஊருக்கு வந்தார்கள் எனில் கம்பு இடித்து கம்மஞ்சோறு செய்து அதை பானையில் வைத்து அடுத்த நாள் காலை கொஞ்சம் தயிர் சேர்த்து கரைத்துக் கடித்தால் அதன் சுகமே தனிதான். நிறைய பேர் இதை அனுபவித்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
- கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்
- குடல் நோய்களுக்கு வராமல் பாதுகாக்கும்
- உடல் வலிமை சேர்க்கும்
கம்மஞ்சோறு செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காகயம் சேர்த்து குடிக்க வேண்டும்.
நண்பர்களே இப்போது கம்மங்கூழ் விற்கும் இடத்தில் சுகாதாரக்கேடு நிறைய இருக்கும் அதனால் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் இது உடல் நலத்திற்கான அருமையான உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை.
