Wednesday, December 30, 2009

2010ம் வருடமே நீ வருக! வருக!! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2009 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை
இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2010யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2010ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
என் முகம் அறிந்த முகமறியா 
வலைப்பூ நண்பர்களுக்கு 

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........


Monday, December 28, 2009

நீச்சல் கலை

அலுவலகம் மூன்று நாட்கள் விடுமுறை என்றதும் ஊருக்குப் போவது என்று முடிவெடுத்தேன். எனது கிராமத்திற்கு செல்வது என்று முடிவானதுடன் அங்கு நண்பர்கள் எல்லாம் விடுமுறைக்கு வருகின்றேன் என்றதும் சந்தோஷம் பொங்கியது. வியாழன் இரவு புறப்பட்டு அந்தியூர் மாமா வீட்டிற்கு சென்றேன். வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு எனது கிராமத்திற்கு சென்றேன். மழை பெய்து இருந்தாதால் வழிநெடுக பச்சை பசேல் என நெற்பயிர்களும், மஞ்சள் காடுகளும், வாழை மரங்களும் அழகாக ரசித்துக்கொண்டே சென்றேன் ( அங்க ஹெல்மெட் போடலினா யாரும் பிடிக்கமாட்டாங்களே ). ஊரில் நண்பர்களை சந்திததுவிட்டு அனைவரும் குளிக்கப்போகலாம் என்று முடிவெடுத்து ஆத்துக்குப்போகலாமா இல்லை கிணற்றுக்குப்போகலாமா என முடிவெடுக்கும் போது அனைவரும் கிணற்றுக்குப் போகலாம் என முடிவெடுத்து கிளம்பினோம்.

கிணறு ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ சென்று நீச்சல் பழகி இருப்பார்கள் இன்று நாம் என்ன தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் அன்று கற்ற நீச்சல் இன்றும் மறக்காது. சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்பது இவை இரண்டும் ஒரு முறை கற்றால் வாழ்வில் மறக்காத கலைகள் ஆகிவிடும். கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியதா ஆட்கள் கூட இருப்பார்கள் ஆனால் நீச்சல் தெரியாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நான் எனது 10வயதில் நீச்சல் கற்றேன். எனது ஊர் காவிரி ஆற்றிற்குப் பக்கத்தில் இருந்ததால் ஆற்று நீச்சமும் தெரியும். நான் எப்படி நீச்சல் கற்றேன், நான் எப்படி டைவ் அடிததுப்பழகினேன், ஆற்றீல் எதிர் நீச்சல் எப்படி அடித்தேன், வேகமாக இழுத்துச் செல்லும் தண்ணீரில் எப்படி நீந்தி கரையேறுவது என நினைத்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் எப்பவுமே தண்ணீரைக்கண்டால் பயமில்லாமல் குதிப்பார்கள் ஆனால் நகரத்தில உள்ளவர்கள் அய்யோ எனக்கு நீச்சல் தெரியாது என்பார்கள். அதுவும் இல்லாமல் உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் நீச்சல் கலையும் ஒன்று என்று படித்த ஞாபகம். நீச்சல் கலையைப்பற்றிய எனது பதிவு.
நீச்சல் கற்பது எப்படி?
நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன் கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர் புரடை) கட்டுக்கொண்டு இறங்குவார்கள் இப்ப எல்லாம் லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதற்குள் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொண்டு பின்னால் வருவார். ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிப்பார். அடுத்த நாள் இந்தபக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் பிடித்து செல்ல வேண்டும் இவ்வாறு ஒரு ஒருவாரம் சென்றால் அழகாக நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்த நண்பருடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளில் ஒவ்வவொரு கையையும் முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் நாம் எளிதாக தப்பிக்கலாம். கடல் நீச்சல் பற்றி நான் இப்பபோது தான் விபரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது

எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.

Wednesday, December 23, 2009

விகடனின் வரவேற்பரையில் சங்கவி.....

இன்று காலை நண்பர் தண்டோ..ரா அவர்கள் என்னை அழைத்தார். நண்பரே இந்த வார விகடன் (30.12.2009) வரவேற்பரையில் உமது வலைப்பூவை வரவேற்று இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் என்றார். சந்தோஷத்தில் மனது குளிர்ந்தது (ஏற்கனவே மார்கழி குளிர் வேற) நான் விகடனை கடந்த 10 வருடங்களாக வாசித்து வருகிறேன் எப்பவும் சனிக்கிழமை தான் வாங்குவேன் இன்று நண்பர் கூறியதும் உடனே வாங்கி படித்துவிட்டு என் மனைவியிடம் கூறி வாழ்த்துப்பெற்றேன்.



 நன்றி! நன்றி !! நன்றி !!!

வலைச்சரத்தில் என்னை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் தண்டோ..ரா

எனக்கு Health conscious விருது கொடுத்த நண்பர் மோகன்குமார்

பதிவர் சங்கமம் நடத்திய ஈரோடு பதிவர் சங்கமம்

ஈரோடு பதிவார் சங்கமத்தில் என்னை வரவேற்று பதிவர்களிடம் அறிமுகப்படுத்திய ஈரோடு கதிர், பாலாசி

வலைப்பதிவில் கொலஸ்டிராலைப்பற்றி எழுத எனக்கு பல தகவல்கள் தந்த நண்பர் கார்த்திகேயனுக்கும்

வலைப்பூவில் எப்படி எழுதவேண்டும் எதை எழுதவேண்டும் என எனக்கு ஆலோசனை வழங்கிய நண்பர் பட்டர்பிளை சூர்யா

விகடன் வரவேற்பரையில் படித்ததும் எனக்கு வலைப்பூவில் உடனே வாழ்த்துச்சொன்ன பரிசல்காரன்

நான் வலைப்பூவிற்கு வந்து மூன்றே மாதங்களில் என்னை
ஆனந்த விகடன் வரவேற்பரையில்
அறிமுகப்படுத்தி ஆனந்த விகடனுக்கும் மற்றும்
எனது வலைப்பூவிற்கு வந்து படித்த எனக்கு பின்னூட்டம் எழுதி என்னை செம்மைப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது

கோடான கோடி நன்றிகள்...

Tuesday, December 22, 2009

வாழைப்பழம் சாப்பிடுங்கள்.....நலமுடன் வாழுங்கள்...



நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் போது கடவுளுக்கு படைக்கப்படும் பொருட்களில் வாழைப்பழம் முக்கியமானது. வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 வாழைப்பழம் :
 வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.



வாழைப்பழ வகைகள்
செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன்
குணங்கள்:
வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.
இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.
* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.
* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 
* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.
* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.
* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.
* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.
* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :
கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.

Sunday, December 20, 2009

ஈரோட்டில் வலைப்பதிவர்களின் அட்டகாசமான ஆரம்பம்.......


நிகழ்ச்சி நடந்த இடம்

ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமம் என சொன்னதுமே நானும் கலந்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் நமக்கு யாரையும் தெரியாது எனது சொந்த முயற்சியிலே நான் வலைப்பதிவை தொடங்கினேன். கதிர் சாரின் வாசகன் நான் ஆனால் அவரை தெரியாது, அவர் ஈரோடு நண்பர்கள் பலரது பெயரை கொடுத்து இருந்தார். அதில் இருக்கும் நண்பர்களில்
எனது வலைப்பதிவிற்கு அடிக்கடி வருபவர் நண்பர் பாலசி அவரைத் தொடர்பு கொண்டேன். அதற்கடுத்து வலைப்பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியவர் நண்பர் தண்டேரா அவரை தொடர்பு
கொண்டேன் நாங்களும் சென்னையில் இருந்து வருகிறோம் என்றார். நமக்கு தொலைபேசியிலேயே ஒரு வட்டம் கிடைத்துவிட்டது இனி தயக்கம் இன்றி செல்லாம் என முடிவு செய்து கதிர் சாரை தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்தேன்.
                                                    இங்கதாங்க தங்கியிருந்தாங்க.........


ஞாயிறு காலை நண்பர் தண்டேராவை தொடர்பு கொண்டேன். அவர் நாங்கெல்லாம் ரூம் போட்டு குளிச்சுகிட்டு (தண்ணீல) இருக்கிறோம் நீங்களும் வாங்க என்றார். நானும் முகம் அறியா நண்பர்கள் அனைவரையும் கானும் ஆவலுடன் அந்தியூரில் இருந்து பஸ் ஏறினேன். வழியெங்கும் ஒரே யோசனை நாம இப்பதான் வலைப்பதிவே ஆரம்பித்து இருக்கிறோம் அங்க இருக்கும் நண்பர்கள் எல்லாம் வலைப்பதிவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நாம எப்படி பேசுவோம் என்றென்னியவாறு அந்தியூரில் இருந்து பவானி செல்லும் வழியில் வழியெங்கும் பச்சை பசேல் என நெற்பயிர்களை ரசித்து
விட்டு யோசித்துக் கொண்டு சென்றேன். ஒரு 45 நிமிடத்திற்குப்பின் ஈரோட்டை அடைந்தேன்.

நண்பர்கள் தங்கியிருந்த ராஜேஸ்வரி விடுதியில் நம்மாளுங்க எங்க தங்கியிருப்பாங்கன்னு போன அங்க உள்ள போனதும் ஓரே கூச்சலா இருந்தது உடனே முடிவு செய்தேன் இதுதாண்டா நம்மாளுங்க ரூம்னு உள்ளே சென்றால் நண்பர் தண்டோரா வாங்கன்னு சொல்லி நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அப்ப ஒரு நண்பர் சிங்கிள் பீஸ் டிரஸ்ல நடந்துகிட்டே இருந்தார் (கொஞ்ச ஓவரா போய்ருச்சுன்னு நண்பர்கள் சொன்னாங்க) அவர் யாருன்னு பார்த்த பின்னாடி வால் இருந்துச்சு ஓ இவர் தான் அவரான்னு கேட்ட அமாங்க நான் தான்னு சொன்னார். புதுகை அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா மற்றும் நண்பர்கள் இருந்தனர். பாத்ரூம்ல குளிக்கறங்கற பேர்ல ஓரே சத்தம் யாருன்னு கேட்டா யூத்ன்னு சொன்னாங்க... அப்புறம் 2 நிமிடத்தில் வெளியே வந்துட்டார் (குளிச்சிட்டராமா). உண்மையிலயே அவருடைய பேச்சாலும் எண்ணத்தாலும் யூத்தாத்தாங்க இருந்தார் நம்ம கேபிள் ஜீ...

வா...வா....வந்துட்டங்க............

நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டார்கள் எல்லாம் போகலாம்னு புறப்பட்டா வாலு சிங்கிள் பீஸ்ல இருந்து மாறவே இல்லை. ஒரு வழியா நிகழ்ச்சிக்கு வந்தோம் நண்பர் ஆரூரான் நிகழ்ச்சிகளை அழகாக நடத்திக்கொண்டு இருந்தார். நண்பார்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு தலைப்பைக் கொடுத்து நண்பர்கள் பேசினார்கள் இதில் பழமைபேசி தனது கருத்துக்களை அழகாக சொன்னார், நண்பர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாவைப்பற்றி பேசும்போது நான் 6 படங்களைப்பார்த்தால் அனைத்தைப்பற்றியும் எழுதுவதில்லை அதில் எது நல்ல படமோ அதைப்பற்றி மட்டுமே எழுதுகிறேன் தேவையில்லாததை எழுதி எனக்கும் டைம் வேஸ்ட் அதை படிக்கும் உங்களுக்கும் டைம் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை என்று அழகாக கூறினார். அகநாழிகை வாசுதேவன் தனது கருத்துக்களை சுருங்கச் சொன்னாலும் நிறைவான கருத்தை கூறினார்.

 
ஆமர்களம் ஆரம்பிச்சர்சசு............



வெட்டிப்பேச்சு ஆரம்பிச்சாச்சு............


அப்துல்லா  ரொம்ப யோசிக்கிறாரு.........

 

ஆள விட்டாப்போதும்ன்னு நினைக்கிறாரோ.............



இதுக்குப்பேர் தான் போஸ் கொடுக்கறது..............

கதிர் அவர்கள் கலந்தாய்வுக்கூட்டத்தை நடத்தினார். அக்கூட்ட்திற்குப்பின் விழா நிறைவுபெற்று அனைவருக்கும் உணவுகள் பறிமாறப்பட்டது. பல நண்பர்கள் சாப்பிட்டு விட்டு (சரக்குதான்) அப்புறம் சாப்பிடவந்தனர்.
உணவுகள் கொங்கு மண்ணிற்கே உண்டான சுவையில் நன்றாக இருந்ததது நான் என்ன சாப்பிட்டேன்னா இட்லி, புரோட்டா, காளிபிளவர் சில்லி, பிரைடுரைஸ், பள்ளிபாளையம் சிக்கன்,
தயிர்சாதம், முட்டைதோசை, ஆம்லெட் என போட்டுத் தாக்கிட்டு இருந்தேன் அப்போது தான் நண்பர்கள் மதுரை ஸ்ரீ, சீனா, திருப்பூர் வெயிலான், சுமஜ்லா, ரம்யா, நாகா, பழமைபேசி, விட்டலன் மற்றும் பல நண்பர்களிடம்
கலந்துபேசிக்கொண்டு இருந்தேன் (நிறையபேரை விட்டுவிட்டேன் கோவிச்சுக்காதீங்க). பல நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தர்கள் (சரக்குதான்) அங்க சென்று நண்பர்களிடம் விடை பெற்றுக்
கொண்டு இருந்தேன் அப்ப நம்ம யூத்து புல்லா வந்து ஒரு சின்ன ஆட்டம் போட்டார், நம்ம வால் முத்தம் கொடுத்து வழியனுப்பினார் எல்லோரிடமும் விடை பெற்று நண்பர் பாலாசி பஸ்நிலையத்தில் இறக்கி விட்டார் அங்க நம்ம மதுரை நண்பர்கள் அவர்களிடம் பேசிகிட்டே ஈரோடு பேருந்து நிலையம் சென்று பிரியமனமில்லாமல் பிரிந்து எங்க ஊர் பஸ் ஏறினேன். நமக்கு முகமறியா நண்பர்கள் இவ்வளவு பேரா அனைவரும் என்ன உதவி என்றாலும் கேளுங்க என்னால் முடிந்த அளவு உதவுகிறேன் என்று சொன்னவிதம், ஏதோ குழந்தையில் இருந்து பழகியவாறு அனைவரையும் கதிர் சார் வரவேற்ற விதம்,
நண்பர் தண்டோரா மற்றும் புதுகை அப்துல்லாவின் அழகான அன்பு வார்த்தைகள், வால்பையன் அடித்த லூட்டிகள் அனைத்தும் மறக்கமுடியாமல் இரவு முழுவதும் அந்த நினைவலையிலேயே உறங்கினேன் கலை முதல் இக்கட்டுரையை பதிவேதே எனது முதல் வேளையானது....
நிறைய பேரை விட்டுவிட்டேன் கோவித்துக்கொள்ளாதீர்கள், நிறைய விஷயங்களையும் விட்டுவிட்டேன் அதை எல்லாம் மற்ற பதிவார்கள் போட்டு விடுவார்கள் படித்துக்குங்க.. இக்கட்டுரை ரொம்ப போர் அடிச்சுருந்தா கோவிச்சுக்காம படிச்சதற்கு ரொம்ப நன்றி......
இச்சந்திப்பை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் நடத்திய ஈரோடு பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


நண்பர்கள் போட்டாவில் சின்ன சின்ன கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறேன்.. ஏதாவது தவறாக இருந்தால் கோவிச்சுக்காதீங்க நண்பர்களே...........