Wednesday, January 8, 2014

தினமும் சாலையில் ஈர்க்கும் குரல்...


வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மறக்காமல் கடை பிடியுங்கள்

சாலைவிதிகளை கடை பிடிக்கும் போது விபத்தில் இருந்து தவிர்க்கலாம்

சாலை விதி மீறல்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன

சரியான பாதையில் வாகனத்தை நிறுத்தும்போது தான் எதிர்த்து வரும் வண்டிகள் சரியாக செல்ல முடியும்

பள்ளி வாகனங்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் சாலை விதிகளை கடைபிடிப்பதில்

பாதசாரிகளுக்கு வழி விட்டு நிற்கும் போது தான் அவர்கள் எந்த தடங்களும் இல்லாமல் செல்ல முடியும்

சிக்னலில் நிற்கும் போது சிக்னலை மட்டும் கவனி

போக்குவரத்து போலீசாரின் வழிகாட்டுதல் படி வாகனத்தை இயக்கினால் நெறிசலை தவிர்க்கலாம்..

என்ன போக்குவரத்து சட்டமா சொல்கிறேன் என்று நினைக்காதீர் முன்பு கோவையில் க்ராஸ்கட் ரோட்டில் போக்குவரத்து போலீசாரால் ஒலிபெருக்கில் இந்த வரிகளை அவ்வப்போது கேட்டு இருக்கிறேன் இப்போது டவுன்ஹால் சிக்னலில் தினமும் கேட்கும் வரிகள்.

போக்குவரத்து போலீசார் டவுன்ஹால் ஏரியாவில் இப்போது வீடியோ கொண்டு கண்காணிப்பதால் அந்த வீடியோவைப்பார்த்து ஒருவர் மைக்கில் பேசும் வார்த்தைகள் தான் இவை.

இவரின் குரல் மணிக்கூண்டு வரை ஒலிக்கும் தினமும் நான் இந்த பாதையில் செல்வதால் இந்த குரல் எனக்கு பரிச்சயமாக ஒன்று. தினமும் இவர் போக்குவரத்தை சரி செய்யும் பாங்கு மகத்தானது.

சிக்னலில் ஒரு நாள் வெள்ளை கோட்டை தாண்டு அதிக தூரம் சென்று விட்டேன் என்னை வீடியோவில் பார்த்தவர் அந்த வெள்ளை சட்டைக்காரால் ரொம்ப முன்னாடி வந்து விட்டார் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தால் மிக பாராட்டலாம் ஆனால் சாலையில் முன்னுக்குவருவதால் போக்குவரத்துக்கு பாதிப்பும் விபத்தும் தான் ஏற்படும் என்றார். உடனே நான் என்னை சொல்வதை அறிந்து கொண்டு வேகமாக பின் வந்தேன் பின்னே போகும் போது இன்னும் மெதுவாக போங்க உங்க தவறை உணர்ந்தால் சரி, தவறு செயவது மனித குணம் அதை திருத்திக்கொள்வது தான் மனப்பக்குவம் என்றார்.

உண்மையிலேயே போக்குவரத்து விதிகளை ஓரளவு கடைபிடிப்பேன் சிட்டிக்குள் செல்லும் போது குறிப்பிட்ட வேகத்தைல் செல்வேன் என்ன மஞ்சள் லைட் போட்டதற்கு பின் சிக்னலை கடக்கும் தவறை இப்போது செய்வதில்லை.

டவுன்ஹால் தாண்டி செல்பவர்களில் நிறைய பேர் என்னைப்போல மைக்கில் அறிவுரை வாங்கி இருப்பார்கள் போல அந்த இடத்தில் இப்போது ஓரளவு அனைவரும் சாலை விதிகளை மதிக்கின்றனர் எனத் தெரிகிறது. மணிக்கூண்டில் பேசும் அவரின் குரல் வசீகரமானது உண்மையில் நிறைய பேர் அவர் பேச்சை கேட்கின்றனர் என்பது யாராவது தவறாக முன் சென்று விட்டால் அவர் அவர்களை குறிப்பிட்டு சொல்லும் போது பின் உள்ளவர்கள் எல்லாம் சிரிப்பார்கள் அதில் இருந்தே தெரிகிறது மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை.

போக்குவரத்தை தன் குரல் மூலம் சரி செய்யும் அவருக்கு நம் பாராட்டுக்கள் ஆனால் அவரை நாம் பாராட்டுவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். தவறுகளை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள் நாம், நம் தவறுகளை திருத்தி சரியான சாலை விதிகளை கடைபிடிப்பது தான் அவருக்கான மிகச்சிறந்த பாராட்டாக இருக்கும் என்பது என்கருத்து.

Tuesday, January 7, 2014

இவர்களும் அரசியல்வாதியாக மாறலாம்...

ஆம் ஆத்மி கட்சி ஊடகங்களால் வளர்ச்சியை பெற்ற கட்சி. டெல்லியில் நடந்த பல போராட்டங்களை முன்நின்று நடத்தி அதன் மூலம் ஊடகங்களின் அபரீத ஆதரவினால் இன்று டெல்லி சட்டமன்றத்தில் 28 இடங்களைப்பிடித்து காங்கிரசின் தயவால் ஆட்சியையும் பிடித்துள்ளது.

ஆம் ஆத்மியின் இந்த அபரீத வளர்ச்சி பாராட்டுக்குரியது தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் குறிப்பிட்ட அளவு இலவசமாகவும், மின்சார கட்டணம் பாதியாகவும் குறைப்போம் என்றனர் அதே போல் குறைத்துள்ளனர் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இனி தான் நாம் மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று எத்தனை மாதங்களுக்கு இவ்வாறு கொடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஆள்பவர்களுக்கு தெரியும் இது கரைசி வரை நிறைவேறாது என்று.

ஆம் ஆத்மியின் மீது நான் விமர்ச்சனங்களைத்தான் வைப்பேன் இதுவே ஒரு வருடத்திற்குப்பின் அவர்களின் ஆட்சியையும், திட்டத்தையும் முக்கியமாக அதை செயல்படுத்தும் விதம் பற்றி நன்கு தெரியும். அன்றும் இவர்கள் சொன்னதையே செய்து நேர்மையானவர்களாக இருப்பின் அப்போது போடலாம் நம் ஓட்டை ஆம் ஆத்மிக்கு.

எங்கள் மதிய உணவு வேளையில் தினமும் கார சார விவாதம் நடக்கும் அதில் ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பாகத்தான் நான் பேசுவேன் அப்படி பேசுகையில் சொன்ன ஒன்று "இன்னும் எந்த திட்டத்துக்கும் அவர்கள் டெண்டர் விடவில்லை, டெண்டர் விட்ட பின் தானே தெரியும் அவர்களின் நேர்மை பற்றி".

பணம், புகழ் மற்றும் அதிகாரத்திற்கு மயங்காதவர்கள் மிக மிக குறைவே அவ்வாறு ஆம் ஆத்மியில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கு பின்  இவ்வாறே இருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

ஒரு கட்சி ஒரு இடத்தில் ஆட்சியை பிடித்ததும் அந்த கட்சிக்காக இன்று நிறையபேர் ஆள் பிடிக்க கிளம்பிவிட்டார்கள் ஒரு மாநிலத்தில் ஒரு இலட்சம், தமிழகத்தில் 3 லட்சம் பேர் உறுப்பின்ர்கள் என்று எல்லாம் போகிற போக்கில் பிட்டை போட்டுச்செல்கின்றனர். தினமும் பத்திரிக்கையில் நிறைய பிரபலங்கள் ஆம் ஆத்மியில் இணைகின்றனர் என்ற செய்தி வருவது பாராட்டுக்குரியது. சேருபவர்கள் எல்லாம் நேர்மையானவர்களா அவர்கள் இது வரை எத்தனை நல்ல காரியங்களை செய்துள்ளனர் என்று பின்புலத்தை பார்க்கும் போது தான் தெரியும். 

இருக்கறத விட்டுட்டு பறக்கறதை பிடிக்க ஆசைப்படாதே என்பது பழமொழி அது போல போய் சேருகின்றனர்.  சுயநலம் இன்றி சேருபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகத்தான் இருக்கும். தமிழகத்தில் நாம் முன்னரே இந்த கட்சியில் சேர்ந்து விட்டால் நாளை சீனியர் என்று நமக்கு சீட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று சேர்பவர்கள் தான் அதிகம் இருப்பர்.

திட்டங்களை செயல்படுத்துகின்றோம் என்றனர் ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் இல்லாமல் நடந்து கொள்வோம் என்ற சூளுரைகள் எல்லாம் கேட்க இனிதாக இருக்கிறது நாம் பார்க்க இன்னும் நாள் இருக்கிறது.

அக்கட்சி ஆட்சி அமைத்து 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் 300 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றனர் ஒரு வேளை 300இல் 274ல் ஜெயித்து பிரதமர் ஆகிவிடலாம் என்று கூட நினைக்கலாம். எது எப்படியோ நம் விமர்ச்சனங்களை ஒரு வருடம் ஒத்தி வைப்போம். அதற்கு பின் அவர்களின் ஆட்சியை ஒப்பிட்டு போடுவோம் அவர்களுக்கு சலாம்.

குறிப்பு: எனக்கு அரசியல் கொஞ்சம் தூரம் தான், பட் டீக்கடையில் இப்படித்தான் பேசுவோம் என்பதை பதிவாக்கி உள்ளேன்..

Sunday, January 5, 2014

இதற்கு பெயர் தான் விடாமுயற்சியா?


தினமும் பேரூரில் இருந்து வண்டியில் வரும் போது டிவிஎஸ் பெப்பில் அவளை சந்திப்பேன்  என் பின்னே அல்லது முன்னே செல்வாள் சில சமயங்களில் உப்பிலிபாளையம் சிக்னலில் அருகருகே நிற்கும் அதிஷ்டமும் கிடைக்கும். அருகே நிற்கும் போதெல்லாம் திரும்பி திரும்பி பார்ப்பேன். ஒரு முறையேனும் திரும்புவாளா என அவளை பார்க்கது போல் பார்த்து கொண்டே இருப்பேன் ஆனால் எப்போதும் அவள் தரிசனம் கிடைக்காமல் சிக்னல் போட்டதும் முதல் ஆளாக பறப்பது தான் என் தினசரி நடவடிக்கை.

அன்று எதேச்சையாக என் யமஹா மக்கர் செய்ய பின் வண்டியை வேகமெடுத்து அடுத்த சிக்னலில் இருவரும் பக்கத்தில் ஆனாலும் ஏனோ திரும்ப வில்லை திரும்பினாலும் இருவரும் ஹெல்மெட் அணிந்துருப்பதால் கண்கள் மட்டும் தான் பேச முடியும், அதற்கும் வாய்ப்பு இல்லை ஆனால் எனக்கு இது தினசரி பொழுதுபோக்காகிவிட்டது. அலுவலகம் செல்லும் போது கூலாக செல்ல வழிவகுக்கிறது இந்த பைக் சேசிங்.

கரைச்சார் கரைச்சா கல்லும் கரையும் என்பது போல அன்னிக்குத்தான் முதன் முதலாக திரும்பி பார்த்தாள் நான் பார்க்கும் போது எப்பவும் சரியாக விழாத சிக்னல் அன்று சரியாக விழுந்து விட்டது அன்றிலிருந்து தினமும் ஒரு நட்பான பார்வை ஓடிக்கொண்டு இருந்தது ஆனாலும் எந்த வித காத்திருப்பும் இன்றி. சனி ஞாயிறு விடுமுறை ஆதாலால் வெள்ளி வரை மட்டுமே எனது பார்வை படலம் தோன்றும்..

ஏதோ சாமி ஊர்வலம் என்று வண்டியை உக்கடம் வழியாக திருப்பிவிட்டனர் அந்த இடத்தில் வண்டிகள் ஊர்ந்து சென்றது மெதுவாக சென்ற அவளது வண்டி கூட்டத்தில் என் வண்டி மேல் இடிக்க இரண்டு முறை பார்க்கதவன் போல் 3 வது முறை வேகமாக திரும்பினேன் சாரி, சாரி என்று என்னை வாய் திறக்க முடியாமல் செய்தது அவள் குரல். எல்லோரும் போல பரவாயில்லை என்றேன் ( இன்னம் 2 இடி வேனா இடிச்சுக்குங்க என்றது மனது) உக்கடம் வந்ததும் அங்கும் சாலை நெறிசல் எனக்கோ அவளை முன் செல்ல விடாமல் என் பின்னால் வருவது போலவே பார்த்து கொண்டேன் இந்த முறை சற்று பலமாக இடித்தால் என் இன்டிகேட்டர் உடைந்து விட்டது அவளை திட்ட இயலவில்லை ஆனால் இது தான் சாக்கு என்று முதலில் திட்டுவது போல வேகமாக இறங்கினேன் ஆனால் மீண்டும் சொன்னாள் சாரி, அடுத்து திட்ட தோணவில்லை பேச தோண்றியது எனக்கு.

அதற்குள் அவள் நான் மாற்றி கொடுத்துவிடுகிறேன் எவ்வளவு பணம் என்று சொல்லுங்கள் என்றால் ஹெல்மெட்டை கழட்டியவாறு. வாவ் இப்போது தான் பார்த்தேன் அவள் முகத்தை கருப்பு என்றும் சொல்ல இயலாது சிகப்பு என்றும் சொல்ல இயலாது கொஞ்சூண்டு கருப்பு என்றே சொல்லலாம் பட் அவள் மூக்குத்தியில் நான் மூச்சடைத்து தான் போனேன். பரவாயில்லைங்க நான் மாற்றி கொள்கிறேன் சர்வீஸ்க்கு போக போகுது மாத்திக்கிறேன் என்று கிளப்பினேன் என் வாகனத்தை, பார்த்து போங்க என்றால் ( இனி எங்கு பார்த்து போவேன் என்பதை அறியாமல்) அச்சச்சோ பேர் கேட்காம விட்டுட்டமே என்று ஆபிஸ் வந்து தான் அடித்துக்கொண்டேன்..

மீண்டும் தினசரி அதே பார்வை என போய்க்கொண்டு இருந்தது ஒரு நாள் சிக்னலில் வண்டி நிற்கும் போது சிரித்து விட்டு உங்க பேர் என்றாள் சாம் என்றேன் ஐ எம் திவ்யா என்று சொல்லி விட்டு சிக்னலில் சிட்டாக பறந்தாள்.. அப்படியே பட்டாம் பூச்சி பறப்பது போல் இருந்தது. என்றும் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகாத என் யமஹா அன்று 90ல் பறந்தது அவிநாசி சாலையில்.

அடுத்த நாள் எங்க வேலை பாக்கறீங்க என்ற கேள்வியில் நான் ஐடி கம்பெனி என்றேன், அவள் வங்கி என்றாள் இப்படியாக போய்க்கொண்டு இருந்தது எங்கள் பைக் மெட் ( காலேஜ் மெட், ஸ்கூல் மெட், பஸ் மெட் என்பது போல இது பைக் மெட்).

சிலநாட்கள் கழித்து அவள் வண்டியில் பின் ஒருவர் அமர்ந்திருந்தார் அண்ணாக இருக்கலாம் ஏன் கணவனாக இருக்கலாம் என்று நெற்றியை தேடினேன் ஹெல்மெட் தான் இருந்தது காலைப்பார்த்தால் கவசம் போல் இருந்தது அவள் செருப்பு, சரி யாராக இருந்தா நமக்கென்ன என்ற போது அடுத்த சிக்னலில் இவர் சாம் என்றும் அவர் என்று சொல்லும் போது சிக்னல் விழுந்து விட்டது.

அடுத்த நாள் இருவரும் தான் வந்தனர் ஒரு நிமிடம் பேசமுடியுமா என்றார் அவர் இன்று வண்டியை ஓட்டியது அவர் பின்னால் அவள். ஓ பேசலாமே என்றேன் (என்னடா தீடீர் என பேசுகிறேன் என்கிறார்கள் நாம் சும்மா பார்த்ததோட சரியே அப்படியே வேகமாக போய் வேலை இருக்கிறது என்று ஓடிவிடலாமா இல்லை போன் வந்தது போல் பாவலா செய்யலாமா என்ற பல எண்ண ஓட்டங்கள் மனதில்) சரி என்று வஉசி மைதானம் அருகே வண்டியை நிறுத்த அவர்கள் அறிமுகம் ஆகி அவர் தனது நண்பர் எனவும் இருவரும் வங்கியில் பணிபுரிகிறோம் என்றனர்.

என்னிடம் சம்பிரதாய விசாரிப்புக்கு பின் வங்கியில் நாங்க இன்சூரன்ஸ் ஏஜெண்ட் சார் நீங்க எங்களுக்கு ஒரு பாலிசி போடுங்களேன் என்று இருவரும் தங்கள் பங்குக்கு விலாவாரியாக விளக்க ஆரம்பித்தனர் விம் பார் போட்டாக்கூட அப்படி விளக்கமுடியாது அந்த அளவுக்கு விளக்கினர்.

நான் யோசிக்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன் என் மொபைல் நெம்பரை அவளிடம் விட்டு விட்டு, இன்று வரை அவர்கள் கண்ணிலும் சிக்கவில்லை... மொபைலில் கூப்பிடும் போது இப்பவேண்டாங்க என்று சொன்னால்  பரவாயில்லைங்க அடுத்த மாதம் முயற்சி செய்யுங்க என்று கூலாக போனை துண்டிக்கின்றனர்.. மாதம் மாதம் போன் வந்து கொண்டு இருக்கிறது அவர்கள் முயற்சியில் பின்வாங்காமல்...

Saturday, January 4, 2014

நானும் ஆரம்பிச்சிட்டேன் என் அலப்பறையை....

2014யை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிக்குவோம்...

வணக்கமுங்க...

2013 முடிஞ்சு நாலு நாள் ஆச்சு ஆனா பாருங்க ஒரு வாழ்த்து சொல்லி பதிவு போட முடியவில்லை அந்த அளவிற்கு சோம்பேறித்தனம் தலை தூக்கிவிட்டது. இந்த சோம்பேறித்தனம் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு இப்போது வரும் பதிவுகள் குறைந்து விட்டன.

2013ல் நான் சாதித்தது என்னவென்றால் நிறைய முக்கியமாக எனக்கு இருந்த கடனில் பாதியை அடைத்துவிட்டேன் என்பது தான் என் நினைவில் வருகிறது. அடுத்து என் மகனை பள்ளியில் சேர்த்தது. அப்புறம் என் கிறுக்கல்களை புத்தகமாக்கியது என சொல்லிகிட்டே போகலாம்.

2013ல் நான் இழந்ததும் நிறைய முக்கியமாக வலைப்பதிவில் வந்து எழுதுவது மிக குறைந்து போனது ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் தொடர்ந்தது. வலைப்பக்கத்தில் எழுதுவது ஒரு காதல் என்றே சொல்லவேண்டும் நாலு வரி எழுதினால் போதும் முகநூலில், ஆனால் இங்கு அப்படி அல்ல கற்பனை குதிரையை ஓட விட்டு ஒரு கட்டுரை அளவிற்காகவது எழுதவேண்டும் அப்போது தான் முற்றுப்பெறும் ஒரு பதிவு. சோம்பேறித்தனத்தால் எழுதவில்லை என்பது தான் உண்மை எனக்கு நிறைய நேரம் கிடைக்கும் எழுதுவதற்கு என்பது என் நெருங்கியவர்களுக்கு தெரியும்.

அடுத்து 2014ல் சபதம் எல்லாம் நான் எடுக்கவில்லை ஏன்என்றால் என் சோம்பேறித்தனம் என் சபதத்தை குலைத்துவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் முயற்சி செய்யவேண்டும் தினமும் எழுத, தினமும் எழுதுவதால் நம் எழுத்து புதிய பரிணாமம் பெறும் என்பது தான் உண்மை நடக்குமா என்றால் சாத்தியம் குறைவுதான்.

2014யை பொறுத்தவரை எனக்கு மிக முக்கிய வருடம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறேன் என்று நன்றாக தெரிகிறது முக்கியமாக கடன் பிரச்சனை மே மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என தீயாக வேலை செய்கிறேன்.

அடுத்து மனஅமைதிக்காக நிறைய படிக்கவேண்டும், நிறைய எழுதவேண்டும் என்றும் தீயாக வேலை செய்யனும், தினமும் எழுத ஆரம்பித்தாலே மனம் பூரண அமைதிகிட்டும் என்று என் குரு இன்று தான் சொன்னார்.

சரிங்க எழுதியே ஆகனும் என்று என்னை கட்டாயப்படுத்தி உட்கார்ந்து எழுதினேன் இந்த மொக்கை பதிவை..

இனி அடிக்கடி வரும் எனது சீரிய மொக்கை என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்...

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன் @ சதீஸ் சங்கவி...






Sunday, December 1, 2013

சிறுகதை எழுதுங்க... பரிசை அள்ளுங்க...


வெட்டி ப்ளாக்கர்ஸ் என்ற பெயரில் வெட்டியாக அரட்டை அடித்துக்கொண்டு இருந்த எங்கள் வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்தும் அற்புதமான அதே சமயம் திறமை உள்ளவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து அதை பல பிரபலங்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணமாக வெட்டிப்ளாக்கர்ஸ் நடத்தும் சிறுகதை போட்டி... இந்த போட்டியில் கலந்து கொண்டு அற்புதமான சிறுகதை எழுதுங்கள்.. பரிசுகளையும், புகழையும் அள்ளுங்கள்.. இதில் வெற்றி பெறும் சிறுகதையை குறும்படமாக எடுக்கவும் வெட்டிப்ளாக்கர்ஸ் அணி தயாராகிக்கொண்டு இருக்கின்றது...

வாருங்கள் உங்கள் கற்பனையை கதையாக்குங்கள்., பரிசுகளை அள்ளுங்கள்...


பரிசுத் தொகை
முதல் பரிசு ரூ 5000
இரண்டாம் பரிசு ரூ 2500
மூன்றாம் பரிசு ரூ 1500
சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு
விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)
2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.
3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்
4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.
6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.
கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி, உங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்
கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி (சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்
இரண்டாம் சுற்று நடுவர்கள்
பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
மூன்றாம் சுற்று நடுவர்கள்
வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக....