Monday, January 18, 2010

நடிகர் சூர்யாவின் அகரம் & விதை


இந்த பொங்கல் விடுமுறையில் நான் மிகவும் ரசித்து பார்த்த என்னை கண்கலங்க வைத்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விஜய் டிவியில் பொங்கலன்று காலை ஒளிபரப்பாகிய சூர்யாவின் ஒரு கோடி ஒரு தொடக்கம் நிகழ்ச்சி.
நான் படிக்கும் காலத்தில் 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் இல்லை. தோராயமாக 65 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் தான் ஆனால் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்த எனக்கு மேலே என்ன படிக்கலாம் என்று சொல்ல அப்பாவிற்கு நண்பரோ அல்லது ஊரில் நன்கு படித்த நண்பர்களோ யாரும் எனக்கும் இல்லை அப்பாவிற்கும் இல்லை. பக்கத்து ஊரில் இருக்கும் படித்தவர்கள் வெளியில் வேலை செய்கிறார்கள் நாம் எங்கே தேடி செல்வது. அந்த கால கட்டங்களில் நாம் இந்தப் பாடம் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் என்று தெரியவில்லை எனக்கு தெரிந்ததெல்லாம் கல்லூரிக்குச் செல்லவேண்டும் பேருந்தில் படிக்கட்டில் செல்லவேண்டும் இது தான்.
பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் போது தான் கணினி படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று கல்லூரி வாசலில் கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று கேட்டால் நீங்க படித்தது வணிகவியல் நீங்க எல்லாம் கணினி படிப்பிற்கு ஏற்றவர்கள் இல்லை. சரி என்ன செய்வது எனது அன்றைய நிலை கல்லூரி செல்ல வேண்டும் எதாவது படிக்க வேண்டும் சரி இளங்கலை வணிகவியல் தான் கிடைத்தது அதை படித்தேன்.

என்னைப்போல் எங்க கிராமத்து நண்பர்களும் வணிகவியலே படித்தோம் அப்போது தெரியவில்லை என்ன செய்வது என்று. ஆனால் இப்போது 10ம் வகுப்பு முடிக்கும் போது நானும் எனது நண்பர்களும் எங்க கிராமத்து எங்கள் தம்பிகளுக்கெல்லாம் இதை படி இந்த வேலை கிடைக்கும் மற்றும் எந்நதக் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்று இன்று சொல்கிறோம். எங்களுக்குத் தேவை எல்லாம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எங்களால் முடிந்தது எதைப் படிக்கலாம் எங்கு படிக்கலாம், கவுன்சிலிங் போவது எப்படி, அதற்கு எங்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும் அவர்களுக்கு பண உதவி செய்ய இயலாது காரணம் எனது வருமானம் எனது குடும்பத்திற்கே சரியாக உள்ளது.
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பணம் இருக்காது, பணம் இருக்கும் மாணவனுக்கு படிப்பு இருக்காது. நான் 65 சதவீதம் மதிப்பெண்தான் எடுத்தேன் என் நண்பன் 50 சதவீதம் தான் எடுத்தான் அவனது அப்பா 15 ஆயிரம் பணம் கட்டி அவனை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்தார் இன்று அவன் தலைமை ஆசிரியர் நல்ல சம்பளம். இது தான் இன்றைய நிலை.
என்னைப் பொருத்தவரை தானம் நிறைய வகையில் செல்லலாம் ஆனால் வாழ்வில் அடிப்படை வசதி இல்லாத மாணவர்களுக்கு நம்மால் முடிந்த வரை கல்வி கற்க உதவுவது தான் மிகப்பெரிய தானம் என்று சொல்வேன் இதை தான் சூர்யா செய்கிறார்.
பொங்கலன்று இந்நிகழ்ச்சியை பார்கும் போது 1133 மதிப்பெண் எடுத்த மாணவன் படிக்க வசதி இல்லை ஆயிரம் மதிப்பெண்ணிற்கு மேல் படித்த பெண்ணிற்கு உடுத்த துணி இல்லை இப்படி அங்கு இருந்த மாணவர்கள் எல்லாம் சொல்வதைக் கேட்டு எங்க வீட்டில் அனைவருக்கும் கண்கலங்கியது. அப்போது சூர்யா சொன்னார் உங்களுடன் அகரம் இருக்கும் என்று.
சூர்யாவின் தந்தை சிவக்குமார் அகரம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவர்களை தொடர்பு கொண்டு நல்ல மதிப்பபெண் உள்ளவர்களை மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள் அற்புதமான விசயம் நிச்சயம் 1 கோடி பேரில் ஒருத்தருக்குத்தான் இந்த மனசு வரும். இன்று தான் அவர்களது வலைத்தளத்தைப் பார்த்தேன். சூர்யா விதை என்று புதிய அமைப்பைத் தொடங்கி தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்ற இப்பழமொழிக்கு ஏற்ப சூர்யா தமக்கு நெருங்கிய 10 பேரைக் கொண்டு ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் போட்டு 1 கோடி ரூபாய் மூலதனமாகக் கொண்டு 100 பேரை தேர்ந்தெடுத்து வரும் ஜீன் மாதம் முதல் படிக்க வைக்கிறோம் என்றார்.
அதே நிகழ்ச்சியில் எல்லோரிடமும் காசோலை வாங்கி இது உங்கள் பணம் நீங்க நல்லா மதிப்பெண் வாங்குங்க படிக்க வைக்க நாங்கள் இருக்கின்றோம் என்றார். சூர்யாவிற்கும் அவரது இந்த கல்விப் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மனது நெகிழ்ந்தது எனக்கு மட்டுமல்ல என் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இந்நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்து நான் இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது நல்ல மதிப்பெண் எடுத்தால் அகரம் என்று நடிகர் சூர்யா நடத்தி வருகிறார் நீ மதிப்பெண் எடு அவரை தொடர்பு கொள்ள அவரது வலைத்தளத்தில் முகவரி கொடுத்து உள்ளார் என கூறிவருகிறேன் வலையுலக சகோதர, சகோதரிகளே நீங்களும் இவ்வலைத்தளத்தை பாருங்கள் http://agaram.in உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவனை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.
என்னிடம் ஏழை மாணவர்களை படிக்க வைக்க பணம் இல்லை ஆனால் அவர்களுக்கு அகரம் போல் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன் இதற்காக எனது நண்பர்கள் மூலம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தகுதி உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு என்னாலும் எனது நண்பர்களாளும் முயன்ற உதவிகளை செய்யலாம் என்று இருக்கிறேன் வருகிற மே மாதத்திற்குள் அமைப்பை பலப்படுத்த என்னி இருக்கிறேன்.
வலையுலக நண்பர்களே உங்கள் அனைவரையும் இவ்வமைப்பிற்கு வரவேற்கிறேன். நீங்களும் இவ் அமைப்பில் இணைந்து உங்கள் ஊரில் உள்ள ஏழை மாணவனின் கல்வி கணவை நனவாக்க வாருங்கள் என உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இவ் அமைப்பிற்கான பெயர், இந்த அமைப்பு என்ன என்ன செய்ய வேண்டும், அமைப்பை எவ்வாறு தொடங்க வேண்டும், எப்படி பதிவு செய்ய வேண்டும் என என் அரிமா சங்க நண்பரை கேட்டு உள்ளேன் நீங்களும் உங்கள் அறிவுரைகளை கூறுமாறு வேண்டுகிறேன். அடுத்த மாத தொடக்கத்தில் இவ் அமைப்பிற்கான முழுப்பதிவை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன். வலையுலக நண்பர்களே உங்கள் அறிவுரையை கூறுங்கள் நீங்களும் வாருங்கள் நாம் ஒன்று பட்டால் உண்டு ஒரு ஏழைமாணவனக்கு கல்வி.

Tuesday, January 12, 2010

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்


தமிழனின் பாரம்பரியமிக்க திருவிழா தான் பொங்கல் திருவிழா. இத் திருவிழா சங்க காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளன்று போகிப்பண்டிகையாகவும், தை முதல் நாள் தான் தமிழனின் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள், அடுத்த நாள் உழவர் திருநாள், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடுவர்.
பொங்கல் :
முன் காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் எவ்வாறு வைப்பது :
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மாட்டுப்பொங்கல்:
தைப் பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

காணும் பொங்கல் :
என்பது  பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
இப்பொங்கல் திருநாளை கொண்டாட நான் எனது கிராமத்திற்குச் செல்கிறேன் மீண்டும் உங்களை எல்லாம் 18ம் தேதி சந்திக்கிறேன்..
எனது  சகோதர, சகோதரிகளாகிய உங்களுக்கும் 
உங்கள் குடும்பத்தாருக்கும் 
என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!

Sunday, January 10, 2010

போகிப்பண்டிகை - பழையன கழிதலும் புதியன புகுதலும்


பழையன கழிதலும் புதியன புகுதலும் இது தான் போகிப்பண்டிகை என்று அனைவரும் சொல்லும் வாசகம். கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோசம் தான் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய விரிப்பு, பெட்சீட், தலையானை மற்றும் இதர பொருட்களை தீ இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நான் சிறியவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்கள் எல்லாம் கும்மியடித்து, கும்மிப்பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்வர். இப்ப எல்லாம்  அதைப்பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு.

இப்பண்டிகை எப்பவுமே தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளை துன்பங்களைத் துடைக்கும் நாளாக போகிப்பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம். துன்பம், வறுமை, மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கலைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பண்டிகை இது பண்டைய நாட்களில் மழையைக் கொடுத்து பயிர்களை செழிக்க வைக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர விழாவாக போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சொர்க்க போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என கூறியதை கேள்விப்பட்டது உண்டு.
போகிப்பண்டினை அன்று கிராமங்களில் அனைத்து வீட்டிலும் காப்பு கட்டுவார்கள், காப்பு கட்டுவது என்பது அந்த ஆண்டின் இறுதி நாளை கழிவடை நாளாக கருதி அந்த நாளோடு அனைத்து கெட்டவைகளும் அழியட்டும் என்று காப்பு கட்டுவர். வேப்பந்தலை, ஆவாரம் பூ, பூலப் பூ இது மூன்றையும் சேர்த்து கட்டு வைப்பதற்கு காப்பு கட்டு என்று பெயர்.


இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

Tuesday, January 5, 2010

தலை வாழை இலை


தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.



தலை வாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு அன்புடனும் கிராமத்து மண்வாசனையுடனும் கூடிய விருந்துக்கு ஏங்காதவர்கள் உண்டா...? இல்லை என்பது என் கருத்துநம்ம விருந்தாளிகளுக்கு வாழை இலையில் குறிப்பாக தலை வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. எங்களது ஊரில் விருந்துக்கு சென்றால் அதுவும் சைவ விருந்து என்றால் முதலில் தலை வாழை இலையில் தண்ணீர் இட்டு பின்பு இலை நிறைய உணவுகளை வைப்பார்கள் அதில சாம்பார் சாப்பிடும் அதற்கு அடுத்து புளிக்குழம்போ அல்லது மோர்குழும்பு இருக்கும் இதன் சுவைகளை விட அடுத்து ரசத்தில் சாப்பிடும் சுவை எப்படிச் சொல்வது அவ்வளவு சுவையாக இருக்கும். நான் இலையில் ரசம் சாப்பிடுவதற்கு அடிமை என சந்தோசமாக கூறுவேன். அடுத்து தயிர் இதற்கு அப்புறம் பாயசத்தை இலையில் ஊற்றி குடிப்பதற்கு என எங்க ஏரியாவில் ஒரு கூட்டமே இருக்கு. என்னைப் போல் எங்க ஊர் நண்பர்களுக்கு இலையில் சாப்பிடுவது தான் பிடிக்கும்  ஏன் என்றால் அப்ப தான் நிறை சாப்பாடு வைப்பார்கள். அதுவும் அசைவ விருந்து என்றால் இலை நிறைய மட்டன், சிக்கன் ஆக இருக்கும். மீன் குழம்பை இலையில் சாப்பிடும் சவையே தனி.

வாழை இலையின் பயன்கள்:
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. என்ன நண்பர்களே வாழை இலையில் சாப்பிடக்கிளம்பிட்டிங்களா.......?

Monday, January 4, 2010

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓர் சுற்றுலாத்தலம்

மூன்று நாட்கள் விடுமுறை வியாழன் இரவு மாமா வீட்டிற்கு சென்று அங்கு அக்கா குழந்தைகளுடன் இந்த வருடம் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினேன் முதன் முறையாக குடும்பத்துடன் புத்தாண்டை (வேறு எதுவும் சாப்பிடமுடியாமல்) கொண்டாடினேன். அடுத்த நாள் காலை புத்தாடை அணிந்து (மாமா வாங்கிக் கொடுத்தது தான்) புகழ் பெற்ற அந்தியூர் பத்ராகாளியம்மன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு குடும்பத்துடன் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது குடும்ப நண்பர் மதன் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது மாலை வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லலாமா? என்றார் மாலை வேலைகளில் யானை தண்ணீர் அருந்த வரும் அனைவரும் போகலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. மதிய உணவிற்குப்பின் நான் வருகிறேன் வரவில்லை என்று சின்ன சின்ன சண்டையுடன் குடும்பம்ன சண்டை இருக்குமில்ல) ஒரு வழியாக புறப்பட்டோம். மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு வழி எங்கும் இயற்கையை ரசித்துக் கொண்டு சென்றோம். இந்த வரட்டுப்பள்ளம் அனைதான் வீரப்பன் இருக்கும் போது குளிக்க வருவான் என்று ஒரு பேச்சு உண்டு. அதனால் இங்கு அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அது இப்போதும் இருக்கிறது.

அந்தியூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்
மேற்கு தொடர்ச்சி மலை எல்லை ஆரம்பம்

காட்டுக்குள் சென்றவுடன் வனத்துறையினரின் செக்போஸ்ட்


மலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளான பர்கூர் மற்றும் கர்நாடக மாநில ஊர்கலான கர்கேகண்டி,கொள்ளேகால், மைசூர் செல்லும் பாதை இது.


வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லும் காட்டுவழிப்பாதை


வரட்டுப்பள்ளம் அணையின் முகப்பு பகுதி

 
வரட்டுப்பள்ளம் அணையின் மேல் பகுதி
 
 வரட்டுப்பள்ளம் அணையில் தண்ணீர்
 
 கடல் போல் காட்சி அளிக்கும் தண்ணீர்

 
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அணை

 
அணையின் உட்புறத்தோற்றம்
 
விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர்

வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு திறக்கப்பட்டது. இயற்கையான இடத்தில் சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், நல்ல குளிர் என அழகாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கு இது அடுத்த சுற்றுலாமையமாகும் யானை,காட்டெறுமை, மான், மயில், கரடி, போன்ற காட்டில் வாழும் விலங்குகள் தண்ணீர் அருந்த வருவதை இயற்கையாக பார்க்க முடியும். இதை அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் திரும்பும் போது 6 மணி ஆகிவிட்டது. இங்கு யாரும் வர மாட்டார்கள் என எண்ணித்தான் நாங்கள் தயக்கத்துடன் சென்றோம் ஆனால் 200பேருக்கு மேல் இங்கு இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தனர். செலவே இல்லாமல் சுற்றுலா சென்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம்...