Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Tuesday, January 12, 2010

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்


தமிழனின் பாரம்பரியமிக்க திருவிழா தான் பொங்கல் திருவிழா. இத் திருவிழா சங்க காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளன்று போகிப்பண்டிகையாகவும், தை முதல் நாள் தான் தமிழனின் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள், அடுத்த நாள் உழவர் திருநாள், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடுவர்.
பொங்கல் :
முன் காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் எவ்வாறு வைப்பது :
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மாட்டுப்பொங்கல்:
தைப் பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

காணும் பொங்கல் :
என்பது  பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
இப்பொங்கல் திருநாளை கொண்டாட நான் எனது கிராமத்திற்குச் செல்கிறேன் மீண்டும் உங்களை எல்லாம் 18ம் தேதி சந்திக்கிறேன்..
எனது  சகோதர, சகோதரிகளாகிய உங்களுக்கும் 
உங்கள் குடும்பத்தாருக்கும் 
என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!

Sunday, January 10, 2010

போகிப்பண்டிகை - பழையன கழிதலும் புதியன புகுதலும்


பழையன கழிதலும் புதியன புகுதலும் இது தான் போகிப்பண்டிகை என்று அனைவரும் சொல்லும் வாசகம். கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோசம் தான் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய விரிப்பு, பெட்சீட், தலையானை மற்றும் இதர பொருட்களை தீ இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நான் சிறியவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்கள் எல்லாம் கும்மியடித்து, கும்மிப்பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்வர். இப்ப எல்லாம்  அதைப்பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு.

இப்பண்டிகை எப்பவுமே தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளை துன்பங்களைத் துடைக்கும் நாளாக போகிப்பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம். துன்பம், வறுமை, மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கலைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பண்டிகை இது பண்டைய நாட்களில் மழையைக் கொடுத்து பயிர்களை செழிக்க வைக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர விழாவாக போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சொர்க்க போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என கூறியதை கேள்விப்பட்டது உண்டு.
போகிப்பண்டினை அன்று கிராமங்களில் அனைத்து வீட்டிலும் காப்பு கட்டுவார்கள், காப்பு கட்டுவது என்பது அந்த ஆண்டின் இறுதி நாளை கழிவடை நாளாக கருதி அந்த நாளோடு அனைத்து கெட்டவைகளும் அழியட்டும் என்று காப்பு கட்டுவர். வேப்பந்தலை, ஆவாரம் பூ, பூலப் பூ இது மூன்றையும் சேர்த்து கட்டு வைப்பதற்கு காப்பு கட்டு என்று பெயர்.


இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.