Tuesday, May 13, 2014

ஊர்வலம்...


பவானிக்கு சென்று கொண்டு இருக்கும் போது வழியில் சரியான கூட்டம், என்னடா இது, இத்தனை கூட்டம் என்று பயம் வந்து விட்டது, பெரிய விபத்தாக இருக்குமோ? இல்லை, எதாவது கட்சி கூட்டமாக இருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது, தேர்தல் முடிவு வந்த பின் தான் அதுவும் நடக்கும். அநேகமாக விபத்தாகத்தான் இருக்கும், இவ்வளவு கூட்டம் இருக்குது, எத்தனை உசிரு போச்சோ! என்று மனம் வருந்தி வண்டியை எறும்பை விட மெதுவாக ஊர்ந்து வரும் படி இயக்கினேன்.
தீடீர் என ஒரு பயம் போலீஸ்காரங்க செக் செய்கிறார்களோ? என்ற பயம், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என் நான்கு சக்கர வாகனத்தில் எல்லாம் பக்காவாக இருக்கிறது ஆனால் வண்டியை ஓட்டும் நான் தான் பக்காவாக இல்லை, காலையில 11 மணியில் இருந்து குடிச்ச மார்ப்பிஸ் இப்ப என்னைக்காட்டிக் கொடுத்திட்டால், எப்படியும் 1000 ரூபாய் பைன் போடுவாங்களே என்ற பயம் தான் காரணம். காசைக்கூட கட்டி விடலாம் ஆனால் உள்ளுர்காரன் யாராவது பார்த்து விட்டால் மான மரியாதை எல்லாம் போய் விடுமே என்ற பயந்தான் மிக அதிகம்.

ஒரு பெரியவரிடம் கேட்டேன் என்னங்க எதவாது அடிபட்டுருச்சா? அதற்கு அவர் கண்கலங்க தலையை மட்டும் இல்லை என்று ஆட்டினார். அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் போக அவரை அழைத்ததும் எப்பவும் என்னைக் கண்டால் நன்றாக பேசும் அவர், என்னடா என்றார், எண்ணன்னே கூட்டம் என்றோன், அட ஊரில் இருந்த நல்லவர்களில் மிக இளவயது நல்லவன் ஒருவன் போய்ட்டாண்டா என்று கதறினார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சரி என்றேன். கூட்டத்தைப்பாருடா என்றார் எனக்கு தெரிஞ்சு தலைவனாக, கட்சி பிரபலமாக இல்லாத ஒருவருக்கு இத்தனை கூட்டம் என்பது மிக ஆச்சர்யம் தான், சுடுகாட்டுக்கு போகும் வரை கூட்டம், நிச்சயம் எல்லோர் மனதிலும் இருப்பவருக்குத்தான் இத்தனை கூட்டம் வரும், அந்த அளவிற்கு கூட்டம், போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்யவே கிட்டத்தட்ட அரைமணிநேரம் ஆனது அந்த அளவிற்கு கூட்டம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

பொதுவாக நமது ஊரில் ஊர்வலம் என்றால் அதற்காக கூடும் கூட்டங்களை விட கூட்டப்படும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும், கோயில் திருவிழா ஊர்வலங்களில் வருபவர்கள் பாதி பேர் வேண்டுதலுக்காகவும், இன்னும் பாதி பேர் சைட் அடிப்பதற்காகவும் வருபவர்கள் தான் அதிகம், ஒருவர் ஊர்வலத்துக்கு வருகிறார் என்றால் நிச்சயம் ஆதாயம் இருக்கும், அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆதாயம் இல்லாமல் ஊர்வலத்துக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அது சவ ஊர்வலம் தான். பிறக்கும் போது தொப்புள் கொடியோடு பிறந்து வளருபவன் பின்னாளில் எதை சம்பாரிச்சாலும் போகும் போது கொண்டு போவது ஒன்றும் இல்லை. அவன் அணிந்த அருணாக்கொடி கூட அத்துகிட்டு தான் எரிப்பர். அவ்வளவு நல்ல சமூகம் நம்முடிடையது. ஆனால் சுடுகாட்டிற்கு போகும் போது அவனிற்கு பின்னால் வரும் கூட்டம் தான் அவனின் பேர் சொல்லும் சொத்து என்றால் மிகையாகது.
இன்னும் கிராமத்தில் சொல்வார்கள் நல்லதுக்கு போகவில்லை என்றாலும் கெட்டதற்கு நிச்சயம் போக வேண்டும் என்பார்கள். பங்காளி சண்டையால் பல வருடம் பிரிந்து இருப்பவர்கள் கூட திருமணத்தில் சேருவதை விட, இறப்புக்கு சேர்ந்தவர்கள் தான் அதிகம். என் அப்பத்தா அப்படித்தான் எனக்கு ஞபாகம் தெரிந்ததில் இருந்து அதனுடன் நான் பேசியது இல்லை, எங்கள் வீட்டில் சண்டை போட்டுகிட்டு கோவிச்சிகிட்டு போய் விட்டது என்பார்கள், அது இறக்கும் தருவாயில் ஒரு வார காலம் நாங்கள் தான் கூட இருந்தோம், ரொம்ப வருத்தப்பட்டது இத்தனை நாள் உன்னை கொஞ்ச முடியவில்லை என்று, சாவுக்கு ஒன்று சேர்ந்தால் தான் என் கட்டை வேகும் என்று அடிக்கடி சொல்லும் என்று பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சொல்வாங்க.
ஒருவன் இருக்கும் போது இருக்கும் மரியாதையை விட அவன் சாகும் போது அவனுக்கு கிடைக்கும் மரியாதையில் தான் அவன் வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்...

4 comments:

  1. ஒருவன் இருக்கும் போது இருக்கும் மரியாதையை விட அவன் சாகும் போது அவனுக்கு கிடைக்கும் மரியாதையில் தான் அவன் வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்...
    >>
    நிஜம்தான்

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள்!

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் உண்மை தான்

    ReplyDelete
  4. உண்மையான வார்த்தைகள்......

    ReplyDelete