Tuesday, May 6, 2014

திருவிழா கிடாக்கறியும்...


நமது கலாச்சாரத்தின் அடையாளம் தான் திருவிழா. நம் மண்ணின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் இந்த திருவிழாவிற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. கிராமங்களில் தான் கலாச்சார பின்னணியில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு கொண்டாடுவர் திருவிழாக்களை.

ஒவ்வொரு ஊரிற்கும் மண் மாறுபடுவதை போல திருவிழாக்களும் மாறுபடும், அந்த ஊரின் பெருமைகளையும், அந்த மண்ணின் மரியாதையையும் இந்த திருவிழாக்கள் தெரியப்படுத்தும். குறிப்பாக தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மாரியம்மன் கோயில் தான் அதிக அளவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஊர் மாரியம்மனுக்கும் ஒரு சிறப்பு உண்டு அந்த வகையில் திருவிழாக்கள் அமைந்திருக்கும், எங்கள் ஈரோடு பகுதியில் நிறைய மாரியம்மன் கோயில்கள் உண்டு, இங்கும் நிறைய வகையில் திருவிழாக்களை கொண்டாடுவர். எங்கள் ஊரைப்பொருத்தவரை திருவிழாவையும், கிடா வெட்டையும் பிரிக்கமுடியாது. அந்த அளவிற்கு திருவிழாவோடு இணைந்தது கிடா.

எங்கள் ஊரைப்பொருத்தவரை சித்திரை மாதம் தான் திருவிழா. மாரியம்மனுக்கு கம்பம் நட்டு பதினைந்து நாட்களுக்கு கொண்டாடுவோம் திருவிழாவை. எப்போதும் அக்னி நட்சத்திரத்தில் தான் எங்கள் திருவிழா வருவதால் வெய்யில் வாட்டி வதைக்கும். கம்பம் நட்டு 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பூஜை செய்வார்கள். 

இந்த திருவிழாக்களில் பகுத்தறிவிற்கு எதிராக நிறைய சம்பிரதாயங்கள் இருக்கும் நாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை காரணம் மக்கள் அதை விரும்புகிறார்கள், நாம் ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என விட்டுவிடவேண்டும்.

நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், வாட்டர் தீம் பார்க் என நிறைய இருக்கின்றன, உல்லாசமாக பொழுதை போக்குவதற்கு. கிராமத்தில் அப்படி இல்லை கிணறும் அதை ஒட்டி அமைந்துள்ள தோட்டம் இது தான் பொழுது போக்கு. களைப்பில் இருப்பவர்களை சந்தோசப்படுத்தத்தான் முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்டது திருவிழா. அப்போது எல்லாம் விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்றால் அந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகிறேன், இந்த ஊர் நோம்பியில் வாங்கித்தருகின்றேன் என்பது எனக்கெல்லாம் வேத வாக்கு. அதை மனதில் வைத்திருந்து சொல்லி வாங்கச்சொல்லும் போது தான் குடும்ப வறுமை தெரியும் கால கட்டமிது.

எனக்கு தெரிய எங்க வீட்டு இட்லி குண்டா எல்லாம் அந்தியூர் திருவிழாவில் வாங்கியது தான். அந்த அளவிற்கு திருவிழாவோடு ஒன்றிப்போனவர்கள் நாங்கள். 

ஆட்டம், பாட்டம் மட்டுமல்ல திருவிழா வெய்யில் காலங்களில் அனைவரும் சுத்தமாக இருக்கவேண்டும். ஊரில் கம்பம் நட்டு விட்டால் அனைவரும் இரு வேளை குளித்து கோயிலுக்கு செல்வர், அடுத்து அனைவரும் மஞ்சளை கம்பத்துக்கு பூசி தண்ணீர் ஊற்றுவதால் அது கிருமியை அண்ட விடாமல் தடுக்கும். இது போன்ற நிறைய அறிவியில் காரணங்களையும் சொல்லுவர்.



சரி எதுக்குடா இவன் இவ்வளவு திருவிழா புராணம் பாடுகிறான் என்று நினைக்கின்றீர்களா, ஆம் எங்க ஊரில் திருவிழா, நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை நான், திருவிழாவை கொண்டாடுவதற்காகவே விடுமுறையை சேமித்து ஒட்டு மொத்தமாக எடுக்க காத்திருக்கிறேன். இன்று மாலை ஊருக்கு கிளம்பி இன்று இரவு முழுவதும் ஆடடம் பாட்டத்துடன் நானும் கலந்து கொண்டு கும்மியடிக்போகிறேன்.. கரகாட்டாம், நையாண்டிமேளம், சிங்காரி நடனம், நடன நிகழ்ச்சி அப்படியே கிடாக்கறி விருந்தும், கூட்டாஞ்சோறு விருந்தும் இருக்கு இதை எலலாம் முடிச்சிட்டு வந்து அனுபவங்களோடு உங்களை சந்திக்கிறேன்..

3 comments:

  1. திருவிழா என்றாலே அதுவும் ஊர்த்திருவிழா என்றாலே கொண்டாட்டம்தான்! விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  2. கொண்டாட்டங்கள் தான் வாழ்க்கை...கொண்டாடுங்கள்...

    ReplyDelete
  3. திருவிழாக் கொண்டாட்டங்கள் - வாழ்த்துகள் சங்கவி. Enjoy!

    ReplyDelete