Monday, September 24, 2012

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள் .... 02


ஒப்பாரி பாடல்கள் ஏறக்குறைய இன்று அழிந்து விட்டன.. கால ஓட்டத்தில் மறைவதில் ஆச்சர்யமில்லை. இப்பாடல்களை பாடுவதற்கு ஆட்கள் இல்லை என்றாலும் பாடல்களை பதிவு செய்வதன் மூலம் மீண்டும் படிக்க இயலும்...

எங்க வீட்டு பெரியவர் இறந்த போது அவரைச் சுற்றி பெண்கள் எல்லாம் நின்று ஒரு பாடல் பாடினர் அது சொக்க பாடல் என்றும் அந்த பாடலை பாடினால் தான் அந்த உடல் சொர்க்கத்து போய் சேரும் என்று சொன்னார்கள்  அப்போது அந்த பாடலை பாடிய பெரிசுகளை நிறைய முறை சந்தித்தும் அவர்கள் பாட மறுத்து விட்டார்கள்.. அதை இப்ப எல்லாம் சொல்லக்கூடாது இறந்தவர் முன் தான் சொல்லனும் என்றனர். அந்த பாடலை விரைவில் பதிவு செய்ய முயற்சிசெய்து கொண்டு இருக்கேன்...

என்னுடன் என் மனைவியின் பாட்டி தங்கி உள்ளார் அவர் அந்த காலத்தில் நாற்று நடும்போது தான் அப்போது அங்கு வரும் முதிய பெண்கள் எல்லாம் இந்த கிராமிய பாடலை சொல்லிக்கொடுப்பார்களாம். அப்போது தான் இந்த ஒப்பாரி பாடல்களும் வருமாம்.. கிராமத்தில் வீட்டில் உள்ள பெண்களை விட வயல் வேலைக்கு செல்லும் பெண்களுக்குத்தான் கும்மிப்பாட்டு, ஒப்பாரி போன்ற பாடல்கள் தெரியுமாம்..

இன்று எல்லாம் மிஷினிலேயே நடைபெறுவதால் இவர்களின் கூட்டமும் குறைந்துவிட்டது பாட்டுக்களும் குறைந்துவிட்டது...


சமீபத்தில் கேட்ட ஒப்பாரி பாடல்கள்...

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

..........................................

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே     
தானநன்னே   தந்தநானே

வானம் கருத்திருக்கு 
வட்டநிலா வாடிருக்கு 
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

 சிங்க தெருவெல்லாம் 
 சிந்தி அழுகிறேனே 
சிங்கார சிங்கபூர 
கண்ணீரில் கழுவுறேனே 

வட்டிகடன் வாங்கி 
வாக்கப்பட்டு போறவள 
வாசலோடு நிக்கவச்சி 
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி 
வண்டியில சாமான்வாங்கி 
வந்தவக வாயடக்க 
வரிசை கொடுத்தேன்ய்யா 

பக்கவாதம் வந்து 
பாலகனா போனவரே 
தொண்டைகுழி  விக்கி 
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு 
பொறுக்கலையா உன்னுசுரு 
புள்ளகொல்லி விழாம 
போனதய்யா உன்னுசுரு  ....

..........................................

 கிருஷ்ண மூர்த்தி என்பவர் எழுதிய இந்த ஒப்பாரி பாடல் மிக கவர்ந்தது....

கண் திறந்து பாரடா மகனே..!
பத்து மாதம் சுமந்து பெற்றேன்..
ஈ கொசு அண்டாமல்
இமைபோல் காத்தேன்..
ஊரே பழித்தாலும்
உனக்காய் வாழ்ந்தேன்..
யாரும் இனி எனக்கில்லை..
மாதாவை தனியே விட்டு
மாய்ந்தாயே மகனே??

சோறூட்டிய கைகளில் வாய்க்கரிசி
பாலூட்டிய மார்பினில் செங்குருதி..
இந்த தள்ளாத வயதினில்,
தவிக்க விட்டுச் சென்றாயே..
கண் திறந்து பாரடா மகனே..!
இது தாயில் அலறல்..
*
காடு மனையெல்லாம் வித்தேன்
கடன் வாங்கி படிக்க வைச்சேன்..
சேம நிதி கூட எடுத்து- உன்
திருமணத்தை நடத்தி வைச்சேன்..
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
பட்ட கடனை எப்படி அடைப்பேன்!
ஐயா.. ராசா..!
இப்படி திடுதிப்புன்னு செத்துப்போனா..
நான்
பட்ட கடனை எப்படி அடைப்பேன்?
பதில் சொல்லிப் போ மகனே..!!
இது தந்தையின் புலம்பல்..
*
பெத்தவங்க,
கூடப் பொறந்தவங்க..
சாதி சனம் எல்லாரையும்
மறந்து வந்தேன்..
நீ ஒருத்தனே கதியென்று
உன்னோடு பறந்து வந்தேன்..!

வயித்தில வளரும் கரு
ஆணா பெண்ணா
அறியுமுன்னே..
என்னை நட்டாற்றில்
விட்டுச் சென்றாயே..!

நரம்பில்லாத நாக்கு
என் ராசியை குறை சொல்ல
தாலியை பறித்துச் சென்றாயே!

ஏழு ஜன்மமும் கூட வருவேன்னு
என் மேல சத்தியம் செய்த கை
குப்புறக் கிடக்குதிங்கே
ஐயோ..!
என் குடிகெட்டு போயிருச்சே!

வாக்குறுதி தந்த வாயில
வாக்கரிசி போட வைச்சு
வாழ்வை தேடி வந்த எனக்கு
விதவைச் சாயம் பூசியதென்ன?

ஐயோ..

இந்த கேள்விக்கும் உன் பதில்

மௌனம் தானா??!
இது மனைவியில் கதறல்..

*
இறந்த சடலத்திடம்
எத்தனைக் கேள்விகள்..?
எத்தனை குற்றச்சாட்டுகள்..??

ஆவியாகிய ஆன்மாவிடம்
எத்தனை புலம்பல்கள்?!
எத்தனை பழிச்சொற்கள்..?!

சொர்க்கம் சேர வேண்டி
ஒரு பக்கம்
சாங்கியம் நடக்கிறது..
பதில் தர வேண்டி
மறு பக்கம்
ஒப்பாரி ஒலிக்கிறது..!
சுயநல
ஒப்பாரி ஒலிக்கிறது..!!
*
இறைவா..
உன்னிடம் ஒரு வேண்டுகோள்…
இங்கு யாரும்
பிரேதத்தைப் பார்த்து
பெருமை பாடுவதில்லை..!

சுயநல மனிதர்கள்
செத்த பிறகும் ஆன்மாவை
விட்டு வைப்பதாயில்லை!


இங்கே,
ஒப்பாரி பட்டியலில்
ஆறுதல் வார்த்தையை விட
ஆத்திரக் கேள்விகளே அதிகம்..!


ஆன்மாவின் வழியனுப்பலை விட
அவரவர்
வயிற்றெரிச்சலே அதிகம்..!!

அதனால் இறைவா..
உயிர் பிரியும்போது மட்டும்
ஆன்மாக்களை
கொஞ்சம் செவிடாக்கி விடு..! 

..........................................


முத்து பதித்த முகம்
முதலிமார் மதித்த முகம்
தங்கம் பதித்த முகம்
தரணிமார் மதித்த முகம்...

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ என
சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

இந்த சொர்க்க பாடல்களை இன்னும் நிறைய பெரியவர்களிடம் இருந்து சேர்க்க வேண்டும்.. முடிந்தவரை சேர்ப்போம்...

இதற்கு முன் நான் எழுதிய ஒப்பாரி பாடல் பதிவு படியுங்கள்......

அழிந்து வரும் ஒப்பாரி பாடல்கள்...

13 comments:

  1. அழிந்துவரும் தமிழர் அடையாளங்கள்...

    ReplyDelete
  2. மாணவர்களிடையே விளிப்புணர்வை கொண்டு வந்தால் மட்டுமே பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,,,

    தொடர்ந்து முயற்சிப்போம்..

    ReplyDelete
  3. அப்போதெல்லாம் மைக் போட்டு பாடும் போது நமக்கும் இறநதவர் குறித்த மரியாதையும், அனுதாபமும் ஏற்படும். ஆனால் இப்போதெல்லாம் இறப்பு வீடுகளில் மரியாதைக்கு வரும் மனிதர்கள் கூடக் குறைந்து விட்டார்கள். விடுமுறை வரும் போது விசாரித்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடுகிறார்கள். சில பாடல்கள் அவரவர் குறைகளை பகிர்தலாகக் கூட அமையும். அதுவும் ஒரு வித மன ஆறுதல் .கேள்விப்பட்ட ஒரு பாடல் வரிகள் முழுமையாகத் தெரியவில்லை
    பந்தலிலே பாவக்காய்
    வரும்போதே பார்த்திட்டேன்
    போகும்போது பறிச்சுக்கலாம் என்பதான குறும்புப் பாடல்

    ReplyDelete
  4. எங்கள் ஊரில் உண்டு... ஆனால் முன்பை விட குறைந்து விட்டதோ உண்மை...

    ReplyDelete
  5. த.ம:3

    திண்டுக்கல் தனபாலனுடைய பாணியை சுட்டுட்டேன்..

    ReplyDelete
  6. மாடு செத்துவிட்டது என்று மகனாக நினைத்து அழும் கிழவியின் ஒப்பாரி பாடல் ஒன்றை நானும் எழுதியிருக்கின்றேன்....! அழிந்து வரும் கிராமிய இலக்கியம் ஒப்பாரி..!

    ReplyDelete
  7. ஏனொ தெரியல "கருங்காலி கட்டைய கரையான் அரித்ததோ"ன்னு ஊரில் வயதான பாட்டி ஒருவர் உடலத்துக்கு முன் பாடிய பாடல் ஞாபகத்திற்கு வருகின்றது..!

    இறந்தவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் ஒப்பாரி பாடும் பெண்களால் அவர் மாஹான் ஆக்கப்படுவார்..!

    ReplyDelete
  8. மச்சி...எளவு வீட்டிற்கு வந்த மாதிரி இருக்கு...ஹி..ஹி..ஹி

    ReplyDelete
  9. என் அம்மம்மா இப்பவும் சின்ன வயசிலேயே காலமான என் மாமாவை நினைத்து ஒப்பாரி சொல்லி அழுவா !

    ReplyDelete
  10. இனிமேல் இவை முற்றாக அழிந்து விடும். இவை எழுதா இலக்கியங்கள்.
    இனி வரும் தலைமுறைக்கு எதுகை மோனையே விக்கலெடுக்கும், இவர்கள் கிராமத்தில் பிறந்தாலும் ஒப்பாரி என்ன? தாலாட்டே வாராது.
    என் இளமைக்காலத்தில் நெஞ்சையுருக்கும் ஒப்பாரிகள் கேட்டுள்ளேன்.அவர்கள் தமிழ்ப் புலமை வியக்கவைக்கும்,,
    பார் மகளே பார் படத்தில் கண்ணதாசன் எழுதிய ''பூச்சூடிப் பார்க்கு முன் போய் விட்டாயே'' எனும் பாடல் ஒப்பாரி வகையே!
    நான் இன்றும் மறக்காத ஒப்பாரி
    ' தன் 10 வயது , அழகும் ,அறிவும் மிக்க பேத்தியை இழந்த பாட்டி சொல்லியழுத '' பட்டிப் பசுவில் பாற்பசு போனதையோ''

    ReplyDelete
  11. ஒப்பாரி ஒரு தனி கவிதை இலக்கியமே.
    வாய் வழியாக வந்தவை இப்போது கவிதைகளாகவும் பாடல்களாகவும் மாறி இருக்கிறது.
    உங்கள் சேகரிப்பு தொடர்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கொய்யாக்கா தொங்குது... போகையில பறிச்சுகலாம்... ஒப்பாரியில் நகைசுவையும் உண்டு.

    ReplyDelete