Tuesday, February 4, 2014

சோத்துக்கடை - டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை..


கோவையில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று பேரூர். கோவையைச்சுற்றிப் பார்ப்பவர்கள் பட்டியலில் நிச்சயம் பேரூர் இருக்கும். இந்த ஊரின் எல்லையிலேயே புரதான நகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகையோடு தான் ஆரம்பிக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவன் ஆலயம். பேரூர் சாந்திலிங்க அடிகளாரின் மடமும், தமிழ்கல்லூரியும் இங்கு அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு.

சுற்றுலாத்தளம் அருகில் நல்ல உணவு விடுதி கிடைப்பது அரிது என்பதும் பேரூர்க்கும் பொறுந்தும். நிச்சயம் காலை வேலை தரிசனத்துக்கு வருபவர்கள் நல்ல உணவகம் இல்லை என்று வருத்தப்படுவர். ஆனால் மாலை வேளையில் அந்த பிரச்சனை இல்லை, கோயிலின் பின்பக்கம், சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது டோபாஸ் ஐயர் மெஸ். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடை இயங்குகிறது.

மாலை 4 மணியில் இருந்து கடை இயங்க ஆரம்பிக்கிறது, கோவையில் கும்பகோணம் டிகிரி காபி ஒரிஜினலாக குடிக்க விரும்புவர்கள் நிச்சயம் இங்கு வந்து குடிக்கலாம், அந்த அளவிற்கு சுவையான காபி இங்கு கிடைக்கும். மிக்சர், முறுக்கு போன்ற பலகாரங்களும் ஐயர் வீட்டு முறைப்படியும், அவர்களின் வீட்டு சுவையிலும் இருக்கும். 7 மணிக்கு மேல் சென்றால் முறுக்கு, மிச்சர் கிடைக்காது. அந்த அளவிற்கு பிரபலம்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கிறது சிற்றுண்டி, இங்கு சாப்பிட 7 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான இடம் மட்டுமே அமைந்திருக்கும், பார்சல் கட்டுவதற்கு மட்டும் 3 பேர் இருக்கின்றனர். இங்கு வந்து ஆர்டர் செய்பவர்கள் மாமி எனக்கு 4 இட்லி, 2 புரோட்டா என்று ஆர்டர் சொல்லிக்கொண்டே இருப்பர். மாமியும் பொறுமையாக அனைவருக்கும், பொட்டலம் கட்டிக்கொடுத்துக் கொண்டு இருப்பார். 9 மணிக்கு மேல் சென்றால் தோசை மட்டுமே கிடைக்கும்.

மாலை வேளைகளில் இட்லி, சேவை, பிரியாணி, உப்புமா, புரோட்டா, தோசை, ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட், நெய் ரோஸ்ட், ராவா தோசை என ஆர்டர்கள் பறக்கும். இங்கு கொடுக்கப்படும் சாம்பாரின் சுவையே சுவைதான். தேங்காய் சட்டினி, காரச்சட்டினி, வெஜ் குருமா என அனைத்தும் வீட்டில் சாப்பிடுவது போலவே சுவையாக இருக்கும்.

நான் கடந்த 4 வருடமாக இந்த கடைக்கு வாடிக்கையார், அதாவது இந்த ஏரியா குடி வந்ததில் இருந்து வாரம் இரு முறை இங்கு பார்சல் வாங்கிடுவேன். இட்லிக்கும் இந்த ஐயர் மெஸ் சாம்பாருக்கும் அப்படியொரு சுவை. நான் இட்லியை இந்த சாம்பாரில் மூழ்கடிச்சு கரைத்து சுவைப்பேன் அப்படி ஒரு சுவை இந்த சாம்பார். எப்பவும் பார்சல் வாங்கிவிட்டு சாம்பார் பாக்கெட் எக்ஸ்ட்ராவாக கேட்டு வாங்காமல் வருவதில்லை இன்று வரை.

ஒரு நாள் வீட்டில் எல்லாரும் ஊருக்கு சென்றாதால் அங்கு சாப்பிடச் சென்றேன். இன்று ஆணியன் ரோஸ்ட் ஸ்பெசல் என்றனர், சரி என்று ஒரு ரோஸ்ட்டை ஆர்டர் செய்தேன், கையில் தட்டோடு சாம்பாரை வலிச்சு நக்கிக்கொண்டே காத்திருந்தேன். முக்கோண வடிவில் வந்த ஆணியன் ரோஸ்ட்டை பிச்சு அவர்கள் கடை சாம்பாரில் முக்கி வாயில் துணித்தேன் அவ்வ்வ்... அப்படியே வழுக்கியது தோசை. அளவான உப்பில், புளிக்காத மாவில் நன்கு எண்ணெய் ஊற்றப்பட்ட ஆணியன் தோசை என்னோடு சண்டையிடாமல் வேகமாக உள் இறங்கியது. ஆணியன், கேரட் துறுவல், முந்திரி, திராட்சை போட்டு சுட்டு இருந்தனர். அன்றில் இருந்து இன்று வரை அந்த கடை ஆணியன் ரோஸ்ட்டுக்கு அடிமை நான்.

நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் அவ்வப்போது சாப்பிடுவேன், புரோட்டாவும் குருமாவும் என் மகனின் பேவரைட். இங்கு பார்சலுக்கு வரும் கூட்டத்தை பார்த்தாலே புரியும் இந்த கடையின் சுவைபற்றி. இந்த ஐயர் மெஸ்  சுகாதாரமாகவும் இருக்கும்.

இந்த மெஸ்சில் விலைப்பட்டியல் நிச்சயம் அதிகமாக இல்லை. வயிறு நிறைய சாப்பிட்டாலும் 60 ரூபாயை தாண்டாது அந்த அளவிற்கு குறைவான விலை, தரமான உணவு நிச்சயம் நம்பி சாப்பிடலாம். எங்கு சாப்பிட்டாலும் அடுத்த நாள் காலை பிரச்னை இன்றி இருக்கவேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருப்போம். நம்பி சாப்பிடலாம் வயிற்றை எந்த பதமும் பார்க்காது என்பது உறுதி.

பெயர்: டோபாஸ் ஐயர் டிபன் சென்டர்

இடம்: பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் வலது பக்கம்.

விலை: 2 இட்லி 10, ஆணியன் ரோஸ்ட் 30, புரோட்டா 10

18 comments:

  1. "ரோஸ்ட்"டுக்கு புகழ் பெற்ற கடை போல...!

    ReplyDelete
    Replies
    1. ரோஸ்ட், இட்லி, சாம்பார் அனைத்தின் சுவையும் அருமைதாங்க..

      Delete
  2. நான் ஒரு ரவா தோசை ரசிகன். நீங்கள் சொல்லும் வர்ணனைகள் சாப்பிடத் தோன்றுகிறது! பேரூர் என்றில்லாமல், போரூர் என்றிருந்தால் நான் சாப்பிட முடியும்! :))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா தேடிப்பாருங்க நிச்சயம் போரூரிலும் இதைப்போல கடை இருக்கும்..

      Delete
  3. அதென்ன "டோபார்" ஐயர்?

    ReplyDelete
  4. ஆனியன் ரோஸ்ட் உடனே சாப்பிட ஆவலை ஏற்படுத்துது..

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூர் வந்தா சொல்லுங்க சாப்பிட்டுவிடுவோம்...

      Delete
  5. அடுத்த முறை எனக்கு கம்பெனி கொடுக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்... வந்ததும் அழையுங்கள்...

      Delete
  6. சுற்றுலா ஸ்தலம்

    காலை வேளை

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி சங்கவி! வாரத்துல ரெண்டு நாள் எடுப்பு சாபாடா!? ரைட்டு! சீக்கிரம் சமைக்கக் கத்துக்கோ!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அக்கா நான் நன்றாக சமைப்பேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க என் கையால ரசம் சாப்பாடு சமைச்சு போடுறேன்..

      Delete
  8. அருமையா ருசிச்சு மட்டுமல்ல ரசிச்சும் எழுதி இருக்கீங்க! நன்றி! ஞாபகம் வெச்சிக்கிறேன்! கோவை பக்கம் வரும்போது உதவும்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வந்தால் அழைக்கவும்...

      Delete
  9. கோவை வந்தால் நீங்க சொன்ன இடமெல்லாம் போயி சாப்புட்டுட்டு வர பத்து நாளாச்சும் ஆகும் போல தெரியுதே ?!

    ReplyDelete
  10. புரதான நகரம் - புராதன நகரம்
    காலை வேலை - காலை வேளை
    வாடிக்கையார் - வாடிக்கையாளர்

    இதைத்தானே சொல்ல வந்தீங்க சங்கவி..... :))) முதல் பதிவின் தாக்கத்தினால் இங்கே இதைக் குறிப்பிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்!

    சிறப்பான ஒரு உணவகம் பற்றிய அறிமுகம் நன்று! தொடரட்டும் உணவக அறிமுகம்.

    ReplyDelete
  11. படிக்கும் போதே பசிக்கிதே... ருசியான பதிவு...

    ReplyDelete
  12. வணக்கம்
    இன்று18.02.2014 வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete