Monday, January 31, 2011

நரம்புத் தளர்ச்சி நீங்க அருகம்புல்

“ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”

இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.

ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.

அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.

அருகம்புல்லின் பயன்கள்

அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

 
மருந்தின் நஞ்சு விலக:

அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும்.

அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.

ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும்.

அருகம்புல் வேர், ஆவாரம்பூ - இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

சிறுநீர்ப்பை பலப்பட:

அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.

அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.

அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

அழகான முகத்திற்கு:

அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.

அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.

ஆகாததே இல்லை...

"ஆகாதது அருகம்புல்லால் தான் ஆகும்" என்று ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழியின் கூற்றுபடி, அருகம்புல்லினால் ஆவது என்ன தெரியுமா?

நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும்.

மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும்.

வயிற்றின் அமிலத் தன்மை குறையும்.

உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும்.

நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும்.

உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.

உடல் வெப்பம் தணியும்.

இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள்.

ஒரே ஒரு "நிபந்தனை" தான்; தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.

22 comments:

  1. அருகம்புல்லில் இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா??...

    ரொம்ப உபயோகமான பதிவு அண்ணா...

    //அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.//

    தெரியாத தகவல்... ஆச்சரியம்...

    :-)

    ReplyDelete
  2. வினாயகருக்கு ஏன் அருகம்புல் புடிக்குதுன்னு இப்பதானே தெரியுது

    ReplyDelete
  3. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..

    ReplyDelete
  4. சில தெரிந்தது...பல தெரியாதது..நன்றி!

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்கள், பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  6. வலைப்பூ அமைப்பில் செய்த மாற்றங்கள் நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள் தரும் நீங்களும் “ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”

    ReplyDelete
  8. ஆமாம்... அருகம்புல் மருத்துவ குணம் நிறைந்தது.
    பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  9. இவ்வளவு பயனுள்ளதுங்கறதாலதான் அது பிள்ளையாருக்கு உகந்ததுன்னு சொல்லி இன்னும் பிரபலப்படுத்தியிருக்காங்க.

    பகிர்வுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete
  10. அருகம்புல் பற்றி சில தகவல்கள் முன்னமே தெரிந்திருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் நிறைய தகவல்களையும் தெரிந்துகொண்டேன்

    பயனுள்ள இயற்கை மருத்துவகத்தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  11. உபயோகமுள்ள பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete
  12. good post sangavi..

    >>>இடுகைத்தலைப்பு:
    நரம்புத் தளர்ச்சி நீங்க அருகம்புல்

    மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

    something wrong

    ReplyDelete
  13. இதை அருகம்புல் என எழுதுவதோ , சொல்வதோ இல்லை. அறுகம்புல் என்பதே சரியான சொல்
    அருகு- என்றால் இல்லாது போதல் எனும் கருத்தைத் தருகிறது."ஆல் போல் தளைத்து; அறுகு போல் வேரூன்றி"

    ReplyDelete
  14. ரொம்ப உபயோகமான பதிவு

    ReplyDelete
  15. மீண்டும் தொடங்கியது பயனுள்ள பதிவுகள்..அரிய தகவல்கள் பல சங்கவி சில மட்டுமே இது வரை அறிந்தது,,,

    ReplyDelete
  16. அண்ணே, தினம் குடிச்சா ஆண்மை போகும்!

    அதையும் சேர்த்துக்கோங்க, சின்ன வெங்காயம் வதக்கியோ, பச்சையாகவோ சாப்பிட்டா அது ஈக்குவல் ஆகும்!

    ReplyDelete
  17. மிக நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  18. தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  19. அருமை. உபயோகமான பதிவு

    ReplyDelete
  20. என் தாத்தா மூலிகைப்புல்ன்னு அரைச்சு என்னமோ பண்ணுவார் பாத்திருக்கேன்.நீங்க சொன்னதெல்லாம் பார்க்க அவர் ஞாபகமும் வந்து போச்சு !

    ReplyDelete
  21. மிக உபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete